உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொ ள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிப்பு வழங்க முடியுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கியூபாவின் ஹவானா நகரில் நேற்று முன்தினம் (15) ஆரம்பமான ‘G 77 + சீனா’ அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸ் தலைமையில் மாநாடு ஆரம்பமானதுடன், மாநாடு தொடங்க முன்னதாக மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து அரச தலைவர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த மாநாட்டை கூட்டியது தொடர்பாக கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸை (Miguel Diaz-Canel Bermudez) பாராட்டி தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பலதரப்பு அமைப்புகளில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கியூபா ஆற்றியுள்ள வரலாற்றுப் பங்கை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “தொற்றுநோய்கள், காலநிலை மாற்றங்கள், உணவு, உரம் மற்றும் வலுசக்தி நெருக்கடி ஆகியன நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று, அந்த நிலைமையை உலகளாவிய கடன் நெருக்கடி மேலும் அதிகரிக்கச் செய்வதுடன், அதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலைமை உலகளாவிய ரீதியில் தெற்கு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
15ஆம் நூற்றாண்டில் துப்பாக்கிக் குண்டுகள், பீரங்கிகள் மற்றும் கடல் பயணக் கப்பல்கள் போன்ற துறைகள் மூலம் ஐரோப்பா அடைந்த முன்னேற்றங்கள் காரணமாக அவற்றுக்கு உலகின் பிற நாடுகளை கைப்பற்ற முடிந்தது.
அதன் விளைவாக உலகில் இன்று தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன. அதிக செலவு காரணமாக சில தொழில்நுட்ப முறைகளுக்கு பிரவேசிப்பதற்குள்ள வரையறைகள், போதுமான டிஜிட்டல் திறன்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கலாசார மற்றும் நிறுவன ரீதியில் நிலவும் தடைகள் மற்றும் நிதி தொடர்பான தடைகள் போன்ற சவாலான சூழ்நிலைகள் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்ததென்பதே எமது நம்பிக்கையாகும் என்றார்.