சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி முதன்முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது, அவர் பல அண்டை நாடுகளின் அரசு அல்லது நாட்டின் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமருக்கும் அன்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அண்டை நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பதவியேற்ற முதல் நாளிலிருந்தே மோடி அரசு கூறி வருகிறது.
இந்தக் கொள்கையானது அதிகாரபூர்வமாக ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற பெயரில் அறியப்படுகிறது. நரேந்திர மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை இதுதான் என்று மத்திய அமைச்சர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர்.
ஆனால் வாய்வார்த்தையில் இதைச் சொல்வது வேறு விஷயம். ஆனால் நரேந்திர மோடி அரசின் செயல்பாட்டில் இது உண்மையிலேயே பிரதிபலிக்கின்றதா?
டெல்லி பெரும்பாலும் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று நம்பத் தோன்றுகிறது. இந்தியா மறுபுறத்தில் சீனாவைப் பற்றியும் அதிகம் சிந்திக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் (ஓகஸ்ட், 2014), இலங்கை (மார்ச், 2015) மற்றும் வங்கதேசம் (ஜூன், 2015) ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் பெருமளவு ஆர்வத்துடன் அதில் கலந்து கொண்டனர். ஆனால் அந்த நிலை இப்போது நீடிப்பதுபோல காணப்படவில்லை. பாகிஸ்தானுடனான உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலாக்கத்தின் போது இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்ட ‘பொருளாதார முடக்கத்திற்கு’ எதிராக நேபாள மக்கள் இந்திய எதிர்ப்பு போராட்டங்களில் இணைந்தனர். தற்போது நேபாளத்தில் ஆட்சியில் இருக்கும் கே.பி. ஷர்மா ஓலி, ஒரு தீவிர இந்திய எதிர்ப்பாளர் என்று கருதப்படுகிறார்.
மாலைதீவிலும் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய ஆதரவு அரசை ஆட்சியில் இருந்து அகற்றி அதிபரான முகமது முய்சு, இந்திய இராணுவ வீரர்கள் தனது நாட்டிலிருந்து உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.
அவரது கட்சியால் தொடங்கப்பட்ட ‘இந்தியா வெளியேறு’ பிரசாரம் அதிக ஆதரவைப் பெற்றது. மேலும் அதிபர் முய்சு எந்த தயக்கமும் இல்லாமல் சீனாவின் பக்கம் சாய்ந்தார்.
ஏறக்குறைய அனைத்து விஷயங்களிலும் இந்தியாவைச் சார்ந்து இருக்கும் பூட்டான் கூட சீனாவுடன் எல்லைப் பேச்சுவார்த்தைகளை தானே தொடங்கி விட்டது. தூதரக உறவுகளை ஏற்படுத்தும் சீனாவின் முன்மொழிவையும் நேரடியாக அது நிராகரிக்கவில்லை.
அதேசமயம் ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மாரில் ஆளும் அரசுகளுடன் இந்தியாவுக்கு நல்லுறவு உள்ளது என்றும் கூற முடியாது. தலிபான்களுடன் இந்தியா முழுமையான தூதரக ரீதியிலான உறவை இன்னும் ஏற்படுத்தவில்லை.
இந்த இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் இந்தியா செய்துள்ள பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள முதலீடுகள் இப்போது நிச்சயமற்ற சூழலில் சிக்கித் தவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ள பெயர் பங்களாதேஷ். இந்தியாவின் நெருங்கிய நண்பராக விளங்கிய, கடந்த ஒன்றரை தசாப்தங்களாக அங்கு ஆட்சியில் இருந்த அரசு ஒரே இரவில் அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
‘இந்தியாவின் நண்பர்கள்’ என்று சொல்ல முடியாத சில சக்திகள் இப்போது அங்கு ஆட்சிக்குள் வந்துள்ளன. இது தவிர சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்தின்போது அவருக்கு எதிரான போராட்டங்களும் வன்முறைகளும் உச்சத்தில் இருந்தன. வங்கதேசத்தில் சமீபத்திய இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கங்களும் வலுவான இந்திய எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருந்தன.
ஒன்றன்பின் ஒன்றாக அண்டை நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்கும் இந்தச் சூழலில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில கடுமையான குறைபாடுகள் உள்ளதா அல்லது தெற்காசியாவின் புவிசார் அரசியல் கட்டமைப்பு காரணமாக இந்தியாவின் இந்த தலைவிதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பகுப்பாய்வு செய்தால் மாலைதீவு, இலங்கை அல்லது நேபாளம் போன்ற எந்த அண்டை நாடுகளுடனும் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கையை இந்தியா ஒருபோதும் முன்னோக்கி நகர்த்தவில்லை என்பது உண்மை.
அண்டை நாடுகளின் குறுகியகால நலன்களை மனதில் கொண்டு இந்தியா எப்போதும் நகர்ந்து வருகிறது. நீண்டகால நலன்களைப் பற்றி ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஒன்றன்பின் ஒன்றாக பல நாடுகளில் அதன் விளைவுகளை இந்தியா சந்தித்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தெற்காசியாவின் சிறிய நாடுகள் இந்தியாவை ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தியாகப் பார்க்கின்றன.
நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே அறிவித்த ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையில் தொடக்கத்திலேயே குறைபாடுகள் இருந்தன.
வங்கதேசத்தின் தற்போதைய நிலைமையை எடுத்துக் கொண்டால் அங்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்விக்கான பல காரணங்களைப் பார்க்க முடிகிறது.
உதாரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும், அவர் மீது சாமானிய மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது என்பதையும் இந்தியா ஒருபோதும் அவரிடம் தெளிவாக எடுத்துக் கூறவில்லை.
அவர் இந்தியாவின் சிறந்த நண்பராக இருக்கும் பட்சத்தில் இதை அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இது செய்யப்படவில்லை. இது தவிர உளவுத்துறை தோல்வியும் ஏற்பட்டது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இந்திரா காந்தியின் அரசியல் செயலாளர் பிஎன் ஹக்சர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெலிெகாப்டர் மூலம் அவரை அங்கிருந்து வெளியேற்ற முன்வந்தார்.
இதற்கு முஜிபுர் ரஹ்மான் தயாராக இருக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை இந்தியா அறிந்திருந்தது.
ஆனால் ஷேக் ஹசீனாவை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான அறிகுறி இருப்பது பற்றி இந்தியாவுக்கு எந்தத் தகவலும் இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை தற்போது நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலைதீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகளில் இந்திய எதிர்ப்பு அரசுகள் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. தற்போது மூன்று அல்லது நான்கு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் சவாலான கட்டத்திலேயே உள்ளன.
எஸ்.சாரங்கன்…