கடும் மழையால் நுவரெலிய மரக்கறி உற்பத்தி பாதிப்பு | தினகரன் வாரமஞ்சரி

கடும் மழையால் நுவரெலிய மரக்கறி உற்பத்தி பாதிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிக மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கந்தப்பொல, தலவாக்கலை, நானுஓயா, கொட்டக்கலை, அட்டன், மஸ்கெலியா, டிக்கோயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ், வட்டவளை, கினிகத்தேன, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழையும் பலத்த காற்றும் நுவரெலியா மாவட்டத்தின் மரக்கறிச் செய்கையை பாரிய சேதத்துக்குள்ளாக்கியுள்ளது. கன மழையால் மாவட்டத்தில் பலநூறு ஏக்கருக்கும் அதிகமான மரக்கறி செய்கை நாசமடைந்துள்ளதாகவும், இதனால் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்க நேரிடும் என்றும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.   இதனால் எதிர்வரும் காலங்களில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு, மூன்று நாட்களாக பெய்த கடும் மழையால் விவசாய நிலங்களில் நீர் நிரம்பி, பயிர்கள் முற்றிலும் அழிந்து வருகின்றன. நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கந்தப்பொல, அக்கரப்பத்தனை, டயகம, பத்தனை, கொட்டக்கலை ஆகிய பிரதேசங்களில் மரக்கறி பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன.

கன மழை மற்றும் மண்சரிவால் வீதிகள் மூடப்பட்டமையினால் மரக்கறி தோட்டங்களுக்கு அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் வருகையும் அதிகளவில் குறைந்துள்ளதாக மரக்கறி தோட்ட உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இயற்கை அனர்த்தங்களினால் ஒரு வருடத்தில் பல தடவைகள் மரக்கறி செய்கை பாதிக்கப்படுகின்றது. இதனால் மரக்கறி செய்கை மூலம் குறிப்பிட்ட ஒரு இலாபத்தை ஈட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒரு தடவை பயிரிடப்பட்ட பயிர்கள் குறிப்பிட்ட 3மாதத்துக்குள் அறுவடை செய்வதற்கு முன்னர் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பக்கம் இயற்கையின் கோரத்தாண்டவம் மற்றொரு பக்கம் காட்டு விலங்குகளிடமிருந்து இன்னொரு பக்கம் உரம் மற்றும் கிருமிநாசினிகளின் பற்றாக்குறை இ;பபடி சொல்லென்னா துன்பங்களை மரக்கறி உற்பத்தியாளர்கள் அனுபவிக்கின்றனர். அதிக மழை காலங்களிலும் அதிக வெயில் காலங்களிலும் மரக்கறி செய்கையின் போது செடிகளுக்கு பல்வேறு விதமான நோய்த்தாக்கங்கள் உண்டாகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு கிருமி நாசினிகள் தேவைப்படுகின்றன. நோயை கட்டுப்படுத்தும் கிருமிநாசிகளின் பற்றாக்குறையினாலும் மரக்கறி உற்பத்தி பெருமளவில் வீழ்ச்சியடைகின்றது.

இவ்வாறான பல்வேறு இன்னல்களை கடந்து வந்து அதனை அறுவடை செய்தால் அதற்கு நியாயமான விலைகள் சந்தையில் கிடைப்பதில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையினால் பாரியளவில் மரக்கறி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தங்களுடைய விளைச்சலை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளது.

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளே நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. தொடர்ச்சியாக பாராமரிக்கப்பட்டு வந்த மரக்கறி செடிகள் தீடீரென ஏற்படும் வானிலை மாற்றத்தினால் முற்றாக அழிந்து விடுகின்றன. மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதனை உற்பத்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு மேலும் மூன்று மாதங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான மனித வளம், நிதி, உரம் மற்றும் கிருமிநாசினி போன்றன மீண்டும் தேவைப்படுகின்றன. இதனால் பெருமளவு பணம் விரயமாகிறது. இவ்வாறான நிலமையினால் மரக்கறி உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் நட்டமடைகின்றனர்.  இது போக, பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர். பாரிய கடன் சுமையில் வீழ்கின்றனர். அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வருட கணக்காகிறது. மரக்கறி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க இந்த அரசாங்கமும் தவறிவிட்டது. விவசாய கடன் உதவிகள், மரக்கறி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நல்ல பல திட்டங்கள் இந்த அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. தங்களின் வீழ்ச்சிக்கு இதுவே காரணம் என மரக்கறி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் உருளைக்கிழங்கு மற்றும் ஏனைய மரக்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனை விற்பனை செய்துகொள்ள முடியாமல் வியாபாரிகளும் மரக்கறி உற்பத்தியாளர்களும் இம்  மழைக்காலத்தில் திண்டாடுகின்றனர்.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு வியாபாரி நாளொன்றுக்கு 3000கிலோ முதல் 5000கிலோ மரக்கறி மற்றும் உருளைக்கிழங்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 100கிலோ மரக்கறிகளைக்கூட விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் மரக்கறி விலையிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

உதாரணமாக,  உருளைக்கிழங்கு, போஞ்சி, கரட், லீக்ஸ், முள்ளங்கி, கோவா ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிக்கலாம். எதிர்காலத்தில் இந்த மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மரக்கறி தோட்டங்களிலும் மரக்கறி வியாபாரிகளிடம் தொழில்புரியும் தொழிலாளர்களும் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

எனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மரக்கறி உற்பத்தியாளர்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மரக்கறி உற்பத்தியை ஊக்கவிக்கக்கூடிய நல்ல பல திட்டங்களை உருவாக்கி அதனூடாக மரக்கறி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.

தொடர் மழைக்காலத்தில் புறொய்லர் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் அவை நோய் கண்டு இறந்து விடுவதாகவும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் கவலைப்படுகின்றனர்.

பொதுவாகவே நாட்டுக் கோழிகள் மழைக் காலத்தில் முட்டையிடுவதைக் குறைத்துக் கொள்ளுமாம். இதே சமயம் மலையகப் பகுதிகளில் சோளம் கிடைப்பது கஷ்டம். ஒரு கிலோ 80,  90ரூபாவாக இருந்த சோளம் இப்போது 360,  390ரூபாவுக்கே கிடைக்கிறது. அதேபோல 130ரூபாவுக்கு விற்பனையான கிலோ கோழி உணவு 390க்கு விற்பனையாகிறது. பண்ணைத் தொழிலுக்கும் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் என்கிறார்கள் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர்.

தலவாக்கலை
பி. கேதீஸ்

Comments