ரஷ்யா-உக்ரைன் போர்; தோற்கடிக்கப்படுகிறாரா விளாடிமிர் புடின்? | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யா-உக்ரைன் போர்; தோற்கடிக்கப்படுகிறாரா விளாடிமிர் புடின்?

சர்வதேச அரசியலில் அதிகம் உரையாடப்படும் கோட்பாடாக புவிசார் அரசியல் விளங்குகிறது. இது உலகளாவிய அதிகாரத்திற்கான போட்டியை தவிர்க்க முடியாது ஏற்படுத்தியது. அத்தகைய போட்டியும் அதற்கான எதிர்வினையும் சமகாலத்திலும் நிகழ்ந்து கொண்டே இருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு புவிசார் அரசியலுக்கான போராகவே அமைந்துள்ளது. உக்ரைன் நிலப்பரப்பில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டு வெளியேறியமை மீண்டும் அணுவாயுதப் போர் பற்றிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பும் சமாதானத்திற்கு போகவேண்டும் எனக் கூறிக் கொண்டாலும் அதற்கான வாய்ப்பு இல்லாது போர் ஏழுமாதங்களை எட்டியுள்ளது. ஆனால் மேற்குலகம் ரஷ்ய ஜனாதிபதி புடினை தோற்கடிக்க உக்ரைனை பயன்படுத்திக் கொள்வதில் வெற்றிகண்டுள்ளதாகவும் புடின் மீதான விமர்சனம் அதிகரித்துள்ளதாகவும் அதனால் ரஷ்யா அணுவாயுதம் பற்றிய உரையாடலை தொடக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இக்கட்டுரையும் ரஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின் நகர்வுகளும் புடினின் பதில் நடவடிக்கையையும் தேடுவதாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் கூட்டத்தொடரில் பெரும்பாலான மேற்கு நாடுகளின் உரைகளிலும் உக்ரைன்-ரஷ்ய போர் முதன்மை பெற்றதுடன் ரஷ்யா மீதான கண்டனமே பிரதான அரசியலாக காணப்பட்டது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்யா ஐரோப்பாவில் காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய யுகம் ஒன்றை மீளத் தொடங்கியுள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ஐ.நா.சபையில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடும் போது அதனை அனுமதிக்க முடியாது. இப்போரை நிறுத்துவதில் நம் அனைவருக்கும் பங்குள்ளது. ஏனெனில் நாம் அனைவரும் அதற்கான விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார். பசுபிக் மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இன்றும் காலனித்துவ கொள்கையை பின்பற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியின் உரை அவ்வாறு அமைந்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐ.நா.பொதுச் சபையில் உரையாற்றும் போது, ஐ.நா.பொதுச்சபையிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கின்றன. அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் பொறுப்புக்களை பொறுப்பற்ற முறையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் புறக்கணிக்கிறார்.  ஜரோப்பாவுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் அணுவாயுத அச்சுறுத்தலை விடுத்துள்ளார். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார். உக்ரைனுக்கூடாக போருக்கான ஆயுததளபாடங்களையும் படைகளையும் வழங்கிக் கொண்டு எவ்வாறு போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது தவிர்க்கவியலாத கேள்வியாகும். இதுவரை 1500கோடி டொலருக்கு அமெரிக்கா மட்டும் உக்ரைனுக்கு ஆயுததளபாடங்களை வழங்கியுள்ளது. தற்போதும் 60கோடி டொலரை உக்ரைன் ஆயுததளபடங்களுக்கு அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது.  

இது மட்டுமல்லாது ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுள்ள இந்தியாவின் நிலைப்பாடும் போரை கைவிடுவதற்கானதாகவே உள்ளது. ரஷ்ய ஜனாதிபதியை நேரில் சந்தித்த இந்தியப் பிரதமா நரேந்திர மோடி இது போருக்கான காலமல்ல. நான் உங்களுடன் தொலைபேசியில் பலமுறை பேசியிருக்கிறேன். ஜனநாயகம், இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவை உலகை ஒன்றாக வைத்திருக்கும் என ஷங்காய் மகாநாட்டில் புடினை சந்தித்த போது தெரிவித்துள்ளார். 

ஆனாலும் புடின் இத்தகைய உரையாடலுக்கு எதிர்வினை ஆற்றுவது போல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மேற்கு கூட்டணிக்கு எதிராக அணிதிரள்வு என்ற தொனிப் பொருளில் புடின் தனது உரையை காணொளிவாயிலாக தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகள்  கூட்டணியின் அச்சுறுத்தலுக்கு எதிராக ரஷ்யா அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு தயங்கமாட்டாது என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தெரிவிக்கும் போது மேற்கு நாடுகள் அணுவாயுத அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் மொஸ்கோவிடம் அதற்கு பதிலளிக்க நிறைய ஆயுததளபாடங்கள் உண்டு எனவும் தெரிவித்தார். ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறு த்தலுக்கு உள்ளாகும் போது ரஷ்யாவையும் ரஷ்ய மக்களையும் பாதுகாக்க நாங்கள் நிச்சயமாக எங்கள் வசமுள்ள அனைத்து வழிவகைகளையும் கையாளுவோம். அது எமது முட்டாள்தனமல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதே நேரம் இராணுவத்திற்கு படை திரட்டவும் கட்டாய இராணுவ சேவையை அமுல்படுத்தவும் புடின் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவரது அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.  

எனவே இருதரப்பும் போரை தீவிரப்படுத்தும் நடைமுறையில் கவனம் கொண்டுள்ளன. மேற்குலகம் ஐ.நா.சபையை ரஷ்யாவுக்கு எதிரான களமாக பயன்படுத்துவதையும் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் அமைவதனையும் அவதானிக்க முடிகிறது. இவற்றை புரிந்துகொள்வது அவசியமானது. 

முதலாவது, ரஷ்ய ஜனாதிபதி புடினது அறிவிப்புகளில் ரஷ்யர்கள் அதிகம் வாழும் டொனெட்ஸ் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கே இப்போரை நிகழ்த்துவதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது இப்பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பினை நடாத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பினை ஆரம்பித்திருப்பதாகவும் தெரியவருகிறது. இவ்வாறே கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது என்பது நினைவு கொள்ளத் தக்கதாகும். அதுமட்டுமன்றி புடின் ரஷ்ய மக்களுக்கு உரையாற்றும் போது மேற்கு நாடுகள் கூட்டணி ரஷ்யாவை துண்டாட முயல்வதாகவும் அவ்வாறே 1991இல் மேற்குலகம் ரஷ்யாவை பிரிவினைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்தார். இது போருக்கான நியாயப்பாடாகவும் அண்மைய காலப்பகுதியில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக எழுச்சி பெற்ற ரஷ்ய மக்களுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் பதிலளிப்பதாகவே தெரிகிறது. எதுவாயினும் அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் எதிராக ரஷ்யாவின் நகர்வுகளை ரஷ்ய மக்கள் அங்கீகரிப்பார்கள் என்பது புடினுக்கு நன்கு தெரிந்த விடயமாகும். 

இரண்டாவது, மேற்குலகம் ரஷ்யாவை இராஜதந்திர ரீதியில் தோற்கடிக்கும் உத்தியை ஐ.நா. சபையில் பிரயோகிப்பதில் கவனம் கொண்டிருந்தது. உக்ரைன் மண்ணில் இராணுவத் தோல்வியையும் ஐ.நா.பரப்பில் இராஜதந்திரத் தோல்வியையும் மேற்குலகம் ரஷ்யாவுக்கு ஏற்படுத்த முயலுகிறது. அணுவாயுதப் போர் என்பது மிக நீண்டகாலமாக உச்சரிக்கப்படும் விடயமாகவே தெரிகிறது. இது ரஷ்யர்களுக்கும் ஆபத்தானதாக அமைவதுடன் அத்தகைய போரை உக்ரைனில் பயன்படுத்துவதென்பது ரஷ்யாவையும் ரஷ்ய மக்களையும் ஆபத்துக்குள் தள்ளும் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. எனவே இருதரப்பினதும் எச்சரிக்கையே அன்றி யதார்த்தமானதாக அமைவதில் கடினப் போக்குள்ளது. வேண்டுமாயின் ரஷ்யாவோ உக்ரைனோ இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த முயலலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமானவை. ஆனால் அவையும் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவும் பாரிய அழிவுகளைத் தரக்கூடியதாகவும் அமைய வாய்ப்புள்ளது.  

மூன்றாவது, ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்யாவிலும் மேற்குலகத்தாலும் தோற்கடிக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. ரஷ்யாவுக்குள் போர் ரஷ்யாவுக்கான தோல்வியை நோக்கியுள்ளதாகவும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வகையிலும் ரஷ்யத் தேசியவாதிகள் புடினுக்கு எதிராக எழுச்சி பெற்றுவருகின்றனர். இது போரை வெல்ல வேண்டிய கட்டாயத்தை புடினுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் போர் இலகுவில் வெற்றிபெறக் கூடியதொன்றாகத் தெரியவில்லை. அதனாலேயே கட்டாய இராணுவச் சேவையையும் அணுவாயுதம் பற்றிய உரையாடலையும் புடின் முதன்மைப்படுத்தி வருகின்றார். மறுபக்கத்தில் புடினுக்கு எதிரான ரஷ்ய மக்களின் எழுச்சியும் அதிகரித்துவருகிறது. மேற்குலகம் அதனை ஊக்குவித்து வருகிறது. அது மட்டுமல்ல ஆறுதடவைக்கு மேல் புடினை கொலை செய்வதற்கு முயற்சிகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்குள் நிலவும் எதிர்ப்புகளைவிட மேற்குலகத்தில் ரஷ்யாவுக்கும் புடினுக்கும் எதிரான அலை அதிகமாகவே உள்ளது. மேற்கின் பொருளாதார நெருக்கடிக்கு புடினே காரணம் என உச்சரிக்கும் மேற்குலக அரசியல் தலைவர்கள் அதனை உலகளாவிய ரீதியில் மாற்ற முயலுகிறார்கள். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்பதை வெற்றிகரமாக தமது பிரச்சாரத்தின் வாயிலாக மேற்கு நிறுவ முயலுகிறது. டொலருக்கான பெறுமான வீழ்ச்சியே இத்தகைய எதிர்ப்புவாதத்திற்கான அடிப்படையாகும்.  

எனவே பொருளாதார தடைகளும், இராஜதந்திர நகர்வுகளும் இராணுவ நடவடிக்கைகளும் என ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலை புடின் எதிர்கொண்டுவருகிறார். ஆனால் அவரது அணுகுமுறை  டொனெஸ்ட் மற்றும் லுஹான்ஸ் பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதேயாகும். அதற்கான அனைத்து நகர்வுகளையும் நெருக்கடியைத் தாண்டி கையாளும் போக்கினைக் காணமுடிகிறது. அமெரிக்காவுக்கு எதிரான அணுகுமுறைகள் புடினை உள்நாட்டில் மட்டுமல்ல மேற்கு அல்லாத நாடுகளாலும் பாதுகாக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் மேற்குலகத்தின் கூட்டு இராஜதந்திரமும் அரசியலும் ரஷ்யாவை தோற்கடிக்க தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கும் அதன் விளைவுகள் முழு உலகத்திற்குமானதாக அமைய வாய்ப்புள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments