உலக வல்லரசுகளுக்கு நிகராக வேகமாக வளரும் இந்தியா! | தினகரன் வாரமஞ்சரி

உலக வல்லரசுகளுக்கு நிகராக வேகமாக வளரும் இந்தியா!

இந்திய பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உலகளவில் 3 ஆவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிப்புகள் வெளியாகும் நிலையில், இந்தியா தற்போது ஆயுத ஏற்றுமதியை முக்கியமானதாகக் கையில் எடுத்துள்ளது. இந்தியா அணுவாயுதம் கொண்டு தாக்கக் கூடிய ஏவுகணைகளை உள்நாட்டில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டணியில் உருவாக்கப்படும் நிறுவனத்தின் மூலம் அணுஆயுதத்தைப் பயன்படுத்தும் சுப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 5 பில்லியன் ெடாலர் அளவிலான கேள்விகள் குவியும் என்று இக்கூட்டணி நிறுவனத்தின் தலைவர் கூறியிருந்தார்.

இந்த ஏவுகணைக்காக இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் சுமார் 375 மில்லியன் ெடாலர் மதிப்பிலான ஆயுதத்துக்காக ஓர்டர் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BrahMos Aerospace நிறுவனம் இந்த அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் சுப்பர்சோனிக் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்காக தற்போது இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நாடுகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் BrahMos Aerospace நிறுவனம் இந்திய அரசு சார்பில் 50.5 சதவீதமும், ரஷ்யாவின் 49.5 சதவீதமும் பங்குகளைக் கொண்டும் இயங்க உள்ளது. இக்கூட்டணி நிறுவனம் ரஷ்யாவின் MiG ஃபைட்டர் விமானம், Su-30 ஜெட் விமானம் ஆகியவற்றுக்கான உரிமம் பெற்று உற்பத்தி செய்ய உள்ளது. இதில் BrahMos ஏவுகணைகளும் அடங்குகின்றன.

இது இவ்விதமிருக்க இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையின் (QRSAM) ஆறு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வும், இந்திய இராணுவமும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன. இந்திய இராணுவத்தின் மதிப்பீட்டு சோதனையின் ஒரு பகுதியாக, ஒடிசா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை நிலையத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டிருந்தது.

இந்த சோதனைகளின் போது அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் ஆயுதங்களை துல்லியமாக தாக்கும் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டது. ஏவுகணை சோதனையின் வெற்றியை அடுத்து டி.ஆர்.டி.ஓ-விற்கும், இந்திய இராணுவத்திற்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்திருந்தார்.

துரிதமாக செயலாற்றும் தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் இந்த ஏவுகணை, இந்திய ஆயுதப்படைகளின் ஆற்றலுக்கு மேலும் வலுசேர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு காலத்தில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏவுகணை தொழில்நுட்ப பரவலைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான எம்.டி.சி.ஆர் கெடுபிடியால் இந்தியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம், தளவாட உதவிகள் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அப்துல் கலாம் தலைமையில் கடந்த 1983- ஆம் ஆண்டு, தேடித் தாக்கும் (Guided missiles) ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை இந்தியா தொடங்கியது. கலாமின் வழிகாட்டுதலில் இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உள்நாட்டிலேயே தேடித் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் விதைத்த விதையால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா இப்போது பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக நீண்ட தொலைவுக்கு சீறிப் பாயக்கூடிய ஏவுகணைகளுக்கான 'ரீ-என்ட்ரி' தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியது மிகப்பெரிய சாதனையாகும். அதாவது 'ரீ-என்ட்ரி' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் பூமிக்கு மேலே பலநூறு கிலோ மீற்றர் பயணித்துவிட்டு பின்னர் வானில் இருந்து பூமி நோக்கி திரும்பி இலக்கைத் தாக்கி அழிக்கும்.

ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளுக்கான தொழில்நுட்பம், அதிநவீன வழிகாட்டி, சென்சர் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியா சொந்தமாக உருவாக்கி இருப்பது பெருவெற்றியாகும்.

இதேவேளை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும்அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் 700 கி.மீ. முதல் 5,000 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இதன்மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. வலிமை, வலிமையால் மதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக இந்தியா திகழ்கிறது.

ஆரம்ப காலத்தில் அக்னி ஏவுகணைக்கான சுப்பர் கம்பியூட்டர் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு எந்த நாடும் வழங்கவில்லை. இதன் காரணமாக முதலில் சாதாரண கணினிகள் மூலம்அக்னி ஏவுகணையின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலதாமதம் ஏற்பட்டது. 'ரீ-என்ட்ரி' தொழில்நுட்பத்தில் அக்னி ஏவுகணையை வடிவமைக்க அதிநவீன சுப்பர் கம்பியூட்டர் அத்தியாவசியமாக தேவைப்பட்டது.

தலைநகர் டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலையை கண்காணிக்க சுப்பர் கம்பியூட்டர் இருந்தது. அமெரிக்கா வழங்கிய இந்த கம்பியூட்டரை வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தக்கூடாது என்று அந்த நாடு கண்டிப்புடன் நிபந்தனை விதித்திருந்தது.

அதோடு இந்தியாவுக்கு சுப்பர் கம்பியூட்டரை வழங்க எந்தவொரு நாடும் முன்வரவில்லை.

இந்த சவாலான நேரத்தில் இந்திய பல்கலைக்கழங்களில் புதிதாக சேர்ந்திருந்த 14 இளம் விஞ்ஞானிகள் சுப்பர் கம்பியூட்டரை உருவாக்கும் ஆய்வில் இறங்கினர். அனுராக் என்று பெயரிடப்பட்ட அந்த குழு அதிநவீன சுப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியிருந்தது.

இந்தியாவுக்கு வெளிநாடுகள் வழங்க மறுத்த சுப்பர் கம்பியூட்டரைவிட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பர் கம்பியூட்டர் 20 மடங்கு வேகத்தில் செயல்பட்டது. இது அக்னி ஏவுகணை திட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது. 'இந்திய நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இளைஞர்களுக்கு உள்ளது. இந்தியாவின் எதிர்காலம் அவர்கள் கையில் உள்ளது' என்று கலாம் அறுதியிட்டு கூறினார். அவரது நம்பிக்கையை இன்றளவும் இளைஞர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவை முதலிடத்துக்கு உந்தி தள்ளி உள்ளது. இது உலகின் அதிவேக சுப்பர்ெசானிக் ஏவுகணை ஆகும். நிலம், கடல், வானில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் தயாரிக்கப்பட்டு, முப்படைகளிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. வேகம், வலிமை, துல்லியமாக தாக்கும் திறனில் பிரம்மோஸ் ஏவுகணைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இன்றளவும் இந்திய பாதுகாப்பு படைகளின் சக்திமிக்க ஆயுதமாக பிரம்மோஸ் விளங்குகிறது.

இந்தியாவை பொருளாதாரத்தில் மாத்திரமன்றி, ஆயுதபலத்திலும் வளர்ச்சியடைந்த நாடாக முன்னேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தீவிரமான திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எஸ். சாரங்கன்

Comments