ரயில்வே திணைக்களம் அதிகார சபையாகிறது | தினகரன் வாரமஞ்சரி

ரயில்வே திணைக்களம் அதிகார சபையாகிறது

சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ரயில்வே திணைக்களத்தை ஒரு அதிகார சபையாக மாற்றுவதற்கான சாதகமாக பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.
ரயில்வே திணைக்கள ஊழியர்களதும், முகாமைத்துவம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களினதும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு ஊழியர்களின் ஓய்வூதியம் உட்பட நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த அதிகாரசபை திட்டத்தை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


ரயில்வே திணக்களத்தை மேலும் நன்மை பயக்கும் சேவையாக முன்னெடுத்துச் செல்வதற்காக சிறந்த முகாமைத்துவ கட்டமைப்புக்குள் அதிகார சபையாக மாற்றுவது மிகவும் பயன் தரத் தக்கதென ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க தரப்பிலும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இங்கு எக்காரணம் கொண்டும் ரயில்வே திணைக்களம் தனியார் மயப்படுத்தப்படமாட்டாதென்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.


ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கடந்த 03 ஆம் திகதி அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்தே அமைச்சர் வாரமஞ்சரிக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
தனிப்பட்ட குறிக்கோள்களின்றி பொதுப் ​போக்குவரத்துக்கு முக்கியத்துவமளித்து எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், ஆளணியினர் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.


அமைச்சருடனான சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கத்தினரும் ரயில்வே திணைக்களத்தில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்த்துக்கொள்வதற்கு இந்த யோசனை பயனுள்ளதாக அமையுமென்றும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ரயில்வே பொது முகாமையாளர், பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

கே.அசோக்குமார்

Comments