அரச ஊக்குவிப்பு இல்லாததால் நுவரெலியாவில் அருகிவரும் கால்நடை வளர்ப்பும் பால் உற்பத்தியும் | தினகரன் வாரமஞ்சரி

அரச ஊக்குவிப்பு இல்லாததால் நுவரெலியாவில் அருகிவரும் கால்நடை வளர்ப்பும் பால் உற்பத்தியும்

பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கம் தவறியதால்தான இன்று வெளிநாட்டு பால் மாவை எதிர் பார்த்திருக்க வேண்டிய சூழ் நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மத்திய அரசாங்கத்திலும் மாகாண சபைகளிலும் கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு கால்நடைகள் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் பால் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உயரவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தொழில்களில் ஒன்றான கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இதற்கு காரணம் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் எந்த ஊக்குவிப்பும் செய்வதில்லை என்கிறார் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் ஆர். இராஜாராம்.

பால் உற்பத்தியில் பிரதான இடத்தை நுவரெலியா மாவட்டம் வகித்து வந்தது. ஆனால் தற்பொழுது புண்ணாக்கின் விலை அதிகரிப்பு, கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகள் குறைவு, நல்ல இன கரவை பசுக்கள் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிரமம், கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாதது போன்ற காரணங்களாலேயே கால்நடை வளர்ப்பவர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் 50கிலோ எடையுள்ள ஒரு மூட்டை தேங்காய் புண்ணாக்கு ஆயிரம் ரூபா முதல் 1500ரூபா வரையில் விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு மூட்டை புண்ணாக்கு 7000ரூபாவிற்கு தனியார் வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. நுவரெலியா பிரதேசத்தில் ஒரு லீற்றர் பாலை 120ரூபா முதல் 130ரூபாவரையில் நெஸ்லே, மில்கோ மற்றும் பெல்வத்த நிறுவனங்கள் கொள்வனவு செய்கின்றன. இதனால் பாலை விற்று வரும் வருமானத்தை விட அதிக பணத்தை கால்நடைகளின் உணவிற்காக வளர்ப்பாளர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன் தேசிய பால் உற்பத்திக்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தது. வெளிநாடுகளிலிருந்து நல்ல இன கரவை பசு மாடுகளை இறக்குமதி செய்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச பாற் பண்ணைகளான அம்பேவல, போபத்தலாவ உட்பட பல அரச பண்ணைகளுக்கு விநியோகித்தார்கள்.

பண்ணைகளில் வளர்க்கப்பட்ட நல்ல கரவை பசுக்களின் கன்றுக் குட்டிகளையும் பசுமாடுகளையும் வெளியாருக்கு வங்கிக்கடன்கள் மூலம் வாங்கிக் கொள்ளக்கூடிய வசதி முன்னர் காணப்பட்டது.

அதேபோல தனியாரிடமுள்ள மாட்டுக்கொட்டகைகளை திருத்துவதற்காக அரச மிருக வைத்தியசாலைகள் மூலம் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கால்நடைகள் நோய்வாய்ப்பட்டால் அரச மிருக வைத்தியர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது மருந்து தட்டுபாட்டால் தனியார் மருந்தகங்களில் அதிக பணம் செலுத்தி மருந்து பெற வேண்டியுள்ளது. அதேபோல நுவரெலியாவில் பல பிரதேசங்களில் அரச மிருக வைத்தியர்கள் பணியில் இல்லை.

எனவே தனியார் மிருக வைத்தியர்களையே நாட வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டும் என்பது வெளிப்படையான விடயம். இவ்வளவு செலவுகளைத் தாங்கிக் கொண்டு லீட்டர் பாலை 130ரூபாவுக்கு விற்றால் எப்படி இலாபம் கிடைக்கும்?

மலையக பெருந்தோட்டங்களில் தேயிலை தொழிலுக்கு அடுத்தப்படியாக விவசாயமும் கால்நடை வளர்ப்புமே பிரதான தொழிலாக காணப்படுகிறது. ஆனால் இன்று புண்ணாக்கின் விலை உயர்வு கால் நடைகளுக்கான வைத்திய செலவு காரணமாக கால்நடை வளர்ப்பு தொழிலை கை விட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தோட்டப்பகுதியில் மாட்டுக்கொட்டகைகளை அமைப்பதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவதில்லை. கடந்த காலங்களில் ஒவ்வொரு தோட்டங்களிலும் பொதுவான மாட்டுக் கொட்டகைகள் காணப்பட்டன. அவ்வாறான மாட்டுக்கொட்கைகளை தற்பொழுது காண முடிவதில்லை.

எனவே பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் கடந்த காலங்களைப் போல அரசு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இது இத் தொழிலுக்கு உயிர் நாடியான விஷயம்.

ஊக்குவிப்பு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் நுவரெலிய மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் கால்நடை வளர்ப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்து கால் நடை வளர்ப்பாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் காணிகள் காணப்பட்டன. அவை அருகி வருகின்றன. உதாரணத்துக்கு முன்னர் ஹாவஹெலிய, மேஸ்தி தோட்டம், ஸ்கிறாப் தோட்டம் உட்பட நுவரெலிய நகர்ப் பகுதியை சேர்ந்த பசுக்கள் கிரகறிவாவிப் பகுதியிலும் குதிரைப் பந்தயத் திடலிலும் மேய்ந்து வந்தன.

இப்போது இந்த இரண்டு மேய்ச்சல் காணியிலும் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் கிராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் நியமனம் பெற்றிருந்தார்..

அவர் அமைச்சு பதவி வகித்த காலத்தில் மத்திய மாகாணத்தில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் கால்நடை அபிவிருத்தி, பால் உற்பத்தி மற்றும் பால்மா உற்பத்தி, பாலுணவு உற்பத்தி என அபிவிருத்தி கண்டிருந்தன. பெருந் தோட்டப் பகுதிகளிலும் தொழிலாளர் குடும்பங்கள் தமது தோட்ட தொழிலுக்கு அப்பால் கால் நடை வளர்ப்பில் அதிகளவாக ஈடுப்பட்டிருந்தனர். பால் உற்பத்தியிலும்,கால்நடை உரங்களை விற்பனை செய்வதிலும் இலாபமீட்டி வந்தனர்.

பின்னர் கடன் அடிப்படையிலும் மிருக வைத்தியசாலைகள் ஊடாக கால்நடைகள் வழங்கப்பட்டன, பால் பண்ணைகளும் விருத்தியாயின. பாலுணவு விற்பனை நிலையங்கள், பால் சேகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டன, பொது பட்டிகள் தோட்டப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் பொதுப் பட்டிகள் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த அரசுகள் கால்நடை அபிவிருத்தி அமைச்சை வெவ்வேறு அமைச்சர்களிடம் கையளித்ததில் மலையகத்திற்கான கால்நடை அபிவிருத்திக்கு உதவிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. அதன் அபிவிருத்தி படிப்படியாக அரிதாகி இன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் மாகாண சபைகளில் விவசாயத்துறை, கால்நடை அபிவித்தி துறை அமைச்சு ஊடாக மத்திய மாகாணத்தில் தோட்ட மற்றும் கிராமப்புற பகுதிகளில் கால்நடை அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்போது மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஊடாக கிடைக்க கூடிய உதவிகளும் சரியாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிடைப்பதில்லை.

மறுபுறத்தில் கால்நடை உணவு வகைகளின் விலையேற்றம், மாடுகள் இறக்குமதி செய்யப்படாமை, கால்நடை வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மாடு வளர்ப்பாளர்கள் ஆர்வம் குன்றிக் காணப்படுகின்றனர். ஏதோ விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினரே கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளனர். அரசாங்கம் கால்நடை உற்பத்தியை விருத்திப்போம், பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்வோம் என்று சொல்கிறதே தவிர கால்நடை வளப்பாளர்களை ஊக்கப்படுத்த எத்தகைய நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அத்துடன் அரசாங்க கால்நடை வைத்தியசாலைகளில் மருந்துகள்,வைத்திய ஊழியர்கள், உத்தியோகஸ்தர்கள், வெளிக்கள சேவையாளர்கள் போதுமான அளவில் இல்லை. தோட்டப் பகுதிகளில் புற்கள் வளர்க்க தரிசுநிலங்கள் வழங்குவதில்லை. பட்டிகள் அமைக்க இடங்களும் வழங்கப்படுவதில்லை. இவ்வாறாக ஏகப்பட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதால் மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் பாதிப்பை எதிர் கொண்டுள்ளது.

பசு மாடுகளை சினைப்படுத்தவும் பசு மாடுகளுக்கு நோய் ஏற்பட்டால் குணப்படுத்தவும் தனியார் வைத்தியர்களுக்கு 5000/= ரூபாய் தொடக்கம் 7000/=ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

எனவே சகல வளங்களும் கொண்ட மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் பசு மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தி, பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

நூரளையூரான்

Comments