ரணில் நிறுவும் புதிய அரசு; இவர்கள் என்ன சொல்கிறார்கள்? | தினகரன் வாரமஞ்சரி

ரணில் நிறுவும் புதிய அரசு; இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள  பொருளாதார பின்னடைவு அதனை மையப்படுத்தியதாக அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு. மக்கள் அன்றாடம் தங்களுடைய தேவைகளுக்காக பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை. நாடு முழுவதும் போராட்டங்கள். இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவிவிலகல். அதன் பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள். தொடரும் போராட்டங்கள். இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் இலங்கையின் 26வது பிரதமராக  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ,   ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவினால் கடந்த வியாழக்கிழமை (12) நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறான ஒரு நிலைமையில் மலையகக் கட்சிகள் தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை எவ்வாறு கையாளப்போகின்றார்கள். புதிய பிரதமரின் சாதக பாதக தன்மைகள் என்ன? இந்த நியமனத்தை மலையக அரசியல் தலைவர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்? இதனை அறிந்து கொள்ளும் முகமாக அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது வழங்கிய கருத்துக்கள். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் எது எப்படியாக இருந்தாலும் மிகவும் அவசரமாக தீர்த்து வைக்க வேண்டிய முக்கிய பிரச்சினைகளை தாமதமின்றி தீர்க்கவும் தாங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற வகையில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை பிரதமருக்கு வழங்குவதாகவும் பிரதமருடைய முயற்சிகளுக்கு ஒத்துழைத்து இந்நாட்டை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி  

இன்றைய நிலையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். எனவே அவர்களுடைய பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் வரிசைகளில் நிற்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அவர்களுடைய பசி பட்டினியை இல்லாமல் செய்த ஒரளவிற்கு நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் செயலாளருமான சுப்பையா சதாசிவம் குறிப்பிடுகின்றார். 

மேலும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் எங்களுடைய நாட்டு பொருளாதாரத்தின் மூலமாக அதனை செய்ய முடியாது. வெளிநாட்டு உதவிகளை பெறவேண்டும். அந்த உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய அனுபவம் மிக்கவர்தான் இந்த பிரதமர். பலர் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். அதற்கு ஒரு கமிசன் அமைத்து அதனை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கலாம். ஆனால் மக்களுடைய பசியைத் தீர்க்க வேண்டும். எனவே இந்த நேரத்தில் அனுபவமும் வெளிநாட்டு தொடர்புகளை கொண்ட ஒருவரை நியமிப்பதே சிறந்தது. அந்த வகையில் இந்த நியமனம் பொறுத்தமானது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் தீரமானங்களை எடுக்க வேண்டும். 

வடிவேல் புத்திரசிகாமணி- முன்னாள் அமைச்சர்

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையில் இது ஒரு சரியான தெரிவு. மேலும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் சாணக்கியம் வெளிப்படுகின்றது. தனி ஒரு மனிதனாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பிரதமராகியிருக்கிறார். மேலும் கடந்த காலங்களில் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டவுடன் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அனைத்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவைகளாகவே இருக்கின்றது.நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு அவரால் மாத்திரமே தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும். 

பிரதமர் பதவியேற்ற சில நிமிடங்களில் அவருக்கு சர்வதேச ரீதியாக பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் சர்வதேசத்துடன் இவர் கொண்டுள்ள தொடர்புகளை தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளை குறிப்பிடலாம். அதற்கு காரணம் அவர் ஜனநாயக நாடுகளுடன் கொண்டுள்ள மிகவும் நெருக்கமான உறவு. இந்த நாடுகளின் ஜனநாயகத்தை நிலைநாட்டும் அமைப்புகளின் தலைவராகவும் பிரதித் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார். இதன் காரணமாக சர்வதேசம் அவரை மதிக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர. அவரை விமர்சனம் செய்வதால் எதுவும் நடக்காது. எனவே அடுத்து வருகின்ற ஆறு மாதத்தில் பிரச்சினைகளுக்கு ஒரளவு தீர்வுகண்டு ஒரு தேர்தலை நோக்கி செல்லலாம். 

மலையக மக்கள் முன்னணி 

எங்களை பொறுத்தளவில் நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக தொடர்ந்தும் ஜக்கிய மக்கள் சக்தியுடன் செயற்படுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். ஜனாதிபதி இவரை எவ்வாறு பிரதமராக தெரிவு செய்தார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியே? காரணம் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கொண்டவர். மக்களால் கடந்த தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர். அவருடைய கட்சியும் நிராகரிக்கப்பட்டது. 

எனவே இவரை எவ்வாறு பிரதமராக தெரிவு செய்ய முடியும்? ஜனாதிபதி அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பாராளுமன்றத்தில் செல்வாக்கு பெற்ற ஒருவரை பிரதமராக தான் நியமிக்கவுள்ளதாக குறிப்பிடுகின்றார். அதற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றார். ரணில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு ஒரு சில நிமிடங்களில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கின்றார். எனவே இதனை எல்லாம் பார்க்கின்ற பொழுது ஏதோ ஒரு இடத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை காண முடிகின்றது. 

எனவே இவருடைய தெரிவானது நாட்டு மக்களுக்கு நன்மைபயக்காது. ராஜபக்ச குடும்பத்திற்கு நன்மை பயக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் காரணமாகவே இவரை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். கடந்த அரசாங்கம் தேர்தலின் பொழுது மத்திய வங்கியை உடைத்தவர்களை தாங்கள் வெற்றி பெற்றவுடன் எங்கிருந்தாலும் காதை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து கைது செய்வதாக கூறினார்கள் நடந்ததா? ஏனென்றால் அவர்கள் ரணிலை காப்பாற்றுவார்கள். ரணில் இவர்களை காப்பாற்றுவார். இதுதான் அவர்களுக்குள் இருக்கின்ற ஒற்றுமை. எனவே இதுவும் ஒரு ராஜபக்சக்களை பாதுகாக்கின்ற இன்னும் ஒரு சித்த விளையாட்டு. நாங்கள் முழுமையான இந்த மக்களுடனேயே இருக்கின்றோம். 

பழனி திகாம்பரம் - தொழிலாளர் தேசிய சங்கம் 

தமிழ் முற்போக்கு கூட்டணியை பொறுத்தளவில் நாங்கள் அனைவரும் கோட்ட கோ என்ற மக்களின் எண்ணங்களுடனேயே இருக்கின்றோம். அதற்கு மாறாக நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் செயற்பட மாட்டோம். எனவே எங்களுடைய எதிர்பார்ப்பு மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்களோ அதனை நோக்கி பயணிப்பதே. நாங்கள் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்க மாட்டோம். அது மட்டுமல்ல, நாளை சஜித் பிரேமதாச இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்தாலும் நான் அந்த இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்க மாட்டேன். ஆனால் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். தேர்தலில் வெற்றி பெற்று அமைக்கப்படுகின்ற அரசாங்கத்தில் மாத்திரமே நான் அமைச்சு பொறுப்புகளை எற்றுக் கொள்வேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

இன்று நாட்டில் மக்களுடைய எதிர்பார்ப்பு ராஜபக்ச குடும்பத்தை அகற்ற வேண்டும் என்பதே. ஏனென்றால் நாட்டை சீரழித்தவர்கள் அவர்களே. எனவே அந்த அரசாங்கத்தில் நாங்கள் பதவி வகிக்க முடியாது. அப்படி செய்தால் மக்கள் எங்களை தூக்கி எறிந்துவிடுவார்கள். எனவே நாங்கள் மக்களுடன் இருந்து கொண்டு கோட்டா வீட்டிற்கு போகவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். 

மயில்வாகனம் உதயகுமார் - பாராளுமன்ற உறுப்பினர்

மக்களுடைய முக்கியமான கோரிக்கை கோட்டா வெளியேற வேண்டும் என்பதே. அடுத்து ராஜபக்ச குடும்பம் வெளியேற வேண்டும். இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும். இதுவே மக்களுடைய முக்கிய கோரிக்கைகள். இதன் ஒரு கட்டமாக மக்களின் அழுத்தம் காரணமாக பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலகியது. ஆனால் மீண்டும் ஒரு பித்தலாட்டத்தை ஆரம்பித்து ராஜபக்சக்களை காப்பாற்றுவதற்காக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்திருக்கின்றார்கள். 

இது பிரச்சினைக்கு தீர்வல்ல. இது ஒரு சமாளிப்பு.ஆகவே உண்மையாலுமே பாராளுமன்றத்தின் முக்கிய எதிர்கட்சியான ஜக்கிய மக்கள் சக்திக்கே அந்த சந்தர்ப்பத்தை கொடுத்திருக்க வேண்டும். நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம் இந்த ஜனாதிபதியின் கீழ் ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று. 

அதற்காகவே நாங்கள் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் அனைத்தும் எங்களுடையது மட்டுமல்ல. அது இந்நாடடு மக்களுடையது. மதத்தலைவர்களுடையது. சட்டத்தரணிகள் கொடுத்த கோரிக்கைகள். எனவே அதற்கு சம்மதம் தெரிவித்தால் மாத்திரமே பிரதமராக பதவியேற்கலாம். ஆனால் நாங்கள் இந்த இக்கட்டான நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.

அது ஒரு நிபந்தனையின் அடிப்படையில்் ஒரு கட்டமைப்போடு செல்ல வேண்டும். ஆனால் ஜனாதிபதியோ அதனை தாண்டி பாராளுமன்றத்தில் பலம் இல்லாத ஒருவரை நியமிக்கின்றார் என்றால் அதில் ஒரு உள்நோக்கம் இருக்கின்றது என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே இதனை நாங்கள் ஒரு ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கின்றேன். 

ஜனநாயக மக்கள் முன்னணி  

நாங்கள் யாரும் அழைத்தவுடன் சென்று அரசாங்கத்தை அமைக்க முடியாது. நாங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம். எனவே அதனை ஜனாதிபதி எற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இப்பொழுது யாரும் இல்லாத நிலையில் ரணில் பிரதமாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்! ஆனால் நாங்கள் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டோம்.  எமது ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்காமைக்கு காரணம் பிரதான எதிரணியான எமது கொள்கை கோட்பாடுகள். நாம் எமது தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் அணி. எமது மக்களை நாம் நேரடியாக பிரதிநிதித்துவம் செய்கிறோம். 

இந்த நிமிடத்தில்கூட எமது அரசியல் குழு முடிவு செய்தால் மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம். இதற்கான அழைப்பு எமக்கு எப்போதும் இருக்கின்றது. இதை அனைத்து தரப்பினரும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் செய்யவில்லை. மாறாக வெளியிலிருந்து எமது முன்னாள் பிரதமரை வாழ்த்துகின்றோம். தற்சமயம் நாம் தமிழ் முற்போக்கு கூட்டணியாக எதிரணியில் இருக்கின்றோம். நடப்புகளை அவதானித்து பொறுப்புடன் கடசியாக பயணிக்கின்றோம். அதே நேரத்தில் எதிர்வரும் தினங்களில் அவர் ஆட்சியமைத்து அமைச்சரவையை அமைத்தால் அவருக்கு 113க்கும் அதிகமாகவும் கிடைக்கலாம். அப்போது அவர் தனிநபர் அல்ல. ஆகவே ஆளட்டும்.   

தொகுப்பு:
நுவரெலியா எஸ். தியாகு 

Comments