அரசியல் இலாபங்களை பெறுவதற்கு முயற்சிக்கும் தருணமல்ல இது! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் இலாபங்களை பெறுவதற்கு முயற்சிக்கும் தருணமல்ல இது!

சொந்த அரசியல் இலாபங்களைக் கைவிட்டு நாட்டை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும் என்று காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைஎடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலைமைகள் குறித்துஅமைச்சர் எமக்கு பேட்டி வழங்கினார்.

கே: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை நடத்தியிருந்தார். இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷஒரு சர்வாதிகாரி என்ற எண்ணம் ஆரம்பத்தில் சிலருக்குக் காணப்பட்டது. எனினும், அவரின் இரண்டு வருட நிர்வாகத்தைப் பார்க்கும் போது ஜனநாயகத் தலைவர் என்பது தெளிவானது. அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து பல்வேறு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் எவரும் துன்புறுத்தப்படவில்லை அல்லது தொந்தரவு செய்யப்படவில்லை. இந்த டொலர் பிரச்சினையும் பொருளாதார நெருக்கடியும் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டவை அல்ல. இது நீண்டகாலப் பிரச்சினை என்பதை பெரும்பான்மையான மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 74வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த பிரச்சினையே இதற்குக் காரணம் என ஜே.வி.பியும் கூறுகிறது. எவ்வாறாயினும், பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நேர்மையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியது. நாட்டின் தலைவர் என்ற வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். பிரதான எதிர்க்கட்சி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த மாநாட்டில் வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டதை பாராட்டுகிறோம். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட விடயத்தை முன்வைத்த போது, ஜனாதிபதி அவரிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். ஜனாதிபதி அத்தகைய நெகிழ்வான தலைவர்.

மாநாட்டை ஜனாதிபதி கையாண்ட விதத்தைப் பார்க்கும் போது நாம் மகிழ்ச்சியடையலாம்.

அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தமையால் பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடிந்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், ஜனாதிபதி பொறுமையாக நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறி வருகிறார். அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது. அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சி என்ற ரீதியில் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பெற்று நெருக்கடிகளைச் சமாளிப்பது மிகவும் பொருத்தமானது. இந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.

நெருக்கடிக்குத் தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும். மக்கள் கஷ்டப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை அதிகப்படுத்தி தமது அரசியல் முகாம்களையும் வாக்குத்தளத்தையும் பலப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். தேர்தல் வரும் போது, மற்ற அரசியல் கட்சிகளை வெற்றி கொள்ள தங்கள் பலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மக்கள் எதிர்கொள்ளும் சுமைகளையும் இன்னல்களையும் குறைக்க அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும். மக்கள் புத்திசாலிகள். தங்களின் சார்பில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை புறக்கணிக்க முயற்சிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அவர்கள் எந்த மன்னிப்பும் வழங்க மாட்டார்கள். நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க சில அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட முயற்சிகளால் மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அத்தகைய அரசியல் கட்சிகளால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

கே: ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளான பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பல அரசியல் கட்சிகளும் சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்திருந்தன. இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: பதினொரு கட்சிகளில் சில கட்சிகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இருவரை மாத்திரம் அனுப்பாமல் ஏனையவர்களும் கலந்து கொண்டிருக்க வேண்டும். சரியாயின் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு முழு நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் விவாதித்திருக்க வேண்டும். அது மாத்திரமன்றி முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்திருக்கலாம்.

மாநாட்டைப் புறக்கணிப்பது சமகி ஜன பலவேகயா மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்றதல்ல. மக்களின் எரியும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை என்பது புலனாகிறது. அவர்கள், எப்படியாவது, அரசாங்கத்தை சங்கடப்படுத்தவும், மக்களை சிரமத்திற்குள்ளாக்கி, தங்கள் வாக்குப் பலத்தை அதிகரிக்கவும் விரும்புகிறார்கள்.

கே: பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் விசேட கூட்டத்தின் முடிவு என்ன?

பதில்: எங்களின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், எரிபொருள் மற்றும் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி வழங்கவும், மின்வெட்டைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் எமது பிரதிநிதிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடனுதவி மூலம் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்றவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூட்டத்தில் தெரிவித்தார். எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நிதியமைச்சர் நடவடிக்கை எடுப்பார். சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்து தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதை விட நெருக்கடியை சமாளிக்க தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். இந்த நிலைமையை அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விமர்சனங்களால் மட்டுமே தீர்வு கிடைக்காது எனவும் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிலைமையை எதிர்கொள்ள அரசாங்கத்தை அமைத்த அனைவரும் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

கே: எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டும். நிலைமையைத் தீர்க்க எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகள் எவை?

பதில்: அரசாங்கம் இதை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதுகிறது மற்றும் எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான வரிசைகளைத் தடுக்க முயற்சிக்கிறது. சைமயல் எரிவாயு மற்றும் எரிபொருளை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.

அர்ஜூன்

Comments