நாட்டில் கிளர்ச்சியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றும் திட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

நாட்டில் கிளர்ச்சியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றும் திட்டம்!

'அமைதியான முறையில்ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான உரிமை மக்களுக்கு  உள்ளது. ஆனால், அமைதியான ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுவதற்கு சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்' என முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே முன்னாள் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கே: அண்மையில் நடைபெற்ற அரசாங்கக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எவை?

பதில்: நாட்டில் நிலவும் எரிபொருள், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தேவையான அளவு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், சேதன உரங்களை இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. எரிபொருள் சிக்கலைத் தீர்ப்பதற்கும், இந்தியக் கடன் வரியின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான ஒதுக்கீடுகளைக் கண்டறிய முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளில், மின்சாரத் துறைக்கு போதுமான எரிபொருளை வழங்க அறிவுறுத்தப்பட்டது. மீதித் தொகையைத் தேவையான மருந்துகளின் இறக்குமதிக்குப் பயன்படுத்துவது பற்றியும் ஆராயப்பட்டது. மேலும், புதிய அமைச்சரவை இன்னும் நியமிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் 113உறுப்பினர்களின் ஆதரவைக் காண்பித்து அரசாங்கத்தை அமைக்க வருமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்தது. பிரதமர் உட்பட அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைப்போம் என்று பிரதமர் கூட ஒப்புக் கொண்டார்.

இல்லையெனில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. அப்போது கூட்டணி ஆட்சியில் இணைபவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலும் குறைந்துள்ளன. அதேவேளை, கொவிட்-19தொற்றுநோயால் பலர் வேலை இழந்துள்ளனர். இதன் விளைவாக, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் தாக்கம் இங்கும் உணரப்பட்டுள்ளது.

தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான அதிகரிப்பைக் காட்டியுள்ளது மற்றும் ஒவ்வொரு மாதமும் 100,000சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதோடு, அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்குள் அவர்களது பணம் நாட்டிற்கு வந்து சேரும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காண முடியும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உதவியுடன் இந்த நெருக்கடியை எம்மால் சமாளிக்க முடியும். இருப்பினும், இந்த நெருக்கடியை சமாளிக்க சிறிது காலம் எடுக்கும். இந்த நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்திருந்ததால், எப்படியாவது மக்களைத் தூண்டி விட்டு ஏப்ரல் 3ஆம் திகதி வீதிக்குக் கொண்டு வந்தனர்.

கே: பொதுஜன பெரமுனவின் 40பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அரசுக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா?

பதில்: ஆம், இன்னும் அரசாங்கத்திடம் பெரும்பான்மை உள்ளது, எங்களிடம் 118உறுப்பினர்கள் உள்ளனர். பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டமைக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால், சில சமயங்களில் அவர்கள் மீண்டும் அரசாங்கத்துடன் கைகோர்ப்பார்கள்.

கே: பிரதமர் பதவி விலகவில்லை என்றால், அமைச்சரவை கலைக்கப்பட்டதாகக் கருத முடியாது என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இராஜினாமாக் கடிதங்களைப் பிரதமரிடம் கொடுத்தது தவறானது என சட்டநிபுணர்கள் வாதிடுகின்றனர். உண்மையில், ஜனாதிபதி எந்த நேரத்திலும் அந்தக் கடிதங்களில் கையெழுத்திடலாம் என்பதால் அவற்றை பிரதமரிடம் கொடுத்தோம். அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர் நான்கு புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த தேர்தல் நடைபெறும் வரை அமைச்சரவை செயற்பட முடியும். உண்மையில், யாராவது 113உறுப்பினர்கள் இணைந்து ஆட்சி அமைக்கும்வரை செயற்படும் திறன் எமக்கு உள்ளது.

நாம் அனைவரும் அமைச்சுப் பொறுப்புக்களை இராஜினாமாச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் முன்மொழிந்தார். அப்படியாயின் பாராளுமன்றத்தில் செயற்பட முடியாது என்பதால், பிரதமர் பதவி விலகக் கூடாது என்று நாங்கள் முன்மொழிந்தோம். எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் திறன் படைத்தவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். கடந்த பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த பல்வேறு அரசுகளின் கீழ் செயற்பட்ட அதிகாரிகளின் குறைபாடுகள் மற்றும் நிர்வாகப் பிழைகளுமே இந்த நிலைமை உருவாகக் காரணமாகும். இந்த தவறை சரி செய்ய எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

கே: எதிர்க்கட்சிகள் 113உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கும் நிலையில் இல்லை. இந்நிலை தொடருமானால் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படுமா?

பதில்: எதிர்க்கட்சிகள் 113உறுப்பினர்களின் ஆதவைப் பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை என்றால், அதனால்தான் கூட்டணி ஆட்சி அமைக்கக் கோரியுள்ளோம். மகாநாயக்க தேரர்கள் கூட ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்குச் செல்லும் நிலையில் நாங்கள் இல்லை. மகாநாயக்க தேரர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தன. நாட்டில் நெருக்கடியான சூழலை உருவாக்கி தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நனவாக்க வேண்டும் என்பதையே அவர்கள் உண்மையில் விரும்புகின்றனர்.

கே: பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தயாராக இல்லை என்றால், தற்போது நிலவும் நெருக்கடிக்கு என்ன தீர்வு?

பதில்: பாராளுமன்றத்தில் சுயேச்சையாக மாறிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நாங்கள் காபந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அதுதவிர வேறு மாற்றுவழி இல்லை.

கே: ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டுமெனக் கோரி தற்போது நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் சில அரசியல் நோக்கங்கள் உள்ளன. ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் ஏறிச் சென்றமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த 'ஹெல்மெட் கும்பல்' நாடு தழுவிய போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதும், பிரச்சினைகளை உருவாக்குவதும் வெளிப்படையானது. ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வர முடியாத அரசியல் கட்சிகள் நாட்டில் கிளர்ச்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றன.

இந்தச் செயல்களின் பின்னணியில் முன்னிலை சோசலிசக் கட்சியும் உள்ளது. மேலும் அதன் உறுப்பினர்கள் நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர். மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் போது, அந்த இடங்களுக்கு வந்து குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில், இந்த வெளியாட்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு மக்களைத் தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் 'யஹபாலன' அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிலவிய நிலைமையும் இந்த நிலைமையை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளதை அவர்கள் உணர வேண்டும்.

2015இல் இருந்து பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடனை மீளச் செலுத்துவதற்கு டொலர்கள் தேவைப்படுகின்றன. இன்று நாம் டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து விடுபட நாம் தொடங்கிய வேலைத்திட்டங்கள் வெற்றியடைகின்றன. நமது செலவினங்களைக் குறைத்து, நாட்டிற்கு தேவையற்ற இறக்குமதியை நிறுத்தியுள்ளோம். இருப்பினும், இந்த முடிவுகளைப் பார்க்க சிறிது காலம் ஆகும். இந்த நெருக்கடியில் இருந்து விடுபடுவோம் என்று எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். அதனால்தான் கடைசி நேரத்தில் இந்த நிலையை உருவாக்க முயன்றனர்.

அர்ஜூன்

Comments