சூரிய குடும்பம் | தினகரன் வாரமஞ்சரி

சூரிய குடும்பம்

சூரியனையும், அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் சூரியக் குடும்பம் என அழைக்கின்றனர். சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இந்த எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உட்பட சிறிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

கோள்களை கிரகங்கள் என்றும் சூரியனை விண்மீன், நெருப்புக்கோளம் என்றும் அழைக்கின்றனர். சூரியன் அதிக வெப்பம் கொண்டுள்ளது. என்றாலும் அதன் துணையின்றி உலகில் உயிரினங்கள் வாழ முடியாது. கோள்கள் அனைத்தும் சூரியனை ஒரு மையமாகக் கொண்டு வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் சூரியனை மிகப்பெரிய வெப்பப்பந்து என்று குறிப்பிட வேண்டும்.

சூரியனை சுற்றிவரும் கோள்கள்

புதன்

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன். இதுவே சூரிய குடும்பத்தில் முதல் கோளாகும். மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே விரைவாக சுற்றி வருகிறது. இதற்கு துணைக் கோள்கள் கிடையாது. 88நாட்களுக்குள்ளாக சூரியனை சுற்றி வந்து விடுகிறது.

வெள்ளி

அதிக அளவில் ஒளிரும் வெள்ளிக்கோளை பூமியிலிருந்து அதிகாலையில் பார்க்க முடியும். இது சூரியனை கிழக்கு மேற்காகச் சுற்றி வருகிறது. இது சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோள். சூரியனிடமிருந்து 10கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சுற்றி வருகிறது.

பூமி

மனிதர்களின் இருப்பிடமாக திகழும் பூமிதான் மூன்றாவது கோள். சூரிய குடும்பத்தில் காற்று, நீர் போன்றவை சூழப்பட்டு உயிரினங்கள் வசிக்கக்கூடிய கோளாக பூமி மட்டுமே கருதப்படுகிறது. திடமான கோளாக திகழும் பூமியைச் சுற்றி காற்று மண்டலம் உள்ளது. அதில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஓட்சிசன் நிறைந்து இருப்பதால் புவியில் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழமுடிகிறது. எனவே தான் பூமி ஒரு உயிர்கோள் என புகழப்படுகிறது. இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியை மையமாக கொண்டு சந்திரன் துணைக் கோளாக சுழல்கிறது. சூரியனை ஒருமுறைச் சுற்றி வர பூமி 365நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

செவ்வாய்

சூரியக் குடும்பத்தின் நான்காவது கோள் செவ்வாய். பூமி மற்றும் வெள்ளி ஆகிய இரண்டோடு ஒப்பிடுமிடத்து மிகச்சிறிய கிரகமாக உள்ளது. சிவப்பு நிறமுடையதால் செவ்வாய் எனப் பெயர் பெற்றது. பூமியின் அளவில் பாதியாக இருக்கும் இது மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது.

செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள் உண்டு. இதில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என உலக நாடுகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது சூரியனைச் சுற்றி வர 687நாட்கள் ஆகிறது.

வியாழன்

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் ஐந்தாவது இடத்தில் சூரியனை சுற்றி வருகிறது. இக்கோளில் பெரிய சிவப்பு வட்டம் உள்ளது. இதனை பெரிய வாயுக் கோள் எனவும் அழைக்கின்றனர். இது சூரியனை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வலம் வருகிறது. 63துணைக்கோள்கள் உடைய இக்கோள் சூரியனை சுற்றிவர சுமார் 11ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.

சனி

ஆறாவது இடத்தில் உள்ள இந்த சனிக் கோளைச் சுற்றி பெரிய வளையங்கள் உள்ளன. நுண்கற்கள், தூசு, பனி போன்றவற்றை கொண்ட தொகுதிதான் வளையம் போலத் தோற்றமளிக்கிறது. மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் சுழலும் சனிக் கோளுக்கு 60துணைக் கோள்கள் உள்ளன. சனிக்கோள் சூரியனை சுற்றி வர சுமார் 29ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.

யுரேனஸ்

சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸை சுற்றி வாயுக்களால் ஆன வளையங்கள் காணப்படுகின்றன. இது குளிர்ச்சியான கோள். இதற்கு 27துணைக் கோள்கள் உள்ளன. இதில் டைட்டானியா, ஒபேரான், அம்பிரியல், ஏரியல் மற்றும் மிராண்டா ஆகிய கோள்கள் மிகப்பெரிய கோள்களாகும். இது சூரியனை சுற்றிவர 84ஆண்டுகள் ஆகின்றன.

நெப்டியூன்

எட்டாவது கோள் தான் நெப்டியூன். இக்கோளைச் சுற்றியும் வாயு வளையங்கள் உள்ளன. இது மேற்கில் இருந்து கிழக்காக சூரியனை தன்னைத்தானே சுற்றிவரும். இதற்கு 13துணைக் கோள்கள். மேகங்கள் சூழ்ந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இக்கோள் சூரியனைச் சுற்றிவர சுமார் 160ஆண்டுகளுக்கு மேலாகிறது.

புளூட்டோ

ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்ட புளூட்டோவில், கோளுக்குரிய பண்புகள் இல்லாததால் குறுங்கோள் என புதிதாக வகைப்படுத்தியுள்ளனர். 1930ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, சிறுசிறு கற்கள், பெரும்பாறைகள், வன்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு உருவானதாக கருதப்படுகிறது. இதுபோன்று இன்னும் பல குறுங்கோள்களும் உள்ளதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆர். ராஹினி,
வெளிமடை

Comments