இத்தாலியின் தீவிர வலதுசாரிகளது எழுச்சி ஐரோப்பிய ஐக்கியத்தை தகர்க்குமா? | தினகரன் வாரமஞ்சரி

இத்தாலியின் தீவிர வலதுசாரிகளது எழுச்சி ஐரோப்பிய ஐக்கியத்தை தகர்க்குமா?

உலக வரலாற்றின் தொட்டிலாக ஐரோப்பாவே துலங்குகிறது. வரலாற்றுக் காலத்திலும் அதன் பின்னரும் அதற்கான தனித்துவத்தை ஐரோப்பா பேணிவருகிறது. மாற்றங்களும் புரட்சிகளும் போராட்டங்களும் மறுமலர்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொழில் நுட்பமும் ஐரோப்பாவை மையப்படுத்தியதாகவே உள்ளது. கருத்தியலும் சிந்தனை மாற்றமும் ஐரோப்பாவிலிருந்தோ எழுச்சியடைகிறது. உலக நாகரீகத்தின் தோற்றத்தில் பிறகண்டங்கள் முதன்மை பெற்றாலும் நவீனத்துவத்தை நோக்கிய அசைவு அனைத்துமே ஐரோப்பாவை மையப்படுத்தியதாகவே உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் வேர் ஐரோப்பியரிட மிருந்தே உலகளாவிய தளத்திற்கு பரவியது. அத்தகைய ஐரோப்பாவில் தோன்றியதே பாசிசமும் நாசிஸமும். இத்தாலியையும் ஜேர்மனியையும் மையமாகக் கொண்டு அத்தகைய சிந்தனை எழுச்சி பெற்று அழிவுக்குள்ளாகியது. அத்தகைய கருத்தியல் தோன்றிய இத்தாலியில் மீளவும் தீவிர வலதுசாரிகளது ஆட்சி சாத்தியமாகியுள்ளது. இக்கட்டுரையும் இத்தாலியில் இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியுள்ள தீவிர வலதுசாரிகளது எழுச்சியையும் அதன் பிரதிபலிப்புகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

ஐரோப்பாவில் நான்காவது பொருளாதார சக்தியாகத் திகழ்ந்த இத்தாலி கொவிட்-19தொற்றுக்கு பின்னர் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து முன்னாள் பிரதமர் மரியோ டிராகி பதவியை இராஜினாமா செய்தார். அதனை அடுத்து நடந்த தேர்தலில் ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவரது கட்சியான இத்தாலிய சகோதரர் கட்சி (Brother's of Italy) 26சதவீத வாக்குகளைப் பெற்று கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது.

லீக் கட்சி மற்றும் போர்ஜா இத்தாலிய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் ஜோர்ஜியா மெலோனி தீவிர வலதுசாரியாக இனங்காணப்பட்டுள்ளார். மீளவும் முசோலினின் வாரிசுகள் ஆட்சிக்கு வந்துவிட்டதாக ஐரோப்பிய ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் அத்தகைய தீவிர வலதுசாரி எனும் அடையாளத்தை தவிர்க்க மெலோனி அதிகம் முயல்வதாக பிபிசி தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளது. எது எவ்வாறாக அமைந்தாலும் இத்தாலியின் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்பதுடன் முசோலினிக்கு பின் எழுச்சி பெற்ற தீவிர வலதுசாரியாகவும் தேசியவாதியாகவும் மெலோனி அடையாளப்படுத்தப் படுகிறார். அதற்கான அடிப்படையை அவர் இத்தாலிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்பாக மெலோனி தனது இளமைக்காலத்திலேயே முசோலினி ஆதரவுபெற்ற சமூக இயக்கத்தில் இணைந்து அரசியல் பணியை ஆரம்பித்திருந்தார். இத்தாலியின் தலைநகரான ரோம் புறநகர் பகுதியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மெலோனி 15வது வயதில் அச் சமூக இயக்கத்தின் மாணவ பிரிவில் பிரதான உறுப்பினராக விளங்கினார். அது மட்டுமன்றி 19வயதில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போது இத்தாலியின் முன்னாள் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி ஒரு சிறந்த அரசியல்வாதி எனவும் இத்தாலிய நாட்டுக்காக அவர் செய்தவை எல்லாம் நன்மைகளே என்றும் புகழ்ந்து கருத்துத் தெரிவித்தார். இவையே மெலோனியை தீவிர வலதுசாரியாகவும் முசோலினியின் ஆதரவாளராகவும் வெளிப்படுத்தியுள்ளது.

இவற்றைக் கடந்து மெலோனியின் ஐரோப்பா பொறுத்த கொள்கை அதிக குழப்பமானதாகவே காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஐரோப்பிய ஐக்கியத்தை நிராகரித்த மெலோனி பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். இருந்த போதும் ஐரோப்பாவின் ஐக்கியம் பற்றிய கொள்கையில் மெலோனி முரண்பாடுடையவராகவே செயல்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. காரணம் அவர் கூட்டணி வைத்துள்ள லீக் கட்சியினரும் போர்ஜா இத்தாலிக் கட்சியினரும் ஐரோப்பாவின் ஐக்கியத்திற்கு எதிரான நிலையைக் கொண்டவர்கள் என்பது முக்கியமான தகவலாகும். இது மட்டுமல்ல சுவீடனிலும் ஹங்கேரியிலும் பிரான்ஸிலும் தீவிர வலதுசாரிகளது எழுச்சி கடந்த காலங்களில் முதன்மை பெற்றுவருகிறது. மெலோனியின் வருகையை பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது நிலையைப் பெற்ற மரின் லூபென் மற்றும் எரிக் செமூர் போன்ற தீவிர தேசிய வாதிகள் வரவேற்றுள்ளனர்.

ஐரோப்பா வேறு திசையை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் தீவிரத் தன்மைகளும் தேசம் மீதான பற்றுக் கொண்ட தேசியவாதிகளது எழுச்சியும் தவிர்க்க முடியாது முதன்மை பெற ஆரம்பித்துள்ளது.

1930களில் ஐரோப்பாவின் நிலையை மீளவும் ஐரோப்பா பெற்றுவிடுமா என்ற கேள்வி அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஜேர்மனியினதும் இத்தாலியினதும் எழுச்சிக்கு பின்னால் அப்போது நிலவிய பொருளாதார நெருக்கடியும் முதலாம் உலக போரும் காரணமாக தெரிந்தது. அவ்வாறே ரஷ்ய -உக்ரைன் போர் ஐரோப்பாவின் பொருளாதாரத்தை அதிகம் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அப்போது பாஸிஸ்டுகளின் எழுச்சி போல் தற்போது நவ-பாஸிஸ்டுகளது எழுச்சி ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அவ்வாறாயின் உலகம் மீளவும் ஒரு போருக்குள் நகர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனையே ரஷ்யாவின் தத்துவவாதி அலெக்சாண்டர் டுகின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஈரோசியாவின் பேரரசாக ரஷ்யாவை உருவாக்கும் சிந்தனையுடன் செயல்படும் டுகின் ரஷ்ய ஜனாதிபதி புடினின் தத்துவ ஆசிரியராகவும் விளங்குகிறார். அவரது வார்த்தையில் உலகப் போரின் விளிம்பில் மேற்குக்கூட்டணியும் ரஷ்யாவும் இருப்பதாகவும் அது அணுவாயுதப் போருக்கான அழிவை நோக்கி நகரும் எனவும் தெரிவித்துள்ளார். உக்ரை னில் ரஷ்யாவின் தோல்வி அணுவாயுதத்தின் ஆபத்தை மறந்து செயல்படுகின்ற நிலையை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

மெலோனியின் வருகை அதிக நெருக்கடியை ஐரோப்பாவுக்கு தோற்றுவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை ஆரம்பத்தில் ஆதரித்த மெலோனி பின்னர் தனது கொள்கையை மாற்றிக்கொண்டார். ஆனால் முசோலினியை ஆதரிக்கும் ஒருவர் நிச்சயம் புடினையும் ஆதரிக்க வாய்ப்பு அதிகமுண்டு. ஏற்கனவே பிரான்ஸின் ஜனாதிபதி வேட்பாளர் லுபென், புடினின் ஆதரவாளராக விளங்கினார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஆதரவே அவரை தோற்கடித்ததாகவும் செய்திகள் உண்டு. ஆனால் மெலோனி அதில் வெற்றிகரமானவராகவே விளங்குகிறார்.

மெலோனியின் வெற்றியானது ஐரோப்பாவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவுக்கு அதிக ஆபத்தானதாகவே அமையும். பிரிட்டனும் அமெரிக்காவும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் முழுமையாக அமெரிக்காவின் இருப்பும் உலக ஆளுகையும் ஐரோப்பாவை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. ஹிட்லர் முசோலினியின் தோல்வி அமெரிக்காவுக்கான வாய்ப்பினை அதிகப்படுத்தியதுடன் ஐரோப்பாவை ஆளும் வலுவையும் அதன் மூலம் உலகத்தை ஆளும் திறனையும் அமெரிக்கா பெற்றுக்கொண்டது. அதற்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்கா, -பிரிட்டன் கூட்டணி இலகுவில் அத்தகைய வாய்ப்பினை மெலோனிக்கு வழங்கிவிடாது. தற்போது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கப் போரை ஐரோப்பியர்களே நிகழ்த்துகிறார்கள். அப்போரின் சுமை முழுவதும் ஐரோப்பியருக்கானதாக உள்ளதே அன்றி அமெரிக்கர்களுக்கானதாக இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஐரோப்பாவின் ஐக்கியமானது அமெரிக்காவுக்கானதன்றி ஐரோப்பாவுக்கானதாக அமையும் போதே மெலோனி போன்ற தலைவர்களது எழுச்சி அவசியமானதாகிறது. ரஷ்ய, -ஐரோப்பிய எரிவாயு மற்றும் பெற்றோலிய பரிமாற்றத்திற்கான நோர்ட்ஸ்ட்ரீம் குழாய்களை தகர்த்தது அமெரிக்கா என்பதை ஐரோப்பிய அரசுகள் விளங்கிக் கொள்ள முயலும் போதே ஐரோப்பா ஐரோப்பாவாக எழுச்சி பெற வாய்பு உருவாகும். அத்தகைய செயலை ரஷ்யா மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதும் அதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லாதுள்ளது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அடுத்து இத்தாலிக்குள் குவியும் மேற்காசிய அகதிகளால் பாரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ள இத்தாலியின் போக்கினை மெலோனி மாற்றுவார் என்பது அவரது நகர்வுகளில் தெரிகிறது. கடல்வழியாக இத்தாலியை நோக்கி நகரும் மேற்காசிய நாட்டவருக்கு எதிராக மட்டுமன்றி அகதிகள் தஞ்சம் கோரும் குடியேற்றவாசிகள் மீதான அவரது நடவடிக்கை தனித்துவமானதாக அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பாஸிஸ்டுக்கள் அகதிகளுக்கு எதிராக தீவிரவாத உணர்வுகளை வெளிப்படுத்திவருகிறார்கள் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

எனவே ஐரோப்பாவுக்குள் மெலோனியின் ஆட்சியானது பெண்களது எழுச்சியை காட்டுவதாக அமைந்தாலும் அதுவும் தீவிர வலதுசாரிக் கொள்கையாளர்களாலேயே முடியும் என்பதையும் உணர்த்துகிறது. பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளைத் தொடர்ந்து இத்தாலியிலும் பெண் தலைமைதாங்கும் அரசியல் செயல்பாடு எழுந்துள்ளது. ஆனால் அத்தகைய எழுச்சிக்குப் பின்னால் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே காரணம் எனவும் தீவிர வலதுசாரிகளது எழுச்சியே அடிப்படையானது எனவும் கருதமுடியும். எதுவாயினும் ஐரோப்பாவில் மெலோனியின் எழுச்சி மாற்றத்தை நோக்கி நகரப் போகிறது என்பதை அடையாளப்படுத்துகிறது. அது உலக ஒழுங்கை மாற்றும் திறனை மேலும் அதிகரிக்க வாய்ப்பினைத் தரக்கூடியதாகவே அமையும்.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments