உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாமென விஞ்ஞானிகள் அச்சம்
தடுப்பு மருந்து வழங்கவென யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் WHO
மத்திய தரைக்கடலுக்கு அருகிலுள்ள பலஸ்தீனின் காஸா மீது கடந்த பத்து மாதங்களாக இஸ்ரேல் யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. கடல், ஆகாயம், தரையென அனைத்தும் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தொடராக முன்னெடுக்கப்படும் இப்போரினால் 23 இலட்சம் மக்களைக் கொண்ட காஸா பெரும் துன்பங்களுக்கும் இழப்புக்களுக்கும் முகம்கொடுத்துள்ளது. இற்றைவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஸா மக்களை காவுகொண்டுள்ள இப்போரினால் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அம்மக்கள் பேரவலங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இடம்பெயர்தலும் சனநெரிசல் மிக்க கூடாரங்களில் தங்குவதுமாக அவர்களது துன்பம் தொடருகின்றது.
இப்போரினால் காஸாவின் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அழிவடைந்தும் சேதமடைந்துமுள்ளன. அடிப்படை சுகாதார வசதிகள், கழிவுநீரகற்றல் கட்டமைப்புகள் மற்றும் மனிதக் கழிவகற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தம் தொடராக முன்னெடுக்கப்படுவதால் அவற்றை திருத்தி மீளமைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்டட இடிபாடுகள், மனிதக் கழிவுகள் அடங்கலான திண்மக்கழிவுகள், கழிவுநீர் என்பன காஸா எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை முறையாக அகற்ற முடியாத நிலையை இப்போர் ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் மதிப்பீட்டின்படி, 40 மில்லியன் தொன் திண்மக்கழிவுகளும் கட்டட இடிபாடுகளும் காஸாவில் காணப்படுகின்றன.
யுத்தம் தொடர்வதால் தூயகுடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணிக்கொள்வதிலும் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள காஸா மக்கள், கழிவு நீரகற்றும் கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளமையாலும், திண்மக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையாலும் பலவிதமான சுகாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனமும் யுனிசெப் நிறுவனமும் காஸாவில் தொற்று நோய்களும் தொற்றா நோய்களும் தலைதூக்கக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக கடந்த வருடம் டிசம்பர் முதல் முன்னெச்சரிக்கை விடுத்துவருவதோடு, அந்நோய்களைத் தவிர்த்துக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்துகின்றன.
கழிவுநீரில் போலியோ வைரஸ்:
இவ்வாறான சூழலில் கடந்த ஜுன் பிற்பகுதியில் காஸா சுகாதார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துடன் ஒருங்கிணைந்து இடம்பெயர்ந்துள்ளவர்கள் தங்கியுள்ள கூடாரங்களுக்கு இடையே காணப்படும் நீரிலும் ஒடும் நீரிலும் சேகரித்த நீர் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வில் போலியோ வைரஸ் 2 (Poliomyelitis Type 2) காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவின் டெய்ர் அல் பலா பகுதியிலும் தெற்கு காஸாவின் கான்யூனிஸ் பிரதேசத்திலும் இரண்டு வெவ்வேறு இடங்களில் பெறப்பட்ட ஆறு நீர் மாதிரிகளில் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது காஸாவிலும் இஸ்ரேலிலும் மாத்திரமல்லாமல் ஏனைய பிராந்திய நாடுகளிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. போலியோ என்பது மிக வேகமாகப் பரவும் ஒரு வைரஸ்.
இவ்வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, குறிப்பாக 2 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக முள்ளந்தண்டு பகுதியிலுள்ள நரம்பு தொகுதியைத் தாக்கி முதுகெலும்பு மற்றும் சுவாச முடக்கத்திற்கு வழிவகுக்கும். அதனால் பக்கவாதம் ஏற்படும். குறிப்பாக கால் அல்லது கை ஊனமடையக்கூடிய அச்சுறுத்தல் நேரிடலாம்.
இப்பேராபத்து மிக்க வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதற்கான தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டம் 1988 இல் உலகளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பயனாக உலகின் பல நாடுகளிலும் இவ்வைரஸ் கட்டுப்பாட்டு நிலையை அடைந்தது. அவற்றில் பலஸ்தீன் உள்ளிட்ட காஸாவும் அடங்கும். கடந்த 25 வருடங்களாக காஸாவில் போலியோவுக்கு எவரும் உள்ளாகவில்லை என்று பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
தற்போது காஸாவில் இவ்வைரஸ் கண்டறியப்படுவதற்கு இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தமே அடிப்படைக் காரணம் என்றுள்ள காஸா சுகாதார அமைச்சு, இவ்வைரஸ் காஸாவுக்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. காஸாவுக்கு அருகிலுள்ள பிரதேசங்களிலும் இஸ்ரேலிலும் மத்திய கிழக்கு உட்பட உலகளாவிய ரீதியிலும் இதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். இது போலியோ ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சூழலில், இஸ்ரேலிய சுகாதார அமைச்சும் காஸா பகுதியில் நீர் மாதிரிகளை எடுத்து மேற்கொண்டுள்ள ஆய்விலும் போலியோ வைரஸ் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் காஸாவிலுள்ள தமது படையினருக்கு போலியா சொட்டு மருந்து வழங்கும் நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே இத்தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஸா மீது முன்னெடுக்கப்படும் யுத்தம் காரணமாக வழமையான போலியோ தடுப்பு மருந்து உள்ளிட்ட நோய்த்தடுப்பு மருந்து வழங்கும் வழமையான வேலைத்திட்டம் சீர்குலைந்துள்ளது. அதனால் காஸாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போலியோ மற்றும் பிற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களாக உள்ளனர். இதன் விளைவாக தடுப்பூசிகளால் தவிர்க்கக்கூடிய நோய்களால் காஸா பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் நிலவுகின்றது என்றுள்ளார் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர்.
இந்நிலையில் காஸா சுகாதார அமைச்சு காஸாவில் போலியோ பரவும் வலயத்தை கடந்த ஜுலை 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.
போலியோ குறித்து விஞ்ஞானிகள்:
காஸாவில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து உலகளாவிய மருத்துவ விஞ்ஞானிகளும் கவனம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் கொபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார பேராசிரியர் ஃப்ளெமிங்கொன்ராட்சென், இவ்வைரஸ் மத்திய கிழக்கு முழுவதும் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. காஸாவில் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளதன் வெளிப்பாடே இது. காஸாவெங்கும் சுகாதார நிலைமை நம்பமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு அல்லது கழிவுகளைக் கையாளுவதற்கான ஆற்றல், உட்கட்டமைப்பு வசதிகளோ அல்லது இரசாயனங்களோ எதுவுமில்லை. அதனால் போலியோ பற்றிய அறிக்கைகள் குறித்து இஸ்ரேல் கவலைப்பட வேண்டும். ஏனெனில் எதிர்வரும் நாட்களில் போலியோ பிராந்தியத்திலுள்ள மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயமுள்ளது. இது வரலாற்று ரீதியில் நம்பமுடியாதளவுக்கு துன்பத்தையும் நிதிச் சுமையையும் உருவாக்கியுள்ளது. இந்நோய் பரவுவதை இஸ்ரேலும் விரும்பாது’ என்றுள்ளார்.
இதேவேளை கேயர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் காஸாவுக்கான பதில் பணிப்பாளர் பிரான்சிஸ் ஹியூஸ், ‘அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில் போலியோ பரவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கழிவுநீரில் போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது ஒரு சுகாதார பேரழிவு ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது எனக் கவலை தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறான பின்னணியில் காஸா பிள்ளைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்குவதில் விஷேட கவனம் செலுத்தியுள்ள உலக சுகாதார ஸ்தாபனமும் யுனிசெப் நிறுவனமும் இது தொடர்பில் ஆராயவென விஷேட குழுவை அனுப்பி வைக்கவும் எதிர்பார்த்துள்ளன.
அத்தோடு 12 இலட்சம் சொட்டு மருந்தை அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 8 வயதுக்குட்பட்ட சுமார் 6 இலட்சம் குழந்தைக்ளுக்கு இரண்டு சொட்டுகள் வீதம் இத்தடுப்பு மருந்தை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் யுத்தம் தொடராக முன்னெடுக்கப்படுவதால் இத்தடுப்பு மருந்தை வழங்குவது சவால் மிக்க காரியமாக உள்ளது. அதனால் காஸாவில் யுத்தநிறுத்தத்தை உலக சுகாதார ஸ்தாபனமும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் போல் ஹண்டர், போலியோவால் இஸ்ரேல் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, காஸா மக்களதும், தங்களது மக்களதும் உலக மக்களதும் நலன்களை முன்னிலைப்படுத்தி காஸாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
போலியோ வைரஸ் காஸாவின் கழிவுநீர் மாதிரிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 10 மாதக் குழந்தையொன்றுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு வெள்ளியன்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஐ.நா, காஸா குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கவென உடனடியாக 7 நாள் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை சாதகமாக நோக்குவது இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.
மர்லின் மரிக்கார்…