சேர் ஆர்தர் சி. கிளார்க் | தினகரன் வாரமஞ்சரி

சேர் ஆர்தர் சி. கிளார்க்

சேர் ஆர்தர் சி. கிளார்க் இங்கிலாந்தில் சமர்செட் என்ற இடத்தில் டிசம்பர் 16, 1917இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு விவசாயி. தாய் அஞ்சல் நிலையத்தில் தந்தி அனுப்புனராகப் பணியாற்றினார். நான்கு குழந்தைகளில் மூத்தவரான கிளார்க் அருகில் உள்ள டாண்டன் நகர உயர்நிலைப்பள்ளியில் 'புலமைப்பரிசில்' பெற்ற மாணவனாகக் கல்வி பயின்றார். பிள்ளைப் பருவத்தில் சமர்செட் கடற்கரையோரமாக நடந்து செல்லும்போது தனது அறிவியல் கற்பனைகளை விழித்தெழச் செய்த பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்வார். 

முதல் உலகப்போரில் படுகாயமடைந்த தந்தையை தன் 13ஆவது வயதில் கிளார்க் இழந்தார். இதன் பின் டான்டூனில் உள்ள ஷாய்ஷ் இலக்கணப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். சிறு வயதிலேயே வானியலில் ஈடுபாடு கொண்ட ஆர்தர் சி. கிளார்க் பழைய அமெரிக்க அறிவியல் புதின நூல்களைப் படிப்பது வழக்கம். ஆரம்பக் கல்வியை முடித்த அவருக்கு தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க குடும்ப வருவாய் போதாமையினால், தனது 19ஆவது வயதிலேயே லண்டன் அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்றினார். 

இவர் தனது 17-ஆம் அகவையிலேயே பிரித்தானியாவில் கோள்களியல் கழகத்தில் சேர்ந்தார். பின்னாளில் இதன் பொருளாளராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அரசுப் பணியில் இவரது கணிதக் கூர்மை கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் பணிக்கு உயர்வித்தது. ஆனால் 1941-இல் இரண்டாம் உலகப் போரின்போது அப்பணியிலிருந்து விலகி ரோயல் வான்படையில் இணைந்தார். அங்கு இலத்திரனியலில் பயிற்சி பெற்று வானொலிப் பள்ளியில் செய்முறைப் பயிற்சியாளரானார். இறுதியில் தென்மேற்கு இங்கிலாந்தில் வட காரன்வாலில் உள்ள டேலிட்ஸ்டோமூர் என்ற இடத்தில் அமெரிக்காவின் தரைக் கட்டுப்பாட்டு ராடார் அமைப்புக் குழுவில் பணியாற்றினார். 

இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னர் ​ரோயல் வான்படையிலிருந்து விலகி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இயற்பியல் மற்றும் கணிதவியலில் சேர்ந்தார். அதன் பின் பட்ட மேற்படிப்பாக வானவியலில் சேர்ந்தார். இப்படிப்பு அவருக்குச் சோர்வைத் தந்ததால் அதை விடுத்து 'சயின்ஸ் அப்ஸ்ட்ராக்ட்' என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பணி அவருக்குச் சிந்திக்கவும் எழுதவும் நேரத்தைக் கொடுத்தது. 1951-இலிருந்து கிளார்க் முழுநேர எழுத்தாளரானார். 

1937தொடக்கம் 1945வரையான காலப்பகுதியில் சில புதினங்களைக் கிளார்க் எழுதியிருந்தாலும் 1946ஆம் ஆண்டில் அவர் எழுதிய Astounding Science Fiction என்ற நூல் தான் முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. 

1949இல் இவர் எழுதி வெளியிட்ட 'கோள்களுக்கிடையே பறத்தல்' என்ற நூல் பாமர மக்களும் படித்தறியும் விதமாக இருந்தது. இதில் புவியீர்ப்புப் புல அளவு, உந்தத் தேவையான கணக்கீடு, கோள்களைச் சென்றடையத் தேவையான பாதை போன்ற தொழிநுட்பக் கூறுகளைத் தனியே இணைப்பாக அளித்திருந்தார். இவரது இந்தக் கற்பனை வளம் விண்வெளியில் புதிய தேடலுக்கு வித்திட்டது. 

1952இ-ல் இவர் எழுதிய 'விண்வெளியைக் கண்டறிதல்' என்ற நூல் இவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதனால் இவரது புகழ் உலகெங்கும் பரவியது.  1953இல் கிளார்க் மரிலின் மேஃபீல்ட் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். மணம் புரிந்து ஆறு மாதங்களில் அவர்கள் பிரிந்தனர். ஆனாலும் 1964ஆம் ஆண்டிலேயே அவர்கள் அதிகாரபூர்வமாகப் பிரிந்தனர். 

1962-ல் இவர் போலியோ நோயினால் தாக்குண்டார். நோயின் தொடர் விளைவால் வாழ்வில் பிற்காலங்களைப் பெரும்பாலும் இவர் சக்கரநாற்காலியிலேயே கழித்தார். இவரது வெளியுலகத் தொடர்பு, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகவே இருந்தது. தன் கற்பனைக்கும், சிந்தனைக்கும், எழுதுவதற்கும் ஏற்ற அமைதியான இடமாக இலங்கையை தேர்ந்தெடுத்தார். இங்கு அவர் இறக்கும் வரை ஏறக்குறைய 45ஆண்டு காலம் வாழ்ந்தார். 

இவர் தனது 90ஆவது வயதில் 2008ஆம் ஆண்டு மார்ச் 19அன்று கொழும்பில் மரணமடைந்தார். 

ஜே. நித்தியவாணி, 
லெமலியர், லிந்துலை.

Comments