சேர் ஐசக் நியூட்டன் | தினகரன் வாரமஞ்சரி

சேர் ஐசக் நியூட்டன்

உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர்  சேர் ஐசக் நியூட்டன். 

விவசாய குடும்பத்தில் பிறந்த நியூட்டன் தனது கல்வியை கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். சிறுவயதில் இருந்தே அறிவியல் ஆர்வம் கொண்டவரான நியூட்டன், தண்ணீரில் வேலை செய்யும் கடிகாரத்தை அப்போதே கண்டுபிடித்தார். விடாது துரத்திய ஏழ்மையின் காரணமாக 14வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவருடைய மாமா நியூட்டனின் கல்வி ஆசை நிறைவேற உறுதுணையாக இருந்து உதவினார். அதன் மூலம் பள்ளி படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இளங்கலை பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது. நவீன கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை அவர் கண்டுபிடித்தார். பைனாமியல் தியரம் மற்றும் கால்க்குலஸ் எனும் நவீன கணிதத்தின் பிரிவுகளை கண்டறிந்தார்.  

ஒரு முறை தோட்டத்தில் நடந்து செல்லும்போது ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து விழுவதை கண்டார். எல்லா காலகட்டத்திலும் வாழ்ந்த மனிதர்கள் பார்த்திருக்கும் காட்சிதான் அது. ஆனால் அது இயற்கை என்று எண்ணிவிட்டு செல்வார்கள். ஆனால் நியூட்டனோ அதை பற்றி சிந்தித்தார்.

ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று கருதினார். விளைவு, புவி ஈர்ப்பு சக்தி என்ற ஒன்று இருப்பதால் தான், பொருட்கள் அனைத்தும் கீழே விழுகிறது என்பதை கண்டுபிடித்தார். இது அவருடைய கண்டுபிடிப்புகளில் மகத்தான சாதனையாகும். 

அதன் பின்னர் நியூட்டனுக்கு டிரினிட்டி கல்லூரியில் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர் தொலைநோக்கிகளை கண்டுபிடித்தார். இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு நவீன தொலைநோக்கிகள் அனைத்துமே நியூட்டனின் தொலைநோக்கியை அடிப்படையாக கொண்டவையாகும்.    21முதல் 27வயது வரை நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.  அதன் பிறகு 1703-ல் ராயல் சொசைட்டியின் தலைவராக நியூட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1705-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி, நியூட்டனின் ஆராய்ச்சிகளை அறிந்து வியந்தார். அவருக்கு, 'சேர்' பட்டம் வழங்கி கௌரவித்தார்.  அதன் பிறகு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நியூட்டன், தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களால் அவதிப்பட்டார். 1727ஆம் ஆண்டு மார்ச்  31ஆம் திகதி  நியூட்டன் இறந்தார்.    நியூட்டன் பிறவியில் ஒரு மேதை. அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டுபிடித்து சொல்ல முடிந்தது. அத்தகைய மாமேதையின் சாதனைகள் மகத்தானவை, போற்றத்தக்கவை. 

ஆர்.ராஹினி
வெளிமடை

Comments