Home » ஊழியர் சேமலாப நிதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

ஊழியர் சேமலாப நிதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

by Damith Pushpika
September 17, 2023 5:20 am 0 comment

உறுதியளிக்கப்பட்ட 09% நலன்கள் தொடர்ந்து வழங்கப்படும்

அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக தற்போது கிடைக்கும் 9% நலன், அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுமென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லையென்பதுடன், நிதியத்துக்கு சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின்னர் கிடைக்கும் இலாபத்துக்கு நூற்றுக்கு 14 சதவீதம் மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, “சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மற்றும் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புப் பணிகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புடன், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் வெளிநாட்டுக் கடனாக பெற்றிருப்பது, அந்தந்த நாடுகளின் மக்களின் வரிப்பணமென்பதுடன், நாம் அது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அதனால், வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாத நிலையிலுள்ள நாடென்ற வகையில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல், வெளிநாட்டுக் கடன்களை மாத்திரம் மறுசீரமைக்க இடமளிக்குமாறு கோரிக்கை விடுக்க எமக்கு வாய்ப்பில்லை. எனவே, உள்நாட்டுக் கடனை மறுசீமைப்பது கட்டாயமாகும்.

நாம் EPF-ETF நிதியங்கள் மூலமாகவே அதிகளவில் உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளோம். அதனாலேயே, இது தொடர்பாக விவாதம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏன் வங்கிகளில் முன்னெடுக்கப்படவில்லையென்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு நாம் கூறக்கூடிய தெளிவான பதில் இதுவே, வங்கிகளுக்கு தொடர்ந்தும் சுமார் 30 சதவீதமளவில் வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மேலதிகமாக வங்கிகளுக்கு இன்னும் சுமைகளை வழங்குவதன் மூலம் வங்கிகளில் கொடுக்கல், வாங்கல் செய்யும் பொதுமக்களே பொருளாதார ரீதியாக மேலும் பாதிக்கப்படுவர்.

ஆகையால், அரசாங்கமென்ற வகையில் பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்று, எதிர்காலத்துக்கு உள்நாட்டுக் கடன் மறுசீமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவோம். மேலும், பொதுமக்கள் நிதியங்களின் உறுப்பினர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் வாக்குறுதியளிக்கப்பட்ட 9 சதவீத நலனை எதிர்காலத்திலும் வழங்க நடவடிக்கை எடுப்போம். ஒருவருக்கு சொந்தமான பணத்தில் 9 சதவீத வருடாந்த நலன் தொடர்ச்சியாக வழங்கப்படும். அது தவிர, 14 சதவீதம் அல்லது 30 சதவீத வரி விதிக்கப்பட மாட்டாது. இது தொடர்பான உண்மைகளை சிலர் திரிவுபடுத்திக் கூறுகின்றனர். மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை முதலீடு செய்த பின்னர் கிடைக்கும் இலாபத்துக்கே 14 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எமது 2.4 மில்லியன் தொழிலாளர்களில், ஒருவருக்கு இன்று வங்கியில் 10 இலட்சம் ரூபா வைப்பிலிருந்தால், அந்தத் தொகைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் தமது பணத்தை பெறும் போது, அவருக்கு அதற்காக ஆண்டு தோறும் 9 சதவீதமென்ற வகையில் சேர்க்கப்பட்ட நலனை வழங்கவும் தயாராகவுள்ளோம்.

மேலும், உள்நாட்டுக் கடன் மறுசீரமைக்கப்படா விட்டால் மாத்திரமே EPF / ETF நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படும். EPF / ETF தொடர்பாக உருவாக்கப்படும் கதைகள் வெறுமனே அரசியல் கதைகள் மட்டுமே. கதைகளை உருவாக்குபவர்களுக்கு எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை. ஊழியர் சேமலாப நிதியம் உரித்தாகும் மத்திய வங்கி, ஒரு சுயாதீனமான நிறுவனமாக இருப்பதால், அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதென்பதை நம்பிக்கையுடன் கூறுகின்றேன். தொழில் அமைச்சினூடாக இந்த நிதியம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாதென்பதையும் நாம் பொறுப்புடன் தெரிவிக்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division