தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மறுசீரமைப்போம் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் கூறுவது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும் என வெளிவிவகார அமைச்சரும், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான அலி சப்ரி தெரிவித்தார். அரச இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
வாக்குகளைப் பெறுவதற்காகப் பொய் கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்! உண்மையைக் கூறி வாக்குகளைக் கோருங்கள்!
கே: சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கை கோரியிருப்பது குறித்து கடந்த பல மாதங்களாக கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. உண்மையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எந்தளவு முக்கியமானது?
பதில்: சர்வதேச நாணய நிதியம் என்பது உலகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விசேட மருத்துவ நிபுணர் ஒருவரைப் போன்றதாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் ஏற்படலாம். ஒன்று ஸ்தம்பிதமடையலாம் மற்றையது பொருளாதாரம் முற்றுமுழுதாக சரிவடைந்து வங்குரோத்து நிலைக்குச் செல்லலாம். இவை இரண்டும் வெவ்வேறு விடயங்கள். அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பல்வேறு வங்கிக் கட்டமைப்புக்கள் உள்ளன. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து விட்டால், அந்த வங்கிகள் எதுவும் எட்டிக்கூடப் பார்க்கப் போவதில்லை. முதலில் ஸ்திரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கே சர்வதேச நாணய நிதியம் அவசியம்.
அந்த வைத்தியர் சரியில்லையென்றால் வேறொரு வைத்தியரை நாட வேண்டும். அது உள்நாட்டு வைத்தியராக இருந்தாலும் சரி. மாற்றுவழி இல்லையென்றால் அந்தத் தெரிவையே எடுக்க வேண்டும். சுகவீனத்தை சரிசெய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஒருவர் வேண்டும். அத்துடன், நாம் சரியான பாதையில் செல்வதற்கான வழிகாட்டலை வழங்குவதற்கு ஒருவர் அவசியம். அந்த வகிபாகத்தையே சர்வதேச நாணய நிதியம் வகிக்கின்றது. நாம் 16 தடவை இந்த வைத்தியரிடம் சென்றுள்ளோம். ஆனால், மருந்து எடுத்து ஓரளவுக்குக் குணமடைந்ததும் சுகவீனத்தை முழுமையாக மறந்து விடுவதையே நாம் கடந்த காலத்தில் செய்துள்ளோம். பின்னர் இரண்டு மூன்று வருடங்களில் திரும்பவும் அதே நிலைமை ஏற்படுகின்றது.
இதனைப் போலவே, பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைக்கு முகங்கொடுக்கின்ற நாடுகளில் இடம்பெறுகின்றது. முதல் ஒரு வருடத்தில் எமது நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டமைக்கான காரணங்களை ஆராய்ந்து எமது கடன் சுமை அதிகம், வருமானம் குறைவு, ஊழல் மோசடிகள் குறைக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை எமக்கு எடுத்துக் கூறினார்கள். அவர்கள் முன்வைத்த விடயங்கள் யாவும் நல்ல விடயங்கள். எனினும், வழமையான பழக்கத்திற்கு அமைய எதிரான கருத்துக்களையே அதிகமானவர்கள் முன்வைக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சதி, அமெரிக்க எதிர்ப்பு எனப் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
உண்மையில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் பிழையான நிலைப்பாடொன்றையே உருவாக்கியுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டுக்களைப் பார்த்தால் அதில் எவ்வித உண்மையும் இல்லையென்பது தெளிவாகின்றது. வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுடன் ஒன்று இணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையே சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகின்றது. இது வழங்கும் சான்றிதழைப் பொறுத்தே ஏனைய நாடுகளும் எமக்கு உதவி செய்ய முன்வரும் என்பதே யதார்த்தம்.
கே: இந்தப் பயணத்துக்கு நாடு என்ற ரீதியில் மக்கள் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும்?
பதில்: கோஷங்களின் அடிப்படையில் வாழ்ந்த காலத்தை நாங்கள் மறக்க வேண்டும். உள்மனதில் இருக்கும் உணர்ச்சியின் அடிப்படையில் செயற்படுவதை விடுத்து, நடைமுறைச் சாத்தியமான விடயங்களின் அடிப்படையில் எவ்வாறு முகங்கொடுப்பது என்பதைச் சிந்திக்க வேண்டும். உதாரணமாக சீனாவை எடுத்துக் கொண்டால், ஆரம்பத்தில் கடும்போக்கான, இடதுசாரிக் கொள்கையை முன்னெடுத்துச் சென்றது. எனினும், தொடர்ந்தும் இந்தக் கொள்கையில் இருக்க முடியாது என்பதை 70களில் புரிந்துகொண்ட சீனா, தனது கொள்கையை நடைமுறைச் சாத்தியமான முறையில் மாற்றிக் கொண்டது. அந்நாடு தற்போது அடைந்துள்ள வெற்றிக்கு இதுவே காரணமாகும். நடைமுறையீதியில் களத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு சாத்தியமான விடயங்களைப் பின்பற்ற வேண்டும். மீண்டும் வீழ்ச்சியடையாத நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் நடைமுறையான களத்தில் வாழவேண்டும்.
கே: நாடு வீழ்ச்சியுற்றிருந்த நிலையில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் இழக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் வெளிநாடுகளுக்குச் சென்று நிலைமைகளை விளக்கி அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு நீங்கள் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தீர்கள். அந்தக் காலகட்டத்தில் எவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தீர்கள் என்பதை நாட்டு மக்களுக்குக் கூற முடியுமா?
பதில்: எமக்கு 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் கடன் உதவி வழங்கியிருந்தன. முதலில் நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றபோது, அவர்கள் தேசிய ரீதியில் முகாமைத்துவம் வேண்டிய சில செயற்பாடுகளை எமக்குச் சுட்டிக்காட்டியிருந்தனர். உதாரணமாகக் கூறுவதாயின், முன்னர் நாம் பெற்றோல் லீட்டர் ஒன்றை 168 ரூபாவுக்கு வழங்கியபோது, அதற்கான செலவு சுமார் 400 ரூபாவுக்கும் அதிகம். இந்தச் செலவைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமே ஏற்றுக் கொண்டது. இது திறைசேரிக்கும் நாட்டுக்கும் சுமை. இதனால் ஏற்படுகின்ற வேறுபாடு வரி செலுத்தும் மக்களுக்கே சுமையாக இருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச நாணயநிதியம் எமக்குச் சுட்டிக்காட்டியது. நாமும் அதனைச் செய்தோம். இதனைச் செய்யாதிருப்பின் அரசாங்கத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய மீண்டும் மீண்டும் மக்கள் மீதே வரிச்சுமையை அதிகரிக்க வேண்டியிருக்கும். அத்துடன், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட, கஷ்டப்பட்ட மக்களையும் பாதுகாக்க வேண்டும். அதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அது மாத்திரமன்றி எமக்குக் கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு அவர்களின் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியிருந்தது. சகல நாடுகளுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கை எடுக்க முடிந்தது.
கே: நாம் அதிகாரத்துக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மாற்றியமைப்போம் என ஏனைய அரசியல் கட்சிகள் மேடைகளில் கூறி வருகின்றன. இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: இது நடைமுறைச் சாத்தியமற்றது என்றே நான் கருதுகின்றேன். சர்வதேச நாணய நிதியம் எமது நாடு தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு வருமானம் எவ்வளவாக இருக்க வேண்டும், படுகடன் எல்லை எவ்வாறு இருக்க வேண்டும் போன்ற வழிகாட்டலொன்றை வழங்கியது. இதில் மாற்றங்களைச் செய்வதாயின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். அதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாடொன்று அவசியம். உதாரணமாக வரியைக் குறைப்பதாயின் ஏதாவது ஒன்றுக்கான செலவைக் குறைக்க வேண்டும். அதனை சரியான முகாமைத்துவத்துடன் செய்வதே அவசியமானது. எனவே அவர்கள் அவ்வாறு கூறுவது முழுமையான பொய். புதிதாகக் கலந்துரையாடுவதாயின் அதுவரையான காலப்பகுதியில் கடன் வழங்க மாட்டோம் என்பதை சர்வதேச நாணய நிதியம் தெளிவாகக் கூறியுள்ளது. வாக்குகளைப் பெறுவதற்காகப் பொய் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம். 70 வருடங்களாகப் பொய் கூறி செய்த அரசியலும் அதனால் மக்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமைகளும் போதும். வாக்குகளைப் பெறுவதாயின் உண்மையைக் கூறி வாக்குகளைக் கோருங்கள்.
கே: அரசியல்வாதிகள் தர்க்கரீதியான விவாதங்களை முன்னெடுக்கக் கூடிய அரசியல் கலாசாரமொன்றுக்கு வர வேண்டும் என்ற அழுத்தத்தை மக்கள் கொடுத்துள்ளனர். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: இது முக்கியமானதொரு விடயம். சமூக சேவையொன்றுக்குச் செல்வதாயின் நாட்டை முன்கொண்டு செல்வதற்கான அர்ப்பணிப்பு எந்நேரமும் இருக்க வேண்டும். நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு அமைய தனிப்பட்ட விடயங்களை மாற்றிக் கொண்டதான் காரணமாகவே பல்வேறு உலக நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. எனினும், இலங்கையில் நடைபெறுவது என்னவென்றால், நாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து தமது முன்னுரிமைக்கு ஏற்ற வகையில் நாட்டைக் கொண்டுசெல்லும் அரசியலையே பெரும்பாலானவர்கள் முன்னெடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இனத்தை, மதத்தைப் பயன்படுத்துவது போன்று தமக்கு ஏற்ற விடயத்தைப் பயன்படுத்தி நாட்டை அதன் பின்னால் கொண்டு செல்கின்றனர்.