பிரிட்டிஷ் மகாராணியின் இறுதிக் கிரியைகள் 19 ஆம் திகதி | தினகரன் வாரமஞ்சரி

பிரிட்டிஷ் மகாராணியின் இறுதிக் கிரியைகள் 19 ஆம் திகதி

பிரிட்டிஷ் மகாராணி 02ஆவது எலிசபெத்தின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை சகல இராஜ மரியாதைகளுடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  

மகாராணியார் கடந்த 08ஆம் திகதி தனது 96ஆவது வயதில் காலமானார். மகாராணிக்கு கௌரவமளிக்கும் நோக்குடன் 19ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.  

பொதுநலவாய நாடுகளின் தலைவியாக செயற்பட்டுவந்த மகாராணியாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்குடன் கடந்த 09ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தன.  

பிரிட்டிஷ் மகாராணியின் இழப்பையடுத்து கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் 02நிமிட மௌனாஞ்சலியும் செலுத்தப்பட்டது.  

இதேவேளை நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக இங்கிலாந்து மன்னராக பதவியேற்ற 03ஆவது சார்ள்ஸ் மன்னர் நாட்டு மக்களுக்கு  உரையாற்றுகையில்,  

மக்களுக்கு சேவையாற்ற தமது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் ராணி எலிசபெத் என, அவர் தெரிவித்துள்ளார்.   

 அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் அதே வேளை, புதிய மன்னராக சார்ள்ஸ் நேற்று பதவியேற்றார்.  

லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நேற்று முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய அக்சசன் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. 700உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 200பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடையே, மூன்றாம் சார்ள்ஸ், மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டதும், அவர் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டார்.  

சார்ள்ஸின் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டமும், மகன் வில்லியம்ஸுக்கு இளவரசர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

Comments