வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமி கொலையில் சந்தேகம்; ரிஷாத்தின் மனைவி உட்பட மூவருக்கு 48 மணிநேர தடுப்பு | தினகரன் வாரமஞ்சரி

வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமி கொலையில் சந்தேகம்; ரிஷாத்தின் மனைவி உட்பட மூவருக்கு 48 மணிநேர தடுப்பு

காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த சிறுமி ஹிஷாலினி காயங்களுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட மூவரையும் 48 மணி நேரம் தடுப்புக்  காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் நேற்று  (24)  அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ரிஷாத் பதியுதீன் மனைவி , மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரை  நேற்று சனிக்கிழமை காலை கொழும்பு – புதுக்கடை இலக்கம் – 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குறித்த சிறுமி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை
மற்றும் ஆட்கடத்தல் வர்த்தகம் உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்தமை தொடர்பிலும் முன்னாள் அமைச்சரின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர இந்தச்  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் வீட்டில் ஹிஷாலினுக்கு முன்னர் அங்கு பணிபுரிந்த பிறிதொரு பெண் ஒருவரும்  துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண்ணும் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments