– மூன்று வருடங்களுக்கு 25,000 ரூபா வீதம் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு
– அடிப்படைச் சம்பளம் 24 – 35 வீதம் வரையில் அதிகரிப்பு
– கீழ் மட்ட அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 55,000 ரூபாய் சம்பளம் மற்றும் கொடுப்பனவு
2022 இல் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்ட விலையேற்றம், வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு போன்ற காரணங்களால், நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் தமது அன்றாட வீட்டுச் செலவுகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்களை அனுபவித்தனர்.
நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க ஏற்பாடு செய்தார்.
எனினும் சில மாதங்களுக்குப் பின்னர் பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலைமையை ஆராய்ந்த பின்னர், தேசிய வைத்தியசாலை கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதன் அவசியத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு, வைத்தியர்களின் கொடுப்பனவுகள் சரிசெய்யப்பட்டது.
அது முடிவடையும் போது பல்கலைக்கழகத்தினரின் போராட்டம் ஆரம்பமானது. அந்த சந்தர்ப்பத்தில், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அந்த ஊழியர் குழுவுக்கும் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டது.
அந்தப் பிரச்சினை முடிவடையும் போது அரசாங்கத்தின் நிறைவேற்று மட்ட அதிகாரிகள், குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் இவ்விடயத்தில் முறையான கவனம் செலுத்தியது.
இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை முறையாக உயர்த்துவதற்கும், சம்பள முரண்பாடுகளை களைவதற்கும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்தார்.
அதன்படி, அனைத்து அரச சேவையினரதும் சம்பளத்தை சீர்திருத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமே அதுவாகும். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க நிபுணர் குழுவை நியமிப்பதற்கு 2024ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் தலைமையிலான குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதி மேலதிகச் செயலாளராக ஜீ. எல். வர்ணன் பெரேரா செயற்பட்டார்.
இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜூட் நிலுக்ஷன் (பணிப்பாளர் நாயகம், தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்), ஹிரன்சா களுதந்திரி (பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்), எஸ். ஆலோக பண்டார (ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்), எச். ஏ. சந்தன குமாரசிங்க (நிறுவகப் பணிப்பாளர் நாயகம்), டொக்டர் டெரன்ஸ் காமினி டி சில்வா (ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சு), துமிந்த ஹுலங்கமுவ (தலைவர், இலங்கை வர்த்தக சபை), சண்டி எச். தர்மரத்ன (பிரதான மக்கள் அதிகாரி (Chief people officer) BCS International Technology PTY LTD) மற்றும் இசுரு திலகவர்தன (பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) கொமர்சியல் வங்கி) ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்ற போது 30 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். அத்துடன் 200 பேரிடம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சாட்சிகளை ஆய்வு செய்ததன் பின்னர் நீண்ட அறிக்கையைத் தயார் செய்தனர்.
அதேபோன்று, தற்போது 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதனுள் உள்ளடக்குவதற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த இடைக்கால அறிக்கை கடந்த12ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையினால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் அந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பை இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கான பரிந்துரை உள்ளடக்கப்பட்டது.
தற்போது அரச சேவையில் காணப்படும் 30 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள சம்பளம் நான்காகக் குறைக்கப்படவுள்ளது.
இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வகையில் அரச சேவையின் தரச் சம்பள வகைகள் நான்காகத் திருத்தப்படும்.
அதன்படி 2027ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு மாதமும் அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 25000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்படும். மேலும், அனைத்து அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமும் 24% முதல் 35% வரை உயரும்.
குறிப்பாக, 13 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களால் 220 இலட்சம் மக்களுக்கு அமைச்சகங்கள், திணைக்களங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் சட்டபூர்வ அமைப்புகள் மூலம் பாரிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் 1200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது, இதற்கு மேலதிகமாக அரசாங்கம் மேலும் 400 பில்லியன் ரூபாவை ஓய்வூதியத்திற்காக செலவிடுகிறது.
அத்துடன், புதிய சம்பளக் கட்டமைப்பின் படி, 2030ஆம் ஆண்டுக்குள் அரச சேவையில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை பத்து இலட்சமாக (1,000,000) அல்லது அதற்கும் குறைவாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் குழு முன்மொழிந்துள்ளது. இது நவீன உலகிற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகும்.
இதில் 2025ஆம் ஆண்டு முதல் 03 ஆண்டுகளுக்குள், அரச சேவையின் இயன்ற அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் (Digitalization) மற்றும் தன்னியக்கமயமாக்கல் (Automation) முறைமைகளைக் கொண்டு வந்து மின்னணு அமைப்புகள் மூலம் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்கான நடைமுறைகளை (E – Governance) அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கான அரசாங்க முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இன்னொரு விஷயத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் போது, வணிக ரீதியான அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அந்த வகையினுள் அடங்கக் கூடியவை அல்லவென்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும். இந்தப் புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையானது அந்த வகைகளைத் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.
அதேபோன்று தற்போதுள்ள வரிக் கொள்கைக்குள்ளேயே இந்த செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்குஅமைய , இந்த சம்பள முறையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்மொழியப்பட்ட சம்பள முறை 2025 ஜனவரி 01 முதல் அரசின் நிதி ஸ்திரத் தன்மையினையும் கவனத்திற் கொண்டு கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும்.குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு, கொள்கை அங்கீகாரம் வழங்குவதற்கும், அந்த பரிந்துரைகளை 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் நடைமுறையில் உள்ளதால், மீண்டும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டே மேற்கொள்ளப்படும்.
அதுவரையிலான வழிமுறைகள், இந்தக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
அனைத்து அரச சேவையையும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதோடு, திறைசேரிக்குச் சுமையில்லாத சேவையாக மாற்றக்கூடியதாக இருப்பது அந்தச் செயற்பாடுகளை அவ்வாறே செயற்படுத்துவதன் மூலமாகவேயாகும்.
அரச சேவையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சம்பள உயர்வு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக வழங்கப்படும், அதேபோன்று அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் 24% இல் இருந்து 35% ஆக அதிகரிக்கப்படும். இந்த சம்பள உயர்வின்படி, குறைந்தபட்ச ஊதியம் ரூ.55,000 ஆக உயரும். வரலாற்றில் இவ்வளவு பெரிய ஊதிய உயர்வு செய்யப்பட்டுள்ளதாக எவராலும் கூற முடியாது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்
மற்றும் ஊடகத் துறை அமைச்சர்
மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர்
கலாநிதி பந்துல குணவர்தன