Home » இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிக எண்ணிக்கையானோர் களத்தில்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிக எண்ணிக்கையானோர் களத்தில்!

39 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுண்டு போகலாமென ஊகம்!

by sachintha
August 18, 2024 5:43 pm 0 comment

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 39 பேர் போட்டியிடுகின்றனர்.

1977ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் பின்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இத்தேர்தல் அமைகின்றது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்ததான மக்கள் போராட்டம் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நாட்டில் மாற்றத்துக்கான கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில் நடைபெறும் முதலாவது தேர்தல் என்பதால் இதன் மீது அனைவரினதும் கவனம் திரும்பியுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை 39 பேர் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 22 வேட்பாளர்களும், சுயேச்சையாக 17 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதில் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் மற்றும் முதல் தடவையாகப் போட்டியிடுகின்றவர்கள் எனப் பலரும் காணப்படுவதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்கள் இருவர் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரான சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரே அவர்களாவர்.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த 39 பேரில் ஒருவரை இந்நாட்டில் ஜனாதிபதியாகத் தேர்வு செய்வதற்கு 17.1 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 10 இலட்சம் பேர், அதாவது ஒரு மில்லியன் பேர் முதன் முறையாக வாக்களிக்கவுள்ள புதிய வாக்காளர்களாவர்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் நடைபெறும் இத்தேர்தலில் 10 இலட்சம் பேர் புதிய வாக்காளர்களாக இணைந்திருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படக் கூடிய தேர்தலில் எந்த வேட்பாளர் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகின்றாரோ அவரே ஜனாதிபதியாக முடியும் என்பது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகும்.

இவ்வாறான நிலையில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதால் எந்தவொரு வேட்பாளருக்கும் அந்த இலக்கை எட்ட முடியாமல் போகலாம் என்றதொரு கணிப்பும் பொதுவாகக் காணப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்பட வேண்டிய தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்படலாம். அவ்வாறு இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணும் நிலைமை ஏற்பட்டால், அது இலங்கைக்குப் புதியதொரு அனுபவமாக அமையும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

கடந்த வியாழக்கிழமை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும் வேட்பாளர்களுக்கான சின்னங்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னம் வழங்கப்பட்டிருக்கும் அதேநேரம், சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு சின்னங்களை வழங்கியது.

இந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதால் அவருக்கான சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. இந்த அடிப்படையில் ஜனாதிபதிக்கு காஸ் சிலிண்டர் சின்னம் கிடைத்துள்ளது. வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களும் தீவிரப்படுத்தியுள்ளனர் வேட்பாளர்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும், இவை தற்பொழுது தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இம்முறை போட்டியிடுபவர்களில் பிரதான வேட்பாளர்களாக நால்வரை அடையாளம் காண முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரே அவர்களாவர்.

இவர்கள் தவிர மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் இந்தத் தேர்தல் போட்டியில் இருப்பதுடன், இரு தமிழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். அவற்றுக்கும் அப்பால் இரு பௌத்த பிக்குமாரும் இதில் இணைந்துள்ளனர்.

அத்துடன், இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் வழமையாகப் போட்டியிடும் வேட்பாளர்களான ஸ்ரீதுங்க ஜயசூரிய, ஏ.எஸ்.பி.லியனகே, சரத் மனமேந்திர போன்றவர்கள் இம்முறையும் போட்டியில் குதித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க நபராக தொழிலதிபரும், ஊடக வலையமைப்பின் முன்னாள் தலைவருமான திலித் ஜயவீரவைச் சுட்டிக்காட்ட முடியும்.

தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார். இவ்வாறு பல்வேறு தரப்பினர் இம்முறை போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இருந்தபோதும், பாரிய மாற்றமொன்றைக் கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் நடத்தப்படும் தேர்தல் என்பதால் மக்களைத் தம்பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கு அனைத்து வேட்பாளர்களும் முயற்சிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டவர் ஜனாதிபதி என்பதால் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது அவரது ஆதரவாள ர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இலங்கையில் காணப்பட்ட காஸ் சிலிண்டருக்கான மக்கள் வரிசையைப் போக்கிய தலைவருக்குத் தற்பொழுது கிடைத்துள்ள சின்னமும் காஸ் சிலிண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கெல்லாம் அப்பால் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், ஜே.வி.பி தரப்புக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சற்று அதிகரித்திருப்பதாக ஊடகங்களின் அறிக்கையிடல்களில் அறியக் கிடைக்கின்றது.

‘ஊழலை ஒழிப்போம், இழந்த சொத்துக்களை மீட்போம்’ என்ற தொனிப்பொருளில் அவர்களின் பிரசாரங்கள் அமைகின்றன. இதுபோன்று ஒவ்வொரு வேட்பாளரும் தமது தேர்தல் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் ஒருவர் மீது ஒருவர் வசைபாடுவது, சேறுபூசுவது மக்களைக் குறைசொல்வது போன்று இன்னோரன்ன அரசியல் விளையாட்டுக்களைப் பார்க்க முடியும்.

பி.ஹர்ஷன்…

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division