20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தவறு நடந்துள்ளமை ஆதாரத்துடன் நிரூபணம்! | தினகரன் வாரமஞ்சரி

20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தவறு நடந்துள்ளமை ஆதாரத்துடன் நிரூபணம்!

'நாட்டின் பொருளாதாரநெருக்கடிக்குத் தீர்வு காண அரசியல்ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம். அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது பிரதானம்' என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில்அவர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

கே: அரசியலமைப்புத் திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளார்கள் என நான் கருதவில்லை. அவர்களில் சிலருக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். எவ்வாறாயினும், 21ஆவது திருத்தத்தை கூடிய விரைவில் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதனால்தான் நாங்களும் அரசுடன் கைகோர்த்தோம். இல்லையெனில், ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தால், அவர் மட்டுமே இந்தப் பணியை நிறைவேற்ற முடியும். பாராளுமன்றத்திற்கு சில அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

இது அரசியல் நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதால் இது வெறும் பொருளாதார நெருக்கடி அல்ல. நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால், இந்த அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை இருந்தால் மட்டுமே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும். எனவே, 21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்துடன் அதிகார சமநிலைக்கு செல்வது முக்கியம்.

கே: 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பாராளுமன்ற அதிகாரங்கள் பலவீனமடைந்துள்ளதனால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், நிறைவேற்று அதிகாரங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: 20ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20ஆவது திருத்தச் சட்டத்தினால் பாராளுமன்றம் பலமற்ற நிலைக்குச் சென்றுவிட்டது என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. அண்மைக் காலங்களில் பாராளுமன்றத்தில் பேசப்படும் எதுவும் பொருத்தமற்றதாக மாறி, ஜனாதிபதி ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கவே அது வழிவகுத்தது. அதன் விளைவாக கடந்த இரண்டு வருடங்களில் நடந்த சம்பவங்கள் பற்றி நாம் அறிவோம். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தவறு நடந்துள்ளது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தவறை சரி செய்ய வேண்டும். மறுபுறம், நாடு பொருளாதார ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் தோல்வியடைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் நீதித்துறை எதிர்கொள்ளும் சில விஷயங்கள் தொடர்பான நிகழ்வுகள் இருந்தன. இது நீதித்துறையின் சுதந்திரத்தை இழக்கச் செய்துள்ளது. எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது.

கே: நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டம் இத்தருணத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: 21ஆவது திருத்தம் கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும். இந்த செயல்முறையை யாரேனும் சீர்குலைக்க முயற்சித்தால், நாட்டில் எரியும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அவர்களுக்கு உண்மையான விருப்பம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடும்.

தற்போது, மக்களின் பட்டினி தொடர்பாக ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. மக்களால் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. அந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

கே: 21ஆவது திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க சதி இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: 21ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை சிலர் தோற்கடிக்க விரும்பலாம். தற்போது ஏழத்தாழ 65எம்.பி.க்கள் எதிர்க்கட்சியாக தங்களை ஒருங்கிணைத்துள்ளனர். மேலும், 42எம்.பி.க்கள் சுயேச்சையாக மாறியுள்ளனர். பாராளுமன்ற அதிகாரங்கள் மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் அனைவரும் உள்ளனர். அதாவது எதிர்க்கட்சியில் உள்ள 107எம்.பிக்கள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் பாதிப் பேர் 21ஆவது திருத்தத்தை ஆதரித்தாலும் இந்தப் பிரச்சினை சீர்செய்யப்படும். அரசாங்கப் பாராளுமன்றக் குழுவில் பிளவு ஏற்படாது என்றும் அவர்கள் அனைவரும் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டுவார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்த வாரம் அந்தக் காட்சிகளை இறுதி செய்ய முடியும்.

கே: எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடங்குவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசாங்கம் தவறியது ஏன்?

பதில்: டொலர் நெருக்கடிக்கான காரணத்தை நாம் அனைவரும் அறிவோம். கடந்த சில வருடங்களில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன மற்றும் சில நீண்டகால பிரச்சினைகள் இந்த நிலைமைக்கு வழிவகுத்தன. எப்பொழுது எங்களின் கடன் தவணையை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு நாடு மாறியதோ, அதற்கு மேல் எந்தக் கடனையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நமது வருமானத்தை விட செலவு அதிகமாகும் போது, டொலர் நெருக்கடியை நாம் எதிர்கொண்டோம் என்பது இரகசியமல்ல. எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய டொலர்களைக் கண்டுபிடிப்பது ஒரு பிரச்சினையாகி விட்டது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடன் பெறுதல், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பணம் பெறுதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் உற்பத்தி மூலம் எமது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது போன்ற பல்வேறு தீர்வுகள் இருக்கலாம். தற்போது நமது ஏற்றுமதி வருமானமும் குறைந்துள்ளது.

வெளிநாட்டுப் பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் அமைப்புக்கள் இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை முறையான வழிகளில் பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். சில அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பணம் அனுப்பக் கூடாது என்று தூண்டினால், இங்குள்ள மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.                     

மக்கள் துன்பப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள், புலம்பெயர்ந்த இலங்கையர்களை தவறாக வழிநடத்தும் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இதன் விளைவாக, நாடு ஒரு கடுமையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதை வரிசைப்படுத்துவது எளிதானது அல்ல. எனவே, இந்த நிலைமையை இயல்பு நிலைக்கு மாற்ற சிறிது காலம் எடுக்கும்.

கே: அண்மையில் வற் வரி மற்றும் பல வரிகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், நுகர்வோர் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இது நமது உள்ளூர் வருமானத்தை அதிகரிக்கும், டொலர் வருமானத்தை அல்ல. உள்நாட்டில், பல்வேறு வரிச் சலுகைகள் வழங்கியதால், அரசாங்கத்தின் வருமானம் கிட்டத்தட்ட 40சதவீதம் சரிந்தது. உலகில் இதுபோன்ற வரிச்சலுகையை வழங்கிய வேறு எந்த நாடுகளையும் கண்டுபிடிப்பது கடினம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது வரி வீதங்கள் ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால் இங்கு மக்களின் உணவுப் பொருட்களில் இருந்து வரி விதிக்கப்படுகிறது. நடுத்தர மற்றும் பெரிய வணிகர்களிடம் இருந்து அதிக நேரடி வரிகளை வசூலிக்கும் முறையை அதிகரிக்க வேண்டும். இந்த நேரடி வரிகளை அதிகரிப்பதில் தவறில்லை. இதனால், உணவுப் பொருட்களின் விலை உயரலாம். இருப்பினும், இந்த உணவுப் பொருட்களின் விலைகள் முக்கியமாக அதிகரித்த வரிகளால் அல்ல, மாறாக உயர் பணவீக்கம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவினால் முக்கியமாக அதிகரித்துள்ளது.

அர்ஜூன்

Comments