புதிய பிரதமராக ரணில்; இது கை கொடுத்து மீட்பதற்கான காலம்! | தினகரன் வாரமஞ்சரி

புதிய பிரதமராக ரணில்; இது கை கொடுத்து மீட்பதற்கான காலம்!

ஆங்கிலத்தில் expect the unexpected  என்று சொல்வார்கள். இதைத்தான் கமல்ஹாசன் தன் பிக்பொஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறுவார். எதிர்பாராதவற்றை எதிர்பார்க்கக் கூடிய ஒரு களம்தான் அரசியல். மேலும், மனிதன் தீர்மானிப்பான்  கடவுள் நிராகரிப்பார் என்ற வசனமும் இக்கருத்துடன் இணைந்து போகக் கூடியதுதான்.

வெற்றிமீது வெற்றி பெற்றுச் சென்ற நெப்போலியனுக்கு வோட்டர்லூ யுத்தம் முடிவுரை எழுதியது. வெற்றியைத் தவிர வேறொன்றுமில்லை என்றிருந்த ஹிட்லருக்கு ரஷ்ய மீதான படையெடுப்பு படுதோல்வியையும் பெரும் பின்னடைவையும் தந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு எதிரிகளே இல்லை என ஜெயலலிதா மார்தட்டிய சில மாதங்களில் அவர் காலமாகிப் போனார். அரசியலில் எதுவும் நடக்கலாம்!

இந்தப் பீடிகைகள் எல்லாம் ஏன் என்று உங்களுக்குத் தெரியும். குழப்பங்களுக்கு மேல் குழப்பங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசியலில் ஒரு ஒளிக்கீற்று தென்பட்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. அலரி மாளிகையில் சந்தர்ப்பம் அறியாமல் ஒரு கூட்டம். அதன்பின் சத்தியக்கிராகிகளான இளைஞர் மீது தாக்குதல் இதைக் கண்டிக்கும் வகையில் நாடெங்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் என்று வேகமாகக் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன. இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தன் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சம் புக, அரசாங்கமற்ற நாடாகிப் போனது இலங்கை. ஒரு புறம் அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிரித்துச் செல்ல, அந்த விலைகளிலும் கூட அவை கிடைக்காத நிலை என்றால் மறுபுறம் ஊடரங்கும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையும் நீடித்துச் சென்ற போதுதான் எதிர்பாராதது நடந்தேறியிருக்கின்றது.

ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, அரசை நான் ஏற்று நடத்துகிறேன் என்று சொல்லக் கூடியவர் அல்ல. ஆனால் வியாழனன்று அவர் பிரதமர் பதவியை ஏற்க முன்வந்தார். நான்கு நிபந்தனைகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசொன்றை அமைக்க முன்வந்தார். இவ்விருவருமே, ஜனாதிபதி முறைமையை நீக்குவோம்.  அதற்கு முன் ஜனாதிபதியின் அதிகாரங்களை கத்தரிப்போம் என்பதாக கூறியிருந்தார்கள். எனினும் அன்றைய காலைப் பத்திரிகைகளில் அடுத்த பிரதமர் ரணிலா? என்ற கேள்வியுடன் முன்பக்கச் செய்திகள் வெளியாகி இருந்ததே இவ்விருவரும் இடைக்கால அரசை அமைப்பதற்கு முன்வந்தமைக்கான காரணம் என்றொரு தகவலும் விமர்சகர் வட்டாரத்தில் கிளம்பியிருந்தது.

முதல்நாள் ரணிலுடன் ஜனாதிபதி நீண்ட நேர பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார். ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிபந்தனைகளை விதித்திருந்தார் என்பது தெரியவரவில்லை. குழப்பத்திலும் ஊரடங்கிலும் சிக்கிக் கிடக்கும் நாட்டை மீட்டெடுத்தால்தான் மறுபடியும் நாடு இயங்கும். அயல் நாடுகளின் நம்பிக்கையைப் பெறும். தொடர்ச்சியான இயக்கத்துக்கும் ஒரு பொது இலக்கை நோக்கி நகர்வதற்கும் வழி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே, அதற்கு பொருத்தமானவராக இருப்பார் என்ற நம்பிக்கையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியிருக்கக் கூடும்.

இதேசமயம் பிரதமர் ரணில் அமைக்கவுள்ள அரசு இடைக்கால அரசா அல்லது பொதுஜன பெரமுன அரசின் தொடர்ச்சியா என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் திறமைசாலிகளான உறுப்பினர்களை அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் அவர்களை அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவ்வாறு நியமனம் செய்வதை பெரும்பாலும் கட்சிகள், இத் தருணத்தில் ஆட்சேபிக்கவும் போவதில்லை. இங்கே சுமந்திரன் அமைச்சராவாரா? என்றொரு கேள்வி இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது நியாயமான தெரிவாகவும் இருக்கும்.

இன்று நமக்குத் தேவை ஒரு தேர்தல் அல்ல. அது 25முதல் 30பில்லியன் ரூபா செலவை ஏற்படுத்தக் கூடியது. இரண்டு தின தொடர் ஊடரங்கின் பின்னர் நாடு திறக்கப்பட்டதும் வீதிகளில் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் வீதிகள் வெறிச்சோடியே காணப்பட்டன. எரிவாயு விநியோக நிலையங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்தான் கூட்டம் கூடி நின்றது. எனவே இன்றைய உடனடித்தேவை ஒரு மக்கள் அரசை நிறுவுவதே. அப்படி ஒரு அரசை நிறுவுவதற்கு பொருத்தமான ஒரு தலைவராகத்தான் ரணில் விக்கிரமசிங்க திகழ்கிறார்.

ஐ.தே.க. வின் ஒரே பிரதிநிதி அவர். அவருடன் வேறு யாருமில்லை. தனியொரு நபராக, தேசிய பட்டியல் ஊடாக உள்ளே வந்து அவரால் பிரதமராகவும் முடிந்திருக்கிறது என்பதே இந்த நாடு இதற்கு முன் கண்டிராத ஒரு சாதனைதானே! அவரது பொருளாதார அறிவு, அரசியல் அனுபவம், உலக நாடுகளுடனான அவரது மேம்பட்ட தொடர்புகள் என்பன, அவர் மீதான விமர்சனங்களுக்கு அப்பால், அவரை நேரத்துக்கு பொருத்தமான பிரதமர் என்பதையே அழுத்தமாக சுட்டி நிற்கின்றன.

எந்த நேரத்தில் எது பொருத்தமோ அந்த நேரத்தில் அதை செய்து முடிப்பதுதான் அரசியல் இராஜதந்திரம். செய்து முடிப்பவராகவும் இருக்க வேண்டும் தன் மார்பில்; பாயாதவராகவும் இருக்க வேண்டும் என்பது ஒரு அரசியல் கணக்கு.

போர்த் தந்திரங்களில் சிறந்த மோஷேதயான் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தபோது இஸ்ரேலில் யுத்த மேகங்கள் சூழ்ந்தன. எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாஸர் தலைமையில் அரபு நாடுகள் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்தே அழிக்கப் போவதாக சூளுரைத்து நின்றபோது இஸ்ரேலின் அன்றைய ஆளும் கட்சி, பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்குமாறு மோஷேதயானை அழைத்தது. அவர் ஒப்புக் கொண்டார், கட்சி அரசியல் பேதங்களை ஒதுக்கி ஒருபுறம் வைத்துவிட்டு இப்போது முக்கியம் தேசிய நலன். முதலில் நாடொன்றிருக்க வேண்டாமா அரசியல் செய்தற்கு!

மோஷேதயான் பாதுகாப்பு அமைச்சரானார். புகழ்பெற்ற ஆறுநாள் அரபு இஸ்ரேல் யுத்தம் 1966இல் வெடித்தது. ஆறாவது நாள் முடிந்தபோது தன்னிலும் பார்க்க இரண்டு மடங்கு பிரதேசத்தை இஸ்ரவேல் கைப்பற்றி சுயஸ்கால்வாய்க் கரையை தொட்டிருந்தது!

இலங்கையைச் சுற்றி எந்த போர் மேகமும் இல்லை. ஆனால் அதற்கு ஒப்பான பொருளாதார சீரழிவில் நாம் நிற்கிறோம். நமக்கு இப்போது தேவை மோஷேதயானைப் போன்ற ஒருவர், இலங்கையை இச் சீரழிவில் இருந்து மீட்பதற்கு. ரணில் விக்கிரமசிங்கவை பல்வேறு காரணங்களுக்காக தூற்றுவோர், பரிகசிப்போரும் கூட, அவர் செய்து முடிக்கக் கூடியவர் என்ற கருத்தில் உடன்படவே செய்வார்கள்.

எந்தவொரு கட்சி ஆதரவுக்கான வாய்ப்புமின்றி தனி மனிதராக பாராளுமன்றத்தில் வீற்றிருப்பவரைத்தான் அவரை எதிர்ப்போரும் எதிர்பார்த்திருக்கிறார்கள், செய்து முடிப்பாரென்று. கடந்த ஒரு மாத காலமாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துவந்த தமிழர் தரப்பும், ரணில் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவோம் என அறிவித்திருப்பது ஒரு மாற்றுச் சிந்தனையாகவே கருதப்பட வேண்டும். டி.எஸ்.சேனநாயக்க அரசில் ஜி.ஜி.பொன்னம்பலமும், அறுபதுகளில் டட்லி சேனநாயக்க அரசில் தமிழரசு கட்சியும் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றதன் பின்னர் தேசிய அரசொன்றில் தமிழர் தரப்பு இணைந்து பொறுப்புகளை ஏற்றதேயில்லை.

சுமந்திரன் எம்.பி. ரணில் அரசியல் அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்கலாம் என அரசல் புரசலாக பேச்சுகள் அரசியல் அரங்கில் அடிபடுகின்றன. தமிழ் தேசிய தரப்பு இதை அவசர அவசரமாக மறுக்க வேண்டியதில்லை. தேசிய நெருக்கடி நேரமொன்றில் எமது உரிமைப் பிரச்சினை விவகாரங்களையும் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. என்ன வியாக்கியானம் செய்வாரோ என்ற கவலையும் ஒரு புறம் வைத்துவிட்டு சிங்கள மக்களுக்கு ஒரு பச்சை விளக்கைக் காட்டுவதே பொருத்தமானதாக இருக்கும். பாராளுமன்ற சந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வழியாக வந்த 'சமகி பலவேகய' உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ உட்பட சிலரை திருப்பி அனுப்பினார்கள். ஆனால் அவ்வழியாக வந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை போகச் சொல்லி விட்டார்கள் என்ற ஒரு செய்தியைப் பார்த்தோம். தமிழர் பிரச்சினை அல்லது உரிமைகளை இனவெறிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும், அணுகும் நிலை, சிங்கள இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் மரபணு மாற்றம் பெற்றிருப்பதாக நிச்சயமாகவே கருதலாம்.

எனவே தமிழர் தரப்பு பச்சை விளக்கைக் காட்ட வேண்டிய தருணம் இது, நாங்கள் பூட்சுகளால் மிதிக்கப்பட்டபோது நீங்கள் இசை நிகழ்ச்சிகளில் மூழ்கிக் கிடந்தீர்களே, இப்போது படுங்கள் பாடு என்ற பழி தீர்க்கும் எண்ணத்துக்கு இது நேரமல்ல.

எந்த நிபந்தனையுமின்றி தனியாளாக, இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்; அது என்னால் ஆகும் என்று ஒருவர் தன் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமின்றி முன்வந்திருக்கிறார். இது ஒரு சதி; ராஜபக்‌ஷமார்களைக் காப்பாற்றும் ஒரு முயற்சி என்பதெல்லாம் கட்சி அரசியல் பார்வைகள். நம்முடைய பிரச்சினை பொருளாதார சீர்குலைவு. கையில் பணமில்லாமை. நமக்கு பிராணனைப் போன்ற பொருட்களைக் கொள்வனவு செய்ய பணமில்லை. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பலரது பணப் பைகளும் அப்படித்தான். எதுவும் செய்யாவிட்டால் நாம் பட்டினி நிலை நோக்கியும் நகரலாம்.

எனவே புதிய பிரதமரின் பொருளாதார மீட்பு முயற்சிகளில் அனைத்து கட்சிகளும் பொது இலக்கு அடிப்படையில் ஒன்றிணைய வேண்டியது அவசியம். இது 'போஸ்மோர்டம்' செய்வதற்கான சந்தர்ப்பமல்ல. இவ் வகையில் வடக்கு கிழக்கு தமிழ்த் தரப்பு கட்சிகள் எத்தகைய சமிக்ஞைகளை விடுக்கவுள்ளன என்பது முக்கியம். இச் சமிக்ைஞகள் புரையோடிப்போன தமிழர் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல முடிவு கிடைப்பதற்கான ஆதாரத் தளமாகவும் அமையலாம்.

இதேசமயம் முஸ்லிம் கட்சிகளும் ரணில் அரசின் நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்க முடியும். இ.தொ.கா. புதிய அரசுக்கும் தன் ஆதரவை வழங்கியிருக்கிறது. எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்குவதாக தமிழ் முற்போக்கு அணி தெரிவித்துள்ளது. பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் பொது இலக்கின் –  பொருளாதார சீரமைப்பு – அடிப்படையில் அமைச்சர் பொறுப்பேற்பது, புதிய சிந்தனை எமது அரசியலில் பிறந்திருக்கிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமையும்.

ஈழத் தமிழர்களின் பணம் வெளிநாடுகளில் பில்லியன் பில்லியன்களாகக் கொட்டிக் கிடக்கின்றன. இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்குமானால் இப்பணத்தை இலங்கையில் முதலீடு செய்ய இவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். தேவை பச்சை விளக்கு சமிக்ஞைதான் என்றொரு கருத்து புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் உள்ளது.

புதிய பிரதமர் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி. பிளஸ் சலுகைக்கு ஆபத்து வரலாம் என்ற நிலை காணப்படுவதால் ஜெனீவாவில் இருக்கும் நம்மவர்கள் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றொரு கருத்தை புதிய பிரதமர் வெளியிட்டிருந்தார். அவரே பொறுப்புக்கு வந்திருப்பதால் பயப்படத்தேவையில்லை.

இது கை கொடுக்கும் நேரம்.

அருள் சத்தியநாதன்

Comments