Home » புவிசார் அரசியல் போட்டிக்குள் வியட்நாம் – வடகொரிய நகர்வுகள்

புவிசார் அரசியல் போட்டிக்குள் வியட்நாம் – வடகொரிய நகர்வுகள்

by Damith Pushpika
September 17, 2023 5:36 am 0 comment

சர்வதேச அரசியலில் கடந்தவாரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அரங்கேறியிருந்தன. அத்தகைய அரசியலானது இந்தியாவில் நிகழ்ந்த ஜி-20 மகாநாட்டினை மையப்படுத்தி தொடங்கின. ஆனால் அம்மாநாட்டில் இரு முக்கிய மேற்கு எதிர்ப்புவாதத் தலைவர்களான புட்டினும், ஜின்பிங்கும் கலந்து கொள்ளாததன் விளைவுகளை கடந்தவாரம் இப்பகுதியில் உரையாடியிருந்தோம். அச்சந்தர்ப்பத்தில் வடகொரியாவின் தலைவர் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட விஜயமும் அதற்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதி வியட்நாமுக்கு மேற்கொண்ட பயணமும் முக்கிய அரசியலாக அமைந்திருந்தது. இது இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் இரு தலைவர்களது, இரு நாடுகளுக்குமான சர்வதேச அரசியலில் எத்தகைய முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தேடுவதாக அமைந்துள்ளது.

முதலில் வடகொரிய தலைவரின் ரஷ்ய விஜயத்தின் முக்கியத்துவத்தை நோக்குவோம். கடந்த 13.09.2023 அன்று ரயில் மூலம் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி க்ராய் ரயில் நிலையத்தை அடைந்த கிங் ஜோன் உன்னை வோஸ் டோச்னில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வரவேற்றார். இதன் பின்னர் வோஸ் டோச்னியிலுள்ள ரஷ்ய ரொக்கட் ஏவுதளத்தில் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாலில் வடகொரியாவினது சொந்த தயாரிப்பான செயற்கைக்கோள் மற்றும் ரொக்கட்டுகளை ஏவுவதற்கு ரஷ்யா உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் போது வடகொரியாவின் ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டிருக்கலாம் எனவும் அது பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்திருக்கலாம் எனவும் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு தேவையான ஆயுதங்களை பெறுவதில் இரு தலைவர்களது உரையாடலும் அமைந்திருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே நேரம் வடகொரிய ஜனாதிபதி மேற்குக்கு எதிரான ரஷ்யாவின் புனிதப் போருக்கு வடகொரியா, தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.

உலகளாவிய அரசியலில் கூட்டுப் பாதுகாப்பு நாடுகளதும் வல்லரசுகளதும் இருப்பினைப் பாதுகாக்கும் உபாயமாகவுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவின் பிரதான பாதுகாப்புக் கொள்கையாக கூட்டுப் பாதுகாப்பு காணப்படுகிறது. அத்தகைய உபாயத்துடனேயே ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளது உலகளாவிய அரசியல் இராணுவ நகர்வுகள் காணப்படுகின்றன. இத்தகைய உத்தியை பின்பற்றும் உன் மற்றும் புட்டின் தமது நாடுகளின் பாதுகாப்பு சார்ந்தும் பொருளாதார தேவைகள் சார்ந்தும் ஒன்றிணைந்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடிய விடங்களில் பாதுகாப்புக்கான ஆயுத தளபாடங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்டபத்தினை வடகொரியாவுடன் ரஷ்யா பகிர்ந்து கொள்ள முன்வந்திருப்பது முக்கியமான அரசியலாக உள்ளது. அதே நேரம் ரஷ்ய ஜனாதிபதி தனிமைப்படுத்தப்படுகிறார் என்ற நிலையை தகர்த்ததோடு வடகொரியா மீதான பொருளாதாரத் தடையையும் எதிர்கொள்வதாக உரையாடல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் ரஷ்யாவின் இறைமையையும், பாதுகாப்பினையும் மேலாதிக்க சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்கானதே என வடகொரியத் தலைவர் வெளிப்படுத்தியிருந்தார். இரு நாட்டுத் தலைவர்களது உக்ரைன் மீதான ரஷ்ய நடவடிக்கையை நியாயப்படுத்தும் அதேவேளை உக்ரையின் போர் தொடர்பில் மேற்கு கொண்டுள்ள உத்திகளை தகர்ப்பதாகவே அமைந்திருந்தது. மேற்கு ரஷ்யாவுக்கான ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்துவதன் வாயிலாக போரை உக்ரைனுக்கு சாதகமானதாக மாற்றலாம் என விவாதிக்கின்றது. அதனை ரஷ்யா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தோற்கடித்துவருகிறது. வடகொரியா மீது தொடர்ச்சியாக பொருளாதாத் தடைகளை மேற்கொண்டுவரும் மேற்கு நாடுகள் தற்போதும் வடகொரியா மீது எச்சரிக்கைகளை விடுத்துவருகின்றன. ரஷ்யா ஏற்கனவே ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டத்து நாடுகளுடன் நெருக்கமான உறவை பின்பற்றிவருகிறது. மேற்குலகத்தின் உபாயமான ரஷ்யாவை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தல் என்பதை புட்டின் தகர்த்து வருவதாகவே தெரிகிறது. இது வடகொரியாவுக்கும் பொருத்தமானதாகவே அமைந்துள்ளது.

அதேநேரம் இரு நாடுகளது பொருளாதார அடிப்படையிலான உரையாடலும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக மேற்கு ஊடகங்கள் மற்றும் பென்ரகன் கருத்து தெரிவித்துவருகிறது. வடகொரியாவின் உணவுத் தேவையை நிறைவு செய்வதிலும் சக்திவளத்தை பெற்றுக் கொள்வதிலும் வடகொரியத் தலைவர் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மறுபக்கத்தில் புட்டின் வடகொரியாவிடமிருந்து ஆயுத தளபாடங்களை தருவிக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனவும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தளங்கள் உரையாடுகின்றன. இதற்கான வாய்ப்புக்கள் அதிகமானதாகவே உள்ளன. இரு நாடுகளது நலன்களின் அடிப்படையில் இருநாட்டு உறவுகள் அமைவதுண்டு. ஆனால் உக்ரைன் போர் ரஷ்யாவின் ஆயுத தளபாடங்களின் பற்றாக்குறையை மட்டுமல்ல மேற்குலகத்தின் ஆயுத தளபாடங்களிலும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. கடந்த வருடத்தில் இப்போரில் 11 மில்லியன் ஆட்லறி குண்டுகள் மட்டும் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக Royal United Services Institute தெரிவித்துள்ளது. இத்தொகை 2023 இன் நடந்து முடிந்த மாதம் வரை 7 மில்லியன் ஆட்லறி குண்டுகள் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலக வரலாற்றிலே மிக அபாயகரமான போர் என வேர்சோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேசக் கற்கைக்கான பேராசிரியர் Dorota Heidrich யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் அரசறிவியல்துறை மாணவர்களுடனான கருத்தரங்கில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். இவ்வாறு உக்ரைன் போர் ஆயுத தளபாடங்களின் அளவினாலும் அதன் தன்மையாலும் தீர்மானிக்கப்படுகிறதாகவே தெரிகிறது.

இரண்டாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனது வியட்நாம் விஜயம் (11.09.2023) முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது. ஜோ பைடனது முதல் அரசமுறைப் பயணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்ற வியட்நாம் ஜனாதிபதி வன் தோங் இரு நாட்டுக்குமான போட்டித்தன்மை பொருந்திய உபாயங்கள் கொண்ட சமாதானத்திற்கான உறவு எனத்தெரிவித்தார் மேலும் அவர் குறிப்பிடும் போது ஒத்துழைப்பு, நிலையான அபிவிருத்தி மற்றும் பொருளாதார திட்டமிடலுக்கான உறவாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். இரு நாட்டுக்குமான நீண்ட கசப்பான விடயங்களை கோடிட்டுக் காட்டிய வன் தோங் அதனைக் கடந்து பொருளாதார மற்றும் பாதுகாப்பான சமாதான முன்முயற்சியில் கவனம் கொள்வதாக அவரது உரை அமைந்திருந்தது. இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடிய விடயங்களில் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் ஒத்துழைப்புக்கான பயிற்சிகள் என பல விடயங்கள் அமைந்திருந்ததோடு அவற்றில் உடன்பாடு எட்டப்பட்டது.

1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்க-, வியட்நாம் உறவில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அது டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் மேலும் பலமடைந்தது. தற்போது புதிய உத்திகளுடன் இரு நாட்டு உறவும் அமைந்துள்ளது. குறிப்பாக சீனாவின் தென் சீனக்கடல் மீதான நடவடிக்கையை அடுத்து வியட்நாம் சீன உறவு பலவீனமடைந்துள்ளது. அண்மைக் காலப்பகுதியில் (27.03.2023) வியட்நாம் பாதுகாப்பு கப்பல்கள் மீதான சீன போர்க்கப்பல்கள் ஏற்படுத்திய நடவடிக்கைகள் அதிக அதிர்வுகளை தென்சீனக்கடல் பகுதியில் ஏற்படுத்தியிருந்தது. வியட்நாம் படகுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நகர்ந்தமை இரு நாட்டுக்குமான இராஜதந்திர உறவை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. ஏற்கனவே சீன-, அமெரிக்க உறவு ஒரு பனிப்போர் சூழலை நோக்கி நகரும் போது அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதனை மேலும் முதன்மைப்படுத்துவதாக உள்ளதாகவே தெரிகிறது. அதன் இன்னோர் கட்டமாகவே ஜோ பைடனது வியட்நாம் விஜயம் நோக்கப்படுகிறது.

எனவே இரு நாட்டுத் தலைவர்களது விஜயங்களும் உலக அரசியலில் இரு துருவங்களது நிகழ்வுகளாகவே தெரிகிறது. ரஷ்யா வடகொரிய உறவானது, அமெரிக்கா மற்றும் மேற்குக்கு எதிரானதாக அமைந்திருப்பதுடன் அமெரிக்க வியட்நாம் உறவு புதிய சகாப்தத்தை நோக்குகின்ற போதும் அடிப்படையில் சீன, ரஷ்ய அணிக்கு எதிரான நகர்வாகவே தெரிகிறது. முன்னாள் சோஷலிஸ சிந்தனையைக் கொண்டது மட்டுமல்லாது அமெரிக்காவுடன் நீண்ட போரை எதிர்கொண்ட வியட்நாம் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதென்பது சீன, ரஷ்ய அணிக்கு எதிரான புவிசார் அரசியலை உருவாக்கும் நகர்வாகவே தெரிகிறது. இது ஒரு தந்திரோபாய அரசியல் பொருளாதார உறவுக்கான நடவடிக்கையாகவே உள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division