பெருந்தோட்ட மக்களுக்கு 1987ஆம் ஆண்டு காணி, வீட்டுரிமை பத்திரங்கள் இல்லை | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட மக்களுக்கு 1987ஆம் ஆண்டு காணி, வீட்டுரிமை பத்திரங்கள் இல்லை

மலையகத்தில் 1987ஆம் ஆண்டுக்கு பின் பெருந்தோட்ட மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள  வீடுகளுக்கான  காணி மற்றும் வீட்டுரிமை பத்திரம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக கண்டி அபிவிருத்தி தாபனம் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 50ஆயிரத்திற்கு மேலான கையொப்பங்களை பெற்று மகஜர் கையளிக்கவுள்ளது.

இவ்வாறு கையளிக்கவுள்ள மகஜருக்கான கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு

கண்டி சமூக அபிவிருத்தி தாபன பணிப்பாளர் க.முத்துலிங்கத்தின் வழிகாட்டலில் தாபனத்தின் நுவரெலியா மாவட்ட திட்ட உத்தியோகஸ்தர் ஆர்.பாலாம்பிகை தலைமையில் நேற்றுக் காலை நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை நகரில் இடம்பெற்றது.

இதன்போது கந்தப்பளை பிரதேச தோட்டப் பகுதிகளை சேர்ந்த 250க்கு மேற்பட்ட மக்கள்  கொட்டும் மழையை பொருட்படுத்தாது தங்களது கையொப்பங்களை இட்டனர்.

இதனை தொடர்ந்து இந் நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய ஆர்.பாலாம்பிகை கருத்து தெரிவிக்கையில்.....

மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தில் வீடற்ற மக்களுக்கு 1987ஆம் ஆண்டுக்கு பின் 37ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் 07ஆயிரம் வீடுகளுக்கு கடன் வழங்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அக் கடன் தொகையை வீட்டு உரிமையாளர்கள் மீள செலுத்தும் வரை அவர்களுக்கான காணி உரிமை மற்றும் வீட்டு உரிமைக்கான எந்தவோர் அரசாங்க உறுதி பாத்திரங்களும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இவ்வாறு உறுதி பத்திரங்கள் இன்றி வசிக்கும் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் மற்றும் வீட்டு உறுதி பத்திரம் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி அண்மையில் கண்டி சமூக அமைப்பின் பணிப்பாளர் க.முத்துலிங்கம் தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

இதையடுத்து மலையகத்தில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 50ஆயிரத்திற்கும் அதிகமான கையெழுத்துகளை பெற்று அதை ஜனாதிபதியின் கவனத்திற்கு  கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் ஒரு நிகழ்வு நேற்று கந்தப்பளை நகரில் இடம்பெற்றது.

கந்தப்பளை  சந்தையில் நடைபெற்ற இந்த கையெழுத்து பெறும் நிகழ்வில் சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டனர். இதன் தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்தின் பிரதான நகரங்களில் கையொப்பம் பெறும் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆ.ரமேஸ்

Comments