மேற்குநாடுகளில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அனைவருமே எமது நாட்டின் பிரிவினைக்கு ஆதரவானவர்களென்ற எண்ணம் எமது நாட்டின் பெரும்பான்மையின மக்கள் பலரிடம் ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது. மேற்குநாடுகளில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு விரோதமான எண்ணம் கொண்டவர்களென்று பெரும்பான்மைச் சமூகத்தில் பலர் கருதுகின்றனர்.
இந்தச் சிந்தனையானது 83 ஆம் ஆண்டு இனவன்செயலுக்குப் பின்னர் தோற்றம் பெற்றதெனக் கூறுவதே பொருத்தம். 83 வன்செயலிலும், அதற்குப் பின்னர் ஆரம்பமான உள்நாட்டுப் போரிலும் உடலளவிலும் உள்ளத்தாலும் நொந்து போன தமிழர்களில் பலர், இனிமேல் உயிர்ப்பாதுகாப்புடன் இங்கு வாழ முடியாதென்ற அச்சத்திலேயே தமிழகத்துக்கும் மேற்குநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றிருந்தனர்.
அவர்கள் இலங்கையை விட்டுச் செல்கையில், இனவாதத்தையே வெறுத்தனர்; தாயகத்தை ஒருபோதும் வெறுக்கவில்லை. பிறந்து வளர்ந்து சொந்தநாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றோமென்ற ஏக்கத்துடனேயே அவர்கள் தாயகத்தை விட்டு நீங்கிச் சென்றனர். அந்த ஏக்கம் புலம்பெயர் தமிழர்களின் உள்ளத்தில் இன்னும் நீங்காமலேயே உள்ளது.
உலகில் வாழ்கின்ற மனிதர் ஒவ்வொருவருக்கும் தாயகம் மீதான பற்றுதல் இயல்பாகவே உள்ளது. சொந்த நாட்டில் வாழ்கின்றவர்களை விட புலம்பெயர்ந்து சென்று தொலைதூரத்தில் வாழ்வோரிடமே தாயகம் மீதான ஏக்கம் அதிகமாக உள்ளது எனலாம். அது ஏறக்குறைய பிரிவுத்துயர் போன்றது. புலம்பெயர்ந்து சென்றுள்ள இலங்கைத் தமிழர்களும் அவ்வாறானவர்களேயாவர்.
இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து சென்று நான்கு தசாப்தகாலம் கடந்து விட்டது. அந்த நாற்பது வருடகாலத்தில் உள்நாட்டில் நடந்துள்ள மாற்றங்கள் ஏராளம். அதேபோன்று புலம்பெயர் சமூகத்தில் இடம்பெற்றுள்ள மாற்றங்களும் ஏராளம்.
தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் பொருளாதாரம், கல்வி, அரசியல் போன்ற துறைகளில் புலம்பெயர் தமிழர்கள் உச்சத்துக்குச் சென்று விட்டனர். மேற்குநாடுகள் சிலவற்றின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர்கள் விளங்குகின்றனர். மேற்குலகின் பலம் வாய்ந்த சமூகமாக அவர்கள் உள்ளனர் எனலாம்.
இலங்கையர் என்ற ரீதியில் அவர்களை இலங்கைத் தேசம் ஒருபோதுமே புறந்தள்ளி ஒதுக்கிவிட முடியாது. பொருளாதாரத்தில் பலமுள்ளவர்களாக விளங்கும் அவர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதன் மூலமும், சர்வதேச ஆதரவு பெறுவதற்கு அவர்களது உதவிகளைப் பெறுவதன் மூலமும் எமது நாடு நன்மைகளைப் பெற முடியும்.
புலம்பெயர் தமிழர்களுடன் நல்லுறவை வலுப்படுத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலதடவை தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம். அதேபோன்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை அரவணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து பலதடவை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
புலம்பெயர் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் எமது நாட்டை தாயகமாகக் கொண்ட இலங்கையர்கள் என்பதை ஒருபோதுமே மறந்துவிட முடியாது.