காலை உணவின்மை, சத்தான சாப்பாடு இல்லை, இடை விலகல்; மலையகக் கல்வியில் தொடரும் மந்த நிலை | தினகரன் வாரமஞ்சரி

காலை உணவின்மை, சத்தான சாப்பாடு இல்லை, இடை விலகல்; மலையகக் கல்வியில் தொடரும் மந்த நிலை

'6984இற்கும் அதிகமான  பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கும்  திட்டத்துக்குள்  சில மலையக பாடசாலைகளும்  உள்வாங்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதல்ல. அனைத்து மலையக  பாடசாலைகளிலும் இந்த இலவச  உணவு விநியோகம் நடைமுறைக்கு  கொண்டு வரப்படுவது அவசியம்'

கொவிட் பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியின் பின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. இருந்தும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் திருப்தியாக இல்லை. நீண்ட விடுமுறையும் நீடித்து நிற்கும் விலைவாசி உயர்வும் ஒரு அயர்ச்சியை உண்டாக்கி விட்டதுபோல தெரிகிறது. 

மாணவர்களிடையே கற்பதில் ஒரு அசமந்தப் போக்கு நிலவுவதாக படுகிறது. பண்டாரவளை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஒரு நகர தமிழ் பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கற்கும் மாணவர் பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தமையும் காவல்துறை இதில் தலையை நுழைந்து எச்சரித்து பாடசாலை செல்ல வைத்ததையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். 

இவ்வாறு பாடசாலை இடைவிலகலுக்குச் சில பிரத்தியோக காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஏற்கனவே பெருந்தோட்டச் சிறார்களே பாடசாலை செல்லாதோர் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார்கள். இங்கு அடிப்படைக் காரணமாக குடும்ப நிலவரமே இதற்குத் தூண்டுகோளாக இருப்பதாகவே ஆய்வுகள் சுட்டுகின்றன. இதனை மறுப்பதற்கு இல்லை. சத்தான ஆகாரமின்மையால் துவண்டு போனவர்கள் பெருந்தோட்டப் பிரதேசத்திலேயே அதிகம்.  

காலை ஆகாரம் இல்லாமலே பல சிறுவர்களின் பொழுதுகள் இங்கு ஆரம்பமாகின்றன. வெறும் வயிற்றுடன் பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்கள் ஏராளம். இப்படி காலை உணவை இழப்பதன் மூலம் உடல் மற்றும் உள  ரீதியாக பல்வேறு பாதிப்புகள் உருவாகுவதாகவே சுகாதார நிபுணர்கள் கருத்துத்  தெரிவிக்கின்றனர். முக்கியமாக ஞாபகசக்தி குன்றல், பலவீனமான மனநிலை, உடல் வளர்ச்சி குன்றுதல் என்பன ஏற்படுவதாகவே எச்சரிக்கின்றனர்.  இதனால் பாதி வயிற்றோடு பாடசாலை செல்பவர்களும் மேற்படி தாக்கங்களுக்கு உள்ளாகவே செய்கின்றார்கள். ஏனெனில் அந்த பாதி வயிற்று உணவுகூட போஷாக்கு நிறைந்தது அல்லவே!  

படிக்க வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தாலும் போஷாக்குக் குறைந்த ஆகாரம் காரணமாக அசிரத்தையே மேலோங்குகிறது. போஷணை குறைபாடு என்பது பெருந்தோட்டத்துறை சிறுவர்களை போட்டு வதைசெய்யும் ஒரு சாபக்கேடு. இன்றைய நிலையில் ஊட்டம் தரக்கூடிய தானியங்கள் (பயிறு, கவ்பி, கடலை, சோயா, பீன்ஸ்) வாங்கி உண்பது என்பது இலேசுபட்ட காரியமா என்ன! தவிர பால்,  முட்டை, மீன், நெத்தலி போன்றவைகளின் விலைகள் கைக்கெட்டும் தூரத்திலா இருக்கின்றது. மாதம் ஒருமுறை (சம்பள நாள்) சத்தான சாப்பாடு உண்பதே பெரும்பாடு ஆகியுள்ள நிலையில் தினந்தோறும் சத்தான காலை சாப்பாடு சாத்தியமாகுமா? யோசிக்க வேண்டியதும்   கவனம் செலுத்தப்பட வேண்டியதுமாகும். 

அதேவேளை 6984இற்கும் அதிகமான பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்துக்குள்  சில மலையக பாடசாலைகளும்   உள்வாங்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதல்ல. அனைத்து மலையக பாடசாலைகளிலும் இந்த இலவச உணவு விநியோகம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவது அவசியமானது. 

ஏனெனில் பொருளாதார ரீதியில் பெருந்தோட்டத்துறை மிகவும் பின்தங்கியுள்ளது பெருந்தோட்டத்துறை. இதனால் வறுமை மட்டத்திலும் பின்னடைவு. இதனடிப்படையில் வறுமைக் கோட்டுக்கு கீழ்பட்ட நிலைமையிலேயே இச்சமூகம் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.    உள்நாட்டு, வெளி நாட்டு ஆய்வுகளிலும் இது உறுதி செய்யப்பட்ட சங்கதி. எனவேதான் பெருந்தோட்டச் சிறார்களின் சேமநலம் கருதிய வேலைத்திட்டங்கள் அவசியம் என்பதை ஐ.நாவின் யுனெஸ்கோ நிறுவனம் வரை உணர்ந்து சில நிவாரணங்களைக் காலத்துக்கு காலம் வழங்கி வருகின்றன.  

ஆனால் இவை போதுமானதல்ல. இவை தற்காலிக ஏற்பாடுகளாகவே இருக்க முடியும். எனவேதான் இந்த மந்தபோஷண அச்சுறுத்தலுக்கு நிரந்தரத் தீர்வு அவசியமாகின்றது. தவிர சிறுவர் உடல்நல, மனநல வளர்ச்சி சம்பந்தமாக பெருந்தோட்ட  பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களும் தேவைப்படுகின்றன. 

இல்லாவிட்டால் பெருந்தோட்டச் சிறார்கள்  சோம்பேறிகளாகி விடுவதைத் தவிர்ப்பதற்கில்லை. இதை உறுதிப்படுத்துவது போலவே ஹிஷாலியின் இழப்புக்குப் பின் மீண்டும் ஒரு சாவுச்செய்தி சந்திக்கு வந்துள்ளது.   மஸ்கெலியா மொக்கோ தோட்டத்தைச்  சேர்ந்தவர்  ரமணி. 16வயது,  6மாதத்துக்கு முன் கம்பஹாவிலுள்ள முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்கவின் உறவினர்  வீட்டுக்கு வேலைக்காக போயிருக்கிறார்.

கடந்த 19ஆம் திகதி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மூச்சித் திணறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது உடலும் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. குடும்ப வறுமைச் சூழல் பாலகியொருத்தியை பலிவாங்கியிருக்கிறது. அப்பா ஏற்கனவே குடும்பத்தை கைவிட்டு போய்விட்டாராம். அம்மா மறுமணம் செய்து கொண்டாராம். அநாதையான ரமணிக்கு அடைக்கலம் கொடுத்தவர் அவரது மாமா. இருந்தும் என்ன! அவருக்கு குடும்பச்சுமை. வேலைக்காக அனுப்பினார்    ரமணியை. அது ரமணியின் உயிருக்கு உலை வைத்து விட்டது. இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் பெருந்தோட்டச் சமூகம் பால்ய வயது சிறுவர், சிறுமியரைப் பலிகடாக்களாக்கப் போகின்றதோ!. 

இன்றைய நாளது வரை சிறுவர்  தொழிலாளர்கள் பெருந்தோட்டப் பிரதேசங்களிலேயே அதிகம். அதிலும் இவர்களின் பலர் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். வயதுக்கு மீறிய வேலைப்பளு காரணமாகவே உபத்திரவங்களும்  சில வேலைகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 18வயதுக்கு குறைந்தவர்களே வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். எனினும் இக்குற்றத்தைப் புரிவோர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதாகத் தெரியவில்லை.  

குடும்ப கஸ்டத்தைக் காணச் சகிக்காத நிலையிலேயே அநேக சிறுவர்கள் பாடசாலை இடைவிலகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறானவர்களைப் பிடிக்க எப்போதும் தமது ஏமாற்று வலையோடு தரகர்கள் மலையகத்தில் உலா வருகின்றனர். இவர்களின் பொய்யுரைகளை நம்பி தமது இளம்பராய பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர். இதனால் ஏற்படும் விபரீதங்களை உணராமல் சிறார்களின் எதிர்காலத்தை நாசப்படுத்துகின்றார்கள்.  

ஹிஷாலினி, ரமணி போன்ற பலருக்கு ஏற்பட்டது போன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து அதை ஊடகங்களும் சிவில் அமைப்புகளும் பிரதானபடுத்தி குரல் எழுப்பும்போது மட்டும் அறிக்கை விடும் அமைச்சர்கள் அப்புறம் அதை அப்படியே மறந்து விடுகின்றனர்.

சிறுவர் என்ற  ரீதியில் வேலைக்கு சென்று உயிரிழப்பவர் பட்டியலிலும் பெருந்தோட்டத்துறையே முன்னணி வகிக்கின்றது. பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி இடை விலகலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிறுவர்களை உற்சாகப்படுத்தக்கூடிய சமூக அபிவிருத்தி இன்னும் இங்கே ஏற்படவில்லை. ஏற்படும் என்பதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை.  

இதே சமயம் மண்ணெண்ணெய் விலை ஆகாயத்தை எட்டிவிட்டது.  எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாக பல குடும்பங்கள் மண்ணெண்ணெய் அடுப்புகளிலேயே உணவு சமைக்கின்றன. எனவே தற்போது மண்ணெண்ணெய் விலை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தோட்ட மக்களை மேலும் சங்கடத்தில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் பிரச்சினைகளைள எதிர்நோக்கியுள்ள மீனவ சமூகத்துக்கும் பெருந்தோட்டச் சமூகத்துக்கும் நிவாரணம் வழங்கப்போவதாக அமைச்சர் காஞ்சன கூறியிருக்கிறார். ஆனால் அது எவ்வாறு அமையும் என்பதில் விளக்கம் போதுமானதாக இல்லை.   

பன். பாலா

Comments