ஜீவன் தொண்டமானின் எதிர்ப்புக் குரல் | தினகரன் வாரமஞ்சரி

ஜீவன் தொண்டமானின் எதிர்ப்புக் குரல்

அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ சர்வகட்சி மாநாடு ஒன்றினை கூட்டியிருந்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடக்கூடிய வழிவகைகளை ஆராய்வதற்காகவே இம்மாநாடு நடந்தது. இதில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இ.தொ.கா. கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. இப்படியான அதிரடி முடிவுகளை எடுப்பதில் முன்பு அமரர் ஆறுமுகன் தொண்டமான் சமர்த்துக்காட்டினார். இப்பொழுது அவர் மகன் ஜீவன் தொண்டமான் அசத்த ஆரம்பித்திருக்கிறார்.

இதுவொரு அரசியல் நாடகம் என்றும் விமர்சனம் இருக்கிறது. இருந்தாலும் அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா வெளியேறப் போவதாகவும் எதிர்வு கூறல்கள் எழாமல் இல்லை. கடந்த வாரங்களில் மலையக அரசியலில் சலசலப்பு எற்பட இதுவே காரணமாகவும் அமைந்தது. ஆனால் சர்வகட்சி மாநாட்டைப் பகிஷ்கரித்தாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேற எந்த முகாந்திரமும் இல்லை. வழமைபோல எமது கூட்டுத் தொடரும் என்கிறது இ.தொ.காவின் உயர்மட்டம். 

அது சரி,  இ.தொ.கா. சர்வகட்சி மாநாட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை எனும் கேள்விக்கு இ.தொ.கா தரப்பு எமக்கு நான்கு காரணங்களைக் கூறியது. 1000ரூபா சம்பள அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு கிடைப்பதில் எழுந்துள்ள இடையூறு களையப்படாமை, நுவரெலியா மாவட்டத்தில் சனசெரிவுக்கு ஏற்ப மேலும் புதிதாக 5பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை நிறைவேற்றப்படாமை, ஆசிரியர்   உதவியாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்காமை, இறுதியாக கோதுமை மாவுக்கான மானியம் சம்பந்தமான சிக்கல்களே சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு எடுக்கத் தூண்டியதாம். ஏற்கனவே அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டவை தான் இப்பிரச்சினைகள். 

ஆனால் அரசாங்கம் அலட்சியமாக இருப்பதால் எமது அதிருப்தியைக் காட்டிக்கொள்ள சாணக்கியமான காய்நகர்த்தல் தான் இப்புறக்கணிப்பு என்றும் இ.தொ.கா தரப்பில் கூறப்பட்டது. சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதால் இவையெல்லாம் சாத்தியப்படப் போவதில்லை என்பது அக்கட்சிக்குப் புரியாத காரியமல்ல. ஜீவனைத் தவிர்த்து வேறு பல அநுபவமிக்க பிரமுகர்கள் இ.தொ.காவில் இருக்கிறார்கள். எனவே அக்கட்சி கத்துக்குட்டி அரசியல் செய்யப் போகாது. அப்படியானால் இ.தொ.கா.வின் முடிவால் ஆகப்போவதுதான் என்ன? 

கடந்த வாரத்துக்கு முதல்வாரம் ஒரு பரபரப்பான செய்தியைச் சிங்கள பத்திரிகையொன்று வெளிப்பட்டது. அதில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கெபினட் அமைச்சுப் பதவி கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்து. பத்திரிகை விபரங்களைப் படித்துக் காட்டும் சிங்கள தொலைக்காட்சி செய்தியாளர் இதனை முகம் சுழிக்கும் வகையில் முன் வைத்தார்.  ஜீவன் அப்போதைய பொதுத்தேர்தலில் தனது அப்பாவின் சவப்பெட்டியோடு வந்து வாக்கு கேட்டதாக விமர்சித்தார். 

இதன் பின்னரே கெபினட் அமைச்சுப் பதவி கோரிய விடயம் பிற பத்திரிகைகளிலும் வெளியானது. தமிழ் பத்திரிகைகள் அது பற்றிய மேலும் சில விபரங்களையும் சேர்த்து தந்தன. அதாவது தற்போதைக்கு கெபினட் அமைச்சுப் பொறுப்பு வழங்க முடியாவிட்டால் கால்நடை அல்லது கல்வி இராஜாங்க அமைச்சாவது வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் கேட்டிருந்தாராம். ஆனால் அரசாங்கத்தின் சார்பில் பச்சைக் கொடியேதும் காட்டப்படாததால் அவர் கடுப்புக்குள்ளாகிய நிலையிலேயே தனது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்ததாக விமர்சிக்கப்படுறது. இதனை ஜீவன் மறுத்திருந்தாலும் இ.தொ.கா தலைமைகளின் கடந்தகால செயற்பாடுகளை ஞாபகத்துக்குக் கொண்டு வந்தால் ஐயம் எழுவது இயல்பே. 

இராஜாங்க அமைச்சுப் பதவி சிறுபான்மை இன அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில் அலங்காரத்துக்கு உரியவையாக மட்டுமே காணப்படுகின்றது. நல்லாட்சியில் கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியை வகித்த வே. இராதாகிருஷ்ணன் இதுபற்றி வெளிப்படையாகவே பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் தமது கண்டனத்தை அடிக்கடி பிரஸ்தாபிக்கத் தவறவில்லை. அதிகாரம் எதுமின்றி பெயரளவிலான அமைச்சை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற என்னால் முடியாது என்று இராதாகிருஷ்ணன் ஆட்சியோடும் தான் கூட்டணி கொண்ட கட்சியோடும் முரண்பட்டார். 

முன்னர் பிரதிக் கல்வி அமைச்சராக இருந்தவர் முருகன் சச்சிதானந்தன். அடடா! சிறுபான்மை இனத்தவருக்கு பிரதி கல்வி அமைச்சர் பொறுப்பா? அதுவும் பிரதி கல்வியமைச்சர் வாய்ப்பா? என்று பலரும் வியந்து போனார்கள். ஆனால் அதனால் பலன் ஏதும் ஏற்பட்டதா என்றால் அதுதான் இல்லை. ஒரு ஆசிரியர் இடமாற்றத்தைக் கூட செய்வதற்கு அதிகாரம் இல்லாத பொம்மைப் பதவி இது என அவரும் பொரிந்து தள்ளினார். பின்னர் விரக்தியடைந்தவராக பிரதி கல்வி அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தார் சச்சிதானந்தன். 

ஆக, இராஜாங்கம், பிரதி என்பது எல்லாம் வெறும் கண்துடைப்பு பதவிகள் தான் சிறுபான்மை இனத்தவருக்கு இப்பொழுது ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராகவே இருக்கிறார். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்னும் ரீதியில் வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதில் சில பிரத்தியேக அதிகாரங்கள் (சலுகைகள்) அவருக்குக் கிடைக்கலாம். ஆனால் இதன் மூலம் பெரிதாக எதனையும் சாதித்து விட முடியாது.  

காணி உரிமை, மலையக பல்கலைக்கழகம், தனிவீட்டுத் திட்டம் பற்றி எல்லாம் வீராப்போடு பேசும் ஜீவனுக்கு இவற்றைப் பெறுவதில் காணப்படும் அதிகாரப் பற்றாக்குறை ஆதங்கத்தை தருவதில் வியப்பு இல்லைதான். முன்னைய ஆட்சியில் இரண்டு முழு அமைச்சுக்கள் ஒரு இராஜாங்க அமைச்சைப் பெற்றிருந்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தர்மசங்கடத்தை எதிர்நோக்கவே செய்தது. அதனையும் மீறி அது சில நல்ல காரியங்களையும் மலயக மக்களுக்கென பெற்றே தந்தது. 

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம், மலையக அதிகார சபை, பிரதேச சபை சட்டத்திருத்தம், பிரதேச சபை அதிகரிப்பு  என அக்கட்சி சில சாதனைகளை படைத்தது. பிரதேச செயலகங்கள் ஐந்தினை புதிதாக நுவரெலியா மாவட்டத்தில் அமைப்பதற்கான சட்டரீதியான சகல ஏற்பாடுகளும் செய்யக் காரணமாக இருந்தது. அன்றைய ஆட்சியில் நிலவிய குளறுபடி, ஆட்சி மாற்றம் காரணமாக சில நல்ல ஏற்பாடுகள் கூட நடைமுறைக்கு வராமல் போயுள்ளன. 

காலி மாவட்டத்தில் புதிய செயலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு முன்னைய ஆட்சியின் போதே இடம்பெற்றது. ஆயினும் ஆட்சி மாற்றத்தால் முழுமை பெறவில்லை. தற்போதைய ஆட்சி அதை அப்படியே நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அதேநேரம் சகல சட்ட அங்கீகாரமும் முன்னைய அட்சியால் வழங்கப்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்டத்துக்கான 5புதிய பிரதேச செயலகங்களுக்கான அனுமதி குறித்து அவதானம் செலுத்தாமல் உள்ளது. இது பற்றி அதிருப்தியைத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு தமிழ் முற்போக்குக் கூட்டணி, இ.தொ.கா ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே உண்டு. அனை ஜீவன் தொண்டமான் தம் கையில் எடுத்துள்ளமையை வரவேற்கத்தான் வேண்டும். 

எது எப்படியோ இராஜாங்க அமைச்சராக இருந்து கொண்டு உருப்படியாக எதனையும் சாதிக்க முடியாது என்பதை ஜீவன் அநுபவரீதியாக புரிந்து கொண்டிருப்பதன் அடையாளமாகவே கெபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சுப் பதவி வேண்டுவதாக புரிந்துகொள்ள முடியும். அவரை அனாகரிகமாக விமர்சிக்கும் சில சிங்கள ஊடகங்கள் அவரது ஆளுமையை இனவாத போக்கில் எடைபோடக்கூடாது. நுவரெலியா மாவட்டத்திலிருந்து இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர் அவர். தற்போதைய அரசாங்கம் நுவரெலியா, பதுளை, கண்டி மாவட்டங்களில் கணிசமான சிறுபான்மை (தமிழ்) வாக்குகளைப் பெற இ.தொ.காவே காரணமாக இருந்தது. தவிர மலையகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் அதுவும் ஒன்று. 

அமரர் ஆறுமுகன் தொண்டமான் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்திலும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கான ஆதரவு போக்கினைக் கைவிடாது கடைசிவரை கூடவே பயணித்தவர். எனவே பொதுஜன பெரமுன இ.தொ.காவை இழக்க விரும்பாது. இதனையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட நிலையிலேயே ஜீவன் காய் நகர்த்தல் செய்வதாகக்கூட இருக்கலாம். 

ஆனால் ஜீவன் தொண்டமானின் எதிர்பார்ப்பு எந்த வகையில் நிறைவேறப் போகிறது என்பதை விளங்கிக்கொள்ள சில காலம் செல்லும். சர்வகட்சி மாநாட்டை இ.தொ.கா புறக்கணித்தமையை ஆளுந்தரப்பு கண்டு கொள்ளாததைப் போலவே நடந்து கொள்கிறது. இ.தொ.காவை விமர்சிக்க ஆளுந்தரப்பில் எவருமே முன்வரவில்லை. இதன்மூலம் இ.தொ.காவின் நிலைப்பாடு பற்றிய புரிந்துணர்வு அவர்களுக்கு அத்துபடி என்பது புலனாகிறது. 

இ.தொ.கா பொதுஜன முன்னணியைப் பகைத்துக் கொள்ளப் போவது இல்வை. அதேபோன்று ஆட்சியை விட்டு வெளியேறப் போவதும் கிடையாது. அப்படியென்றால் கெபினட் அமைச்சுப் பதவி கோரலும், சர்வகட்சி மாநாட்டைப் பகிஷ்கரித்தலும் எதற்காக? இதேவேளை பட்டும் படாமலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் போக்கும் கொஞ்சம் கடுமையாவே அரசாங்கத்தை சாடும் இ.தொ.கா.தலைவர் செந்தில் தொண்டமானின் அணுகுமுறையும் தமது அரசியல் எதிர்காலத்தை கருத்திற்கொண்ட காய் நகர்த்தல்களாகவே பலரும் கருதுகின்றார்கள். 

இ.தொ.காவை இலகுவில் கழற்றிவிட தற்போதைய ஆட்சி தயாரில்லை என்பது மட்டும் நிச்சயம். அதே நேரம் இ.தொ.கா. அரசியல் ரீதியில் எடுக்கும் எந்தமுடிவும் அதன் தலைமைகளை தனிப்பட்டவகையில் பாதிக்காமல் போகலாம். ஆனால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தவே செய்யும். மக்களுக்காகவே அரசியல். அரசியலுக்காக மட்டும் மக்கள் அல்ல. ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் சரியானதைப் புரிந்து நடப்பதுதான் நல்லது.   

பன். பாலா

Comments