"பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதே முக்கியம் அரசியல் நெருக்கடியை பின்னர் பார்க்கலாம்!" | தினகரன் வாரமஞ்சரி

"பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதே முக்கியம் அரசியல் நெருக்கடியை பின்னர் பார்க்கலாம்!"

முன்னாள் பிரதமரும் ஐ.தே.கவின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான நேர்காணல் நேர்கண்டவர்: - அருள் சத்தியநாதன்

இப்போது தேர்தல் நடத்துவது பொருத்தம் அல்ல அதற்கு பெருமளவு பணம் தேவைப்படும்

இது பணவீக்கத்தின் ஆரம்ப நிலை, தீவிர பணவீக்கம் இனித்தான் வரப்போகிறது

ஜனாதிபதியின் பதவி அதிகாரங்களைக் குறைப்பதால் நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கு முடிவு வந்துவிடப் போவதில்லை. இன்று மிகவும் அவசரமாக செய்யப்பட வேண்டியது பொருளாதார அபிவிருத்தி பொருளாதார மறுசீரமைப்பு. மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றுவது என்பதே. எனவே அதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியா அல்லது அரசியல் நெருக்கடியா என்றால் பொருளாதார நெருக்கடியே முதல் காரியமாக தீர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் இப் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையப் போகிறது"

இலங்கை அரசியலில் பல தோல்விகளைச் சந்தித்தவர் இவர். வெள்ளைக்காரரரைபோல நடந்து கொள்பவர்; மேட்டுக்குடித் தன்மையை கிராம மக்களிடம் வெளிப்படுத்துபவர்: இடத்துக்கு தகுந்த மாதிரி பேசத் தெரியாதவர் அப்புறம் ஒரு விடாக்கொண்டன் என்றெல்லாம் இவர் மீது குற்றச்சாட்டுகள் ஒருபுறம் என்றால் பாராளுமன்ற ஜனநாயகத்தை துறைபோகத் தெரிந்து வைத்திருக்கும் இவர் பொருளாதார அறிவு மிக்கவர். நிறைய விஷயங்களோடு கேட்பவருக்கு புரியும் வகையில் பேசக் கூடியவர்; தூர நோக்குக் கொள்கை கொண்டவர் என்று புகழப்படுபவரும் கூட. இன்றைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் நெருக்கடியான காலக் கட்டத்தில் இவரை நினைவு கூருபவர்கள் பலர். அதேசமயம் பலம் பொருந்திய ஐக்கிய தேசியக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாமற் போனமைக்கு இவரே பொறுப்பாளி என்ற பெயரை இவர் ஏற்க வேண்டியதாயிற்று. தேசிய பட்டியல் வாயிலாக அக் கட்சியின் ஒரே ஒரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் உள்ளவர்.

எனினும் கிழடானானாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதுபோல இன்றைக்கும் பிரமிப்பூட்டும் தேசியத் தலைவராக, உலகம் அறிந்த அரசியல்வாதியாக, பொறுப்புகளை ஏற்று நடத்தக் கூடியவராக விளங்குபவரே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க. இன்றைய திகதியில் அதிகம் பேசப்படுபவர். இவரைக் கடந்த புதனன்று சிறிகொத்தா ஐ.தே.க தலைமையகத்தில் சந்தித்தோம். அது ஒரு பரபரப்பான பாராளுமன்ற தினம் என்பதால் அவருக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. எம்மைக் கண்டதும் வழியெல்லாம் வாகன நெரிசல், பாராளுமன்றத்தில் இருந்து இங்கு வருவதற்கு 40 நிமிடங்களானது எனக் கூறி அலுத்துக் கொண்டார். பின்னர் எம்முடன் உரையாடினார். கேட்ட கேள்விக்களுக்கு எல்லாம் சடசடவென பதில்கள் வந்தன. அறிவும் அனுபவமும் செயல்திறனும் கொண்ட ஒருவரைத் தப்பாக இம்மக்கள் புரிந்து கொண்டு அவரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்களோ என்ற கேள்வி அவருடன் பேசியபோது எழத்தான் செய்தது.

அன்றைய தினம்தான் நிதி, நீதியமைச்சர் அலிசப்ரி நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலை தொடர்பான முக்கியமான ஒரு உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்திருந்தார். அந்த உரையை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டினார்.

"20ம் திருத்தத்துக்கு நான் முற்றிலும் எதிரானவன். எனவே 21ம் திருத்தம் கொண்டுவரப்படுவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படத்தான் வேண்டும். அத்திருத்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் இப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஜனாதிபதியின் பதவி அதிகாரங்களைக் குறைப்பதால் நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கு முடிவு வந்துவிடப் போவதில்லை. இன்று மிகவும் அவசரமாக செய்யப்பட வேண்டியது பொருளாதார அபிவிருத்தி பொருளாதார மறுசீரமைப்பு. மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றுவது என்பதே. எனவே அதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியா அல்லது அரசியல் நெருக்கடியா என்றால் பொருளாதார நெருக்கடியே முதல் காரியமாக தீர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் இப் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையப் போகிறது" என்றார் ரணில் விக்கிரமசிங்க.

 

வாழ்க்கைச் செலவு அதிகரித்துச்

செல்கிறதே?

இது ஆரம்ப நிலைதான். அடுத்துவரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். அதற்கு முன் தடுத்து நிறுத்த ஏதேனும் செய்தாக வேண்டும். இந் நிலை நீடிக்குமானால் எமது நாட்டு பொருளாதாரம் நொருங்க ஆரம்பிக்கும். தீவிர பணவீக்கம் இனிமேல்தான் வரப்போகிறது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏராளமானோர் தொழில்கள் இழப்பர். நிறுவனங்கள் திவாலாகும். பட்டினி நிலைதோன்றும், மரணங்களும் நிகழும், அது ஒரு மோசமான காலக்கட்டம். எனவே அரசியல் நெருக்கடியை ஒருபக்கம் வைத்துவிட்டு பொருளாதாரத்தை மீளவும் இயக்குவதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். நிதியமைச்சர் நல்லதொரு உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். அரசின் தவறுகளை ஒப்புக் கொண்டார். 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு குறைவான வெளிநாட்டு நிதியே கைவசம் உள்ளது. எனவே அரசியல் நெருக்கடியை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். மக்களின் வயிற்றுப் பாட்டுக்கு முதலில் வழி செய்ய வேண்டும்.

 

நீங்கள் நாட்டின் தலைவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

என்ன செய்திருப்பேனா? இப்படி ஒரு கூட்டம் காலிமுகத்திடலில் கூடியே இருக்காது. முன்னெசசரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பேன். 2020- 21 காலப்பகுதிக்கு ஏழு பில்லியன் டொலர் இதற்காகத் தேவைப்பட்டிருக்கும். சர்வதேச நாணய சபையிடம் மூன்று பில்லியன் கடன் பெற்றிருப்பேன். சர்வதேச நாணய சபையிடம் செல்ல வேண்டும். என்பதை முன்கூட்டியே சொன்னவன் நான் தான். நாங்கள் 2015இல் பதவிக்கு வந்தபோது அரசுஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது தவறு என்பதுபோல் சொல்லப்படுகிறது. நாட்டில் ஏற்படப்போகும் பணவீக்கத்தை அல்லது விலை உயர்வை சமாளிப்பதற்காகத்தான் அப் பணம் முன் கூட்டியே வழங்கப்பட்டது. தனியார்த்துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்தான். நாங்கள் திட்டமிட்டே வேலை செய்தோம்.

 

காலிமுகத்திடல் போராட்டம் பற்றி உங்கள் கருத்து?

மக்களின் மனநிலையை எதிரொலிக்கும் சின்னமாகவே அதைப் பார்க்கிறேன். அது மட்டுமல்ல; நாட்டின் வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தும் போனார். அமைதியான போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கக் கூடாது. இப் போராட்டங்களை பொலிசார் சிவில் பாதுகாப்புக்கு உரியவர்கள் என்ற வகையில் வன்முறையின்றியே கையாள வேண்டும். கட்டுப்பாடுகளை மீறிக் செல்கையிலேயே ஒரு கட்டத்தில் பொலிசார் தமக்கு உதவும் வகையில் இராணுவத்தை அழைக்கலாமே தவிர இராணுவம் இத்தகைய போராட்டங்களை கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது, இராணுவம் யுத்தத்துக்கானது. இம் மக்கள் போராசட்டங்களை பொருளாதாரத்தை வேகப்படுத்துவது, மாற்றி அமைப்பது, புதிய முதலீடுகளை கொண்டு வருவது, புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகம் செய்வது எண்ணவற்றின் மூலமே நிறுத்த முடியும்.

ஏனெனில் எமது பொருளாதார நிலை மேலும் மோசமாகி வருகிறது. அரசாங்கம் இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகக் கேட்டுள்ளது. ஆனால் என்ன, 500 மில்லியனுக்கு 12 கப்பல் எண்ணெய் மட்டுமே கொள்வனவு செய்ய முடியும். மேலும் ஒரு பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் கேட்டுள்ளோம். இந்த நிதியில் இருந்து எல்லாவகையான பொருட்களையும் இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாது. மருந்துகள் போன்றவற்றை வேறுநாடுகளில் இருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும், எவ்வாறாயினும் இந்தியக் கடன் உதவி மூலம் ஜூன் நடுப்பகுதிவரை சமாளிக்கலாம். எனவே பொருளாதாரத்தை ரீ- ஸ்டார்ட் செய்தாக வேண்டும்.

 

விரிவாகச் சொல்வீர்களா?

ஆம். அரசியலையும் பொருளாதாரத்தையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. இப்போது பொருளாதாரம் தான் முக்கியம், நிதியமைச்சருடன் நாம் விரிவாகப்பேசி எவ்வாறான ஒத்துழைப்புகளை வழங்கலாம் என்பதை பாராளுமன்றம் முடிவு செய்ய வேண்டும். அதனால்தான் பாராளுமன்றத்துக்கு நிதி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறேன். பொது நிதியை கையாளும் அதிகாரம் பாராளுமன்ற குழுவிடம் விடப்படுவதே சரியான நிதி நிர்வாகத்துக்கு வழிவகுக்கும். ஏனெனில் நிதியை அமைச்சர்களிடம் வழங்குவதன் மூலம் விரயத்துக்கும், ஒதுக்கி வைத்துக் கொள்ளப்படுவதற்கும் அது ஆளாகி சரியான பயன்பாட்டுக்குவராமல் போய் விடலாம். மேலும் வங்கிகள் காப்பாற்றப்படுவதும் முக்கியமானது. நாம் உலக நாடுகளிடம் உதவி பெற வேண்டும். முதலீடுகளை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். உதவி வழங்கும் நாடுகளை அழைத்து இலங்கையில் ஒரு மாநாட்டை நடந்த முயற்சிக்க வேண்டும். நிதியமைச்சர் நிலைமைகளை சீர்செய்ய இரண்டாண்டு காலமெடுக்கும் என்கிறார். ஆனால் ஐந்தாண்டுகளும் எடுக்கலாம். எனவே தாமதம் செய்யாமல் உடனடியாக செயல்பட வேண்டும்.

 

ஜனாதிபதி, பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும், இடைக்கால அரசு அமைய வேண்டும், புதிய தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற பல உபாயங்கள் பற்றி பேசப்படுகின்றன. உங்கள் கருத்து என்ன?

பல வியூகங்கள் உள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் இருவருமே பதவி விலக வேண்டும் என்பது ஒன்று ஜனாதிபதி இருக்க பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது இரண்டாவது. இருவருமே பதவியில் நீடிக்க வேண்டும் என்பது மூன்றாவது. பிரதமர் பதவியில் நீடிக்க ஜனாதிபதி விலக வேண்டும் என்பது நான்காவது. இதில் எது பொருத்தமானது என்பதை அரசே தீர்மானிக்க வேண்டும். மேலும் இடைக்கால அரசு அமைக்க அரசியலமைப்பில் இடமில்லை. பல கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட அரசையே அமைக்க முடியும். இவ்விடயத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் யோசனைகளை முன்வைத்துள்ளது. சட்டத்தரணிகள் அமைப்பும் யோசனைகளை முன் வைத்துள்ளது. இவை தொடர்பாக ஆராய்ந்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரலாம் என்பது என் அபிப்பிராயம். பொருளாதார நெருக்கடியைப் போலவே அரசியல் நெருக்கடிக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அரசியலையும் பொருளாதாரத்தையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும்.

பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் நீண்ட கால, மத்திய கால, குறுகியகால திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். வங்கிகள் வலிமை கொண்டவையாக மாற்றப்பட்டு கடன்களை நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளவழி செய்யப்பட வேண்டும். முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒரு இரும்பு சட்டம் (Iron frame) அமைக்கப்பட்டு ஒரு இருபது ஆண்டுகால பொருளாதார இலக்கை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளுடன் தொடர்ந்து பேசிவர வேண்டியது அவசியம். ஸாம்பியா பொருளாதார நெருக்கடியில் இருந்து ஐந்து மாதங்களில் வெளிவந்ததை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இப் பிரச்சினையின் முடிச்சுகளை மெதுவாக அவிழ்க்கவும் முடியும்; கத்தியால் வெட்டவும் முடியும். கத்தியால் வெட்டுவதானால் சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

தேர்தல் ஒன்றுக்கு போவது இப்போது உசிதமானதல்ல. ஒரு தேர்தலை நடத்த 20முதல் 25 பில்லியன் ரூபா செலவாகும். ஒரு வேட்பாளர் குறைந்த பட்சம் 25மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இதைவிட அதிகமாக செலவிடும் வேட்பாளர்களும் உள்ளனர். எனவே ஒரு பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க 65 பில்லியன் ரூபா செலவாகும். எனவே இவ்வளவு பணத்தை செலவிடுவது இன்றைய நிலையில் சாத்தியமாகுமா? பொதுத் தேர்தலைத் தவிர்த்து வேறு வகையான ஆட்சியை அமைப்பதே சரியானது.

புதிய வரவு செலவு திட்டமொன்றைப் பற்றி நிதியமைச்சர் பேசியிருக்கிறார். அது அபிவிருத்தி வரவு செலவு திட்டமாக அமைய வேண்டியது முக்கியம். அவசியமற்ற எல்லா செலவுகளும் நிறுத்தப்பட வேண்டும். அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். அந்நிதியை நிவாரணம் வழங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். மக்களின் கஷ்டங்களைக் குறைப்பதே இப்போது முக்கியம்.

பாராளுமன்றத்தில் அங்கத்தவர்கள் சிறுபிள்ளைகள் போல செயல்படுகிறார்களே!

ஆமாம். இந்த பாராளுமன்ற கலாசாரத்தை மாற்றியாக வேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என நானும் கூறியிருக்கிறேன். இப் பாராளுமன்ற ஒழுக்கம் பிரிட்டனில் கைகொள்ளப்படுகிறது. பாராளுமன்றத்திலும் வெளியிலும் கண்ணியமாக நடந்து கொள்ளும்படி அங்கு கேட்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அங்கு தண்டனை வழங்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் ஒழுக்கம் பேணப்படாவிட்டால் மக்கள் 225 பேரையும் வெளியே போ என்றுதான் சொல்வார்கள்.

இவ்வாறு கேள்விகளுக்கு தயக்கமில்லாமல் பதில் அளித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் மிகமிக அவசியப்படுவதாகவும் ஆனால் தான் அதை செய்யமுயன்றபோது கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எண்ணெய்விற்கும் உரிமையை வழங்க வேண்டாம் என்றார்கள். இப்போது பாருங்கள், ஐ.ஓ.சி.தான் எமக்கு உதவிக்கு வருகிறது. சிங்கப்பூருடன் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முயன்ற போதெல்லாம் தடுத்தார்கள்.

அவை நடைமுறையில் இருந்திருந்தால் இன்று எமக்கு உதவுவதாக அமைந்திருக்கும். இன்று எமக்கு அவசியப்படுவது பொருளாதார சுதந்திரம். அதை நோக்கி பயணிப்பதே இன்றைய முக்கியத் தேவை.

Comments