ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான Industry 2023 Jaffna Edition வட மாகாண கைத்தொழில் கண்காட்சி மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து Getup Startup For A Wealthy Nation எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பமான கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணக் கலாசார நிலையத்தில் இம்மாதம் 1,2,3 ஆகிய மூன்று தினங்களாக பெருமளவான மக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய 20 துறைகளைச் சேர்ந்த 300 கண்காட்சிக் கூடங்கள் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்ததோடு, வட மாகாண கைத்தொழிலாளர்களும், நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்தியில் ஈடுபடும் ஏராளமான முன்னணி கைத்தொழிலாளர்களும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
கண்காட்சியின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரனவின் தலைமையில் இடம்பெற்றதோடு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆரம்ப நிகழ்வுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் சாத்தியமுள்ள உள்ளூர் கைத்தொழில்களை இனங்கண்டு அவற்றை ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்வதற்கும், புதிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கும் தேவையான தொழிநுட்ப அறிவைப் புதுப்பித்து வடமாகாண மக்களுக்கு கைகொடுப்பதும் இந்தக் கண்காட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன் வெற்றியை மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கருத்துக்களை வைத்து இனங்கண்டு கொள்ள முடிந்தது. கண்காட்சியின் நிறைவு விழா இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் டாக்டர் சாரங்க அழகப்பெரும தலைமையில் இடம்பெற்றது.
(எம். எஸ். முஸப்பிர்)