மலிங்கவின் சாதனையை முறியடித்த பிராவோ! | தினகரன் வாரமஞ்சரி

மலிங்கவின் சாதனையை முறியடித்த பிராவோ!

கிரிக்கெட் உலகின் பிரபல்யமான பிரிமியர் லீக் ரி/20கிரிக்கெட் தொடர்களில் முன்னிலை பெற்ற தொடராக கடந்த மாதம் ஆரம்பமான இந்தியன் பிரிமியர் லீக் தொடர் உள்ளது. அத்தொடரில் லசித் மலிங்க படைத்திருந்த அதிக விக்கெட் வீழ்த்திய (170) சாதனையை மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் டுவொன் பிராவோ முறியடித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான ஐ. பி. எல். தொடர் கடந்த மாதம் ஆரம்பமாகித் தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்ட முதல் போட்டியிலே இரு அணிகளிலும் இடம்பெறும் இலங்கை வீரர்கள் விளையாடாவிட்டாலும் இதுவரை ஐ.பி.எல். தொடர்களில் பந்து வீச்சில் சாதனைபடைத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவின் சாதனையை சமப்படுத்திய போட்டியாக அது அமைந்தது.

இதுவரை ஐ. பி. எல். வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இலங்கை வேகப்பந்து விச்சாளர் லசித் மலிங்க சாதனைபடைத்திருந்தார். கே.கே. ஆர். அணியுடனான போட்டியில் சென்னை அணிக்காக விளையாடும் மேற்கிந்தியத் தீவின் வீரர் டுவோன் பிராவோ அப்போட்டியில் 20ஓட்டங்களுக்கு 3விக்கெட் வீழ்த்தியதன் மூலம் லசித் மலிங்கவின் 170விக்கெட்கெடுகளை என்ற மைல்கல்லை சமப்படுத்தினார்.

பிராவோ- மலிங்க ஆகிய இரு பந்து வீச்சாளர்களையும் ஒப்பீட்டுப் பார்க்கும் போது பிராவோவை விட லசித் மலிங்க முன்னிலையில் உள்ளதை அவர்களது புள்ளி விபரங்களிலிருந்து அறிய முடிகிறது.

லசித் மலிங்க 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 122போட்டிகளில் கைப்பற்றிய 170விக்கெட்டுகளையே பிராவோ 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐ. பி. எல். தொடர்களில் 152போட்டிகளில் 149இன்னிங்ஸ்களில் விளையாடியதன் மூலமே மேற்படி சாதனையை  பிராவோ சமப்படுத்தியுளளார். மலிங்க பிராவோவை விட 30போட்டிகள் குறைவாக பங்குபற்றியே 170விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் அவர் இந்த விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு 471.1ஓவர்கள் வீசியுள்ளதுடன் பிராவோ 489.3ஓவர்கள் விசியுள்ளார். ஓட்டங்கள் விட்டுக்கொடுக்காத ஓவர்களாக மலிங்க 8ஓவர்கள் வீசியுள்ளதுடன் பிராவோ 2ஓவர்களையே ஓட்டமற்ற ஓவர்களாக வீசியுள்ளார்.

எதிரணியினர்களுக்கு ஓட்டங்கள் விட்டுக்கொடுப்பதில் லசித் மலிங்க மொத்தமாக 3365ஓட்டங்கள் கொடுத்துள்ளதுடன், பிராவோ 4081ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

லசித் மலிங்கவின் சிறந்த பந்துவீச்சாக 13ஓட்டங்களுக்கு 5விக்கெட்டுக்கள் பதிவாகியுள்ளதுடன், பிராவோ 22ஓட்டங்களுக்கு 4விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும். பிராவோ இதுவரை நடைபெற்ற தொடர்ளில் 2017ம் ஆண்டு ஐ. பி. எல். பருவத்தில் முழுமையாக விளையாட முடியாமல் போயுள்ளதுடன் 2014ம் ஆண்டு காயம் காரணமாக ஒரு போட்டியில் மாத்திரம் பங்குகொண்டார். லசித் மலிங்க 2019ம் ஆண்டு வரை நடைபெற்ற தொடர்களில் 2016ம் ஆண்டு தொடரைத் தவிர மற்றைய எல்லாப் தொடர்களிலும் விளையாடியுள்ளார்.

லசித் மலிங்க 9 தொடர்களில் படைத்த சாதனையை நெருக்குவதற்கு பிராவோ 14 தொடர்களில் விளையாடியுள்ளார். தொடர்ந்து ஐ.பி.எல்இல் விளையாடி வரும் பிராவோ கடந்த வாரம் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் லசித் மலிங்கவின் சாதனையை முறியடித்துள்ளார். அவர் இத்தொடர் முழுவதும் விளையாடினால் மேலும் முன்னோக்கி செல்ல அதிக வாய்ப்பு பிராவோவுக்கு உள்ளது.

Comments