பாரிஸில் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபற்ற 33 ஆவது ஒலிம்பிக் போட்டியில் வழக்கம் போல அமெரிக்கா அதிக பதக்கங்களை வென்றபோதும் சீனா அதற்கு சரிசமமாக நின்றது. இரு நாடுகளும் தலா 40 தங்கப்பதக்கங்களை வென்றதால், இம்முறை ஒலிம்பிக்கின் வெற்றியாளரை தீர்மானிக்க வெள்ளி பதக்கங்களை எண்ண வேண்டி இருந்து.
எனவே, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களில் அமெரிக்கா தான் முன்னிலை பெற்றது. அமெரிக்கா ஒட்டுமொத்தமாக 126 பதக்கங்களை வென்றதோடு, 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்ற ஒரே நாடும் அமெரிக்கா தான். அடுத்ததாக சீனா மொத்தம் 91 பதக்கங்களை வென்றது.
ஒலிம்பிக் என்பது சாதாரணமாக, விளையாட்டாக மாத்திரம் எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு அரசியல், பொருளாதார, சமூக காரணங்கள் இருக்கின்றன. அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது என்பது அது உலகில் இன்னும் ஆதிக்கம் மிக்க நாடு என்பது தான் பொருள். முன்னரெல்லாம் சோவியட் ஒன்றியம் பின்னர் ரஷ்யா ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு சரிக்கு சமமாக இருந்த நிலையில் தற்போது சீனா போட்டியாக வந்திருப்பதை இந்தப் பின்னணியில் தான் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா–சீனா போட்டி
ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாள் வரை தங்கப் பதக்கம் வெல்வதில் அமெரிக்காவுக்கு சீனாவுக்கும் கடும் போட்டி இருந்தது. கடைசி நேரம் வரை சீனா ஒரு தங்கப்பதக்கத்தால் முன்னிலையில் இருந்தபோதும் கடைசி போட்டியான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா தங்கம் வென்றதன் மூலம் இதனை சமன் செய்ய முடிந்தது.
சீனா டைவிங் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதோடு துப்பாக்கிச் சுடுதல், மேசைப்பந்து மற்றும் பளுதூக்கல் போட்டிகளில் தங்கங்களை அள்ளியது. அமெரிக்கா வழக்கம்போல் தடகளத்தில் நிகரற்ற அணியாக இருந்து வருகிறது. அது தடகளத்தில் மொத்தம் 14 தங்கங்களை வென்றதோடு அனைவரும் எதிர்பார்க்கும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அமெரிக்காவின் நோஹ் லைல்ஸ் தங்கம் வென்றார்.
தவிர, நீச்சல், ஜிம்னாஸ்டிக்கிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை பார்க்க முடிந்தது. கூடைப்பந்தில் அதுவும் பெண்கள் கூடைப்பந்தில் அமெரிக்காவை எதிர்க்க ஆளில்லை. அமெரிக்க ஆடவர், மகளிர் அணிகள் பிரான்ஸை வீழ்த்தியே தங்கம் வென்றதோடு அதிலும் மகளிர் அணி தொடர்ந்து எட்டாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.
என்றாலும் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான போட்டி இதனைவிடவும் தீவிரம் அடையக்கூடும். அது விளையாட்டுக்கு அப்பால் உலக அரசியலையே புரட்டிப்போடுவதாக இருக்கும்.
நிறைவேறா கனவு
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தங்கங்களை அள்ளியபோதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இன்றும் நிறைவேறாத கனவாக இருக்கிறது. இலங்கையை எடுத்துக் கொண்டாலும் நூற்றாண்டுகள் பழைமையாக ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இரண்டு பதக்கங்களையே வெள்ள முடிந்தது. இம்முறை ஆறு வீர, வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றபோதும் அவர்கள் முதல் சுற்றை தாண்டுவதே போராட்டமானது.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் 200க்கும் அதிகமாக நாடுகள் பங்கேற்றன. அதிலே 65 நாடுகள் ஒரு பதக்கத்தைக் கூட வெல்லவில்லை என்பதோடு ஐந்து நாடுகள் வரலாற்றில் முதல் பதக்கத்தை வென்றன. அல்பேனியா, கபோ வெர்டே, டொமினிகா மற்றும் செயின்ட் லூசியா ஆகியவை அந்த நாடுகளாகும். பொட்ஸ்வானா, டொமினிகா, செயின்ட் லூசியா மற்றும் குவான்தமாலா ஒலிம்பிக்கில் முதல் முறை தங்கம் வென்றன. பொட்ஸ்வானா மற்றும் குவான்தமாலா 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியிலேயே முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற நிலையில் அதனை தங்கமாக மாற்றியிருப்பது நல்ல முன்னேற்றம்தான்.
இதுவே பிலிப்பைன்ஸை எடுத்துக் கொண்டால் அது 1928 ஆம் ஆண்டு முதல்முறை வெண்கலப் பதக்கத்தை வென்றநிலையில் அது முதல் தங்கத்தை வென்றது 92 ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டிலாகும். என்றாலும் 103 நாடுகள் இன்னும் தனது முதல் தங்கத்தை வெல்ல எதிர்பார்த்திருக்கின்றன.
எமது அண்டை நாடான பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இது ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பாகிஸ்தான் வென்ற முதல் தங்கமாக இருந்தது. என்ன பரிதாபம் என்றால் ஒட்டுமொத்த தெற்காசியாவும் வென்ற ஒரே தங்கம் இது தான். இம்முறை இந்தியாவும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்தியாவால் ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் என்று மொத்தமாகவே ஆறு பதக்கங்களை தான் வெல்ல முடிந்தது.
அதாவது உலக மக்கள் தொகையில் சரியாக கால் பங்கு மக்கள் தொகையை கொண்டிருக்கும் தெற்காசியாவினால் வெல்ல முடிந்த மொத்த பதக்கங்களுமே இவ்வளவு தான்.
உண்மையான வெற்றியாளர்கள்
பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்கா, சீனா அதிக பதக்கங்களை வென்றிருக்கக் கூடும். ஆனால் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் இந்த நாடுகள் பின்தள்ளப்பட்டுவிடும். மக்கள் தொகையின்படி பார்த்தால் அமெரிக்கா வென்ற 126 பதக்கங்கள் என்பது நாடுகள் தரப்படுத்தலில் 48 ஆவது இடத்திலேயே இருக்கிறது. அந்த நாடு ஒரு மில்லியன் மக்களுக்கு 0.37 பதக்கங்களையே வென்றிருக்கிறது. இதுவே சீனா ஒரு மில்லியன் மக்களுக்கு 0.06 பதக்கங்களை வென்று இன்னும் பின்தங்குகிறது.
ஆனால் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக பதக்கங்களை வெல்லும் நாடுகளாக குறிப்பிடலாம். அவுஸ்திரேலியா இம்முறை பதக்கப்பட்டியலில் 18 தங்கங்களுடன் மொத்தம் 53 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தை பிடித்தது.
குறிப்பாக நீச்சல் போட்டிகளில் அவுஸ்திரேலியா எப்போதுமே பிரத்தியேகமாக தெரியும். அதன் அதிக பதக்கங்கள் நீச்சலிலேயே கிடைக்கிறது. இம்முறை அது நீச்சலில் 7 தங்கங்களுடன் மொத்தம் 18 பதக்கங்களை வென்றதோடு அது அமெரிக்காவுக்கு மாத்திரமே பின்னிற்கிறது. அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை அது ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 1.99 பதக்கங்களை வென்றிருக்கிறது.
அதேபோன்று நெதர்லாந்து இம்முறை 15 தங்கங்களுடன் மொத்தமாக 34 பதக்கங்களை வென்று 6 ஆவது இடத்தை பிடித்ததோடு அது ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 1.92 பதக்கங்களை வென்றது. இதுவே நியூசிலாந்து 10 தங்கங்களுடன் 19 பதக்கங்களை வென்றது. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5.124 மில்லியன் தான். அதாவது நியூசிலாந்து ஒரு மில்லியனுக்கு 3.80 பதக்கங்களை வென்றிருக்கிறது.
என்றாலும் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடிக்கும் நாடு மேற்கிந்திய தீவுகளில் இருக்கும் குட்டி நாடான கிரனடா தான். இந்த தீவு நாடு இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றது. இத்தனைக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே இரண்டு இலட்சத்தை கூட எட்டவில்லை. அதாவது இந்த நாடு ஒரு மில்லியனுக்கு 15.76 பதக்கங்களை வென்றிருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இருக்கு டொமினிக்காவின் கதையும் இது தான். கரீமியன் பிராந்தியத்தில் இருக்கும் இந்த நாட்டின் தீ லாபொன்ட் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் வென்றார். இது அந்த நாடு பெற்ற ஒரே பதக்கம் என்றாலும் அது பெறுமதி மிக்கது. ஏனென்றால் டொமிக்காவின் மொத்த மக்கள் தொகையே கிட்டத்தட்ட 73 ஆயிரம் இருக்கும். அதாவது அந்த நாடு ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 13.63 பதக்கங்களை வென்றிருக்கிறது.