சந்தையில் மஞ்சள் நிறத்தில் பெரிய மாம்பழம் புழக்கத்தில் இருக்கின்றது. இவ்வாறான மாம்பழத்தை அண்மைக்காலமாகவே சந்தையில் காண முடிகிறது. அதனால் இதனை சிலர் அல்பொன்சோ மாம்பழம் என்கிறனர். இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழம் என்கின்றனர். மேலும் சிலர், இது மரபணு மாற்றப்பட்ட மாம்பழம் என்கின்றனர். இவ்வாறு வெவ்வேறுபட்ட அபிப்பிராயங்கள் இம்மாம்பழம் குறித்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இவ்வாறான சூழலில் பெருந்தோட்ட அமைச்சின் ஏற்றுமதி விவசாய வலய நிகழ்ச்சித் திட்டம் இம்மாம்பழம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விஷேட கள விஜயமொன்றை கடந்த வாரம் (20-21.11.2023) ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஊாக இம்மாம்பழச் செய்கை முன்னெடுக்கப்படும் அநுராதபுரம், தந்திரிமலை, கல்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளையும் செட்டிக்குளம், ஆண்டியாபுளியங்குளம் ஆகிய இடங்களில் இராணுவத்தினர் அமைத்துள்ள விவசாயப் பண்ணைகளில் இம்மாம்பழச் செய்கையை முன்னெடுக்கும் இராணுவ அதிகாரிகளையும், இம்மாம்பழச் செய்கைக்கு வித்திட்ட டொம் எல்லாவல
நிறுவனத்தின் உயரதிகாரிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு அண்மையில் கிடைக்கப் பெற்றது. அதன் ஊடாக இம்மாம்பழம் குறித்த உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது. அந்த வகையில் எல்லாவல ஹோட்டிகல்சர் தனியார் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் வீரசூரிய பண்டார இம் மாமரத்தின் பூர்வீகம் அதன் தன்மைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் எம்மிடம் விலாவாரியாக எடுத்துரைத்தார். அவரது தகவல்களின் படி, இம்மாம்பழமானது, அல்பொன்சோ மாம்பழமோ, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அல்லது மரபணு மாற்றப்பட்ட மாம்பழமோ அல்ல. இது இங்கேயே உருவாக்கப்பட்ட புதிய மாமரத்தின் பழமாகும். டொம் எல்லாவல ஜுவான் கார்லோஸ் என்ற பெயர் கொண்ட ரி.ஜே.சி மாமரம் அளிக்கும் மாம்பழமே இது.
இரத்தினபுரியைச் சேர்ந்த விவசாய
நிபுணரான தேசபந்து டொம் எல்லாவல கல்கிரியாகம பிரதேசத்தில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான 140 ஏக்கர் வெற்று நிலத்தை 1992 இல் குத்தகைக்கு
எடுத்தார். அக்காலப்பகுதியில் மாம்பழம் இலங்கையில் வீட்டுத் தோட்டச் செய்கையாக இருந்தது. இதனை வர்த்தகப் பயிர்ச்செய்கையாக
முன்னெடுக்க விரும்பினார் அவர். அதற்கேற்ப அன்றைய காலப்பகுதியில் பிரபலம் பெற்று விளங்கிய கறுத்த கொழும்பான், வெள்ளைக்
கொழும்பான், விலாட் ஆகிய மூன்றையும் வணிக பயிர்களாக செய்கை பண்ண அவர் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அவருக்கு தேவையான
மாங்கன்றுகளை விவசாய அமைச்சு வழங்கியது. அவற்றை அன்றைய கால ஒழுங்குக்கு ஏற்ப ஏக்கருக்கு 35 மாங்கன்றுகளாக நட்டார்.
அம் மாமரங்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பலனளிக்க ஆரம்பித்த போதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கப்பெறும் அறுவடையிலும் சுமார் 50 வீதமானவை பழுதடையக்கூடியனவாக இருந்தன.
அதனால் இம்மாம்பழச் செய்கையை வர்த்தக நோக்கில் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதென்ற முடிவுக்கு வந்த டொம் எல்லாவல இச்செய்கையைக் கைவிடவோ அவற்றில் இருந்து வெளியேறிவிடவோ இல்லை. மாறாக இச்செய்கையை வர்த்தக நோக்கில் முன்னெடுக்கும் வகையில் புதிய வகை மாங்கன்றுகளை உருவாக்கும் முயற்சியை அவர் தம் விவசாயப் பண்ணையில் ஆரம்பித்தார். அதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த விவசாய நிபுணர் ஜுவான் கார்லோஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டார் டொம் எல்லாவல. அதன் ஊடாக 17 வகை மாங்கன்றுகளை அவர் உருவாக்கினார். இம்மாமரங்களின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற மாம்பழங்களை உலகிலுள்ள பல முன்னணி மாம்பழங்களுடன் ஒப்புநோக்கிய அவர், அவற்றில் பிரபலயம் பெற்ற மாம்பழத்தை வர்த்தக நோக்கில் முன்னெடுக்கலானார். அதற்கு டொம் எல்லாவல ஜுவான் கார்லோஸ் என அவரே பெயரிட்டார். இது நீண்ட பெயராக இருப்பதால் தற்போது ‘டொம் ரி.ஜே.சி’ என அழைக்கப்படுகிறது. ஆனாலும் ரி.ஜே.சி என்ற வர்த்தக பெயரில் தான் இம்மாம்பழம் சந்தைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இம்மாம்பழச் செய்கை குறித்து பெருந்தோட்ட அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ரன்சிலு வட்டவள விளக்கமளிக்கையில், இம்மாமரத்தைப் பொறுத்த வரையில் வரண்ட மற்றும் இடை மத்திய வலயப் பிரதேசங்களில் நன்றாக செய்கை பண்ண முடியும். 15 அடிகள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 மரக்கன்றுகளை நடலாம். மூன்றடிகள் அகல, நீள, ஆழ குழியில் இதனை நட வேண்டும். ஏனைய பயிர்களைப் போன்று அதிக இரசாயனப் பசளைகளையோ கிருமி நாசினிகளையோ இச்செய்கைக்கு பயன்படுத்தத் தேவையில்லை. இது ஒரு சூழல் நேய பயிர்ச்செய்கை எனக் குறிப்பிடலாம். நட்டது முதல் 30 மாதங்கள் முதல் 36 மாதங்களில் (இரண்டரை முதல் 3 வருடங்கள்) காய்க்கத் தொடங்கும். இதன் காய்கள் கோழி முட்டை அளவை அடையும் போது அதனை உறையில் இட்டு கட்ட வேண்டும். அதன் ஊடாக மாங்காயில் பழ ஈ மொய்ப்பதையும் காற்றில் பரவும் தூசிதுகள்கள் மாங்காயில் படிவதையும் அவற்றால் மாங்காய்க்கு பாதிப்புக்கள் ஏற்படுவதையும் குறைத்துக் கொள்ளலாம்.
இம்மாமரம் 30 வருட காலம் உயிர் வாழும் என உறுதிபடக் கூறலாம். என்றாலும் அது 100 வருடங்கள் வரையும் கூட பலனளிக்கலாம்.
ஒவ்வொரு மாம்பழமும் 500 கிராம் முதல் 1000 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். அதனால் 3 வருடங்களானதும் ஒரு மாமரத்தில் சுமார் 50 கிலோ கிராம் வரை இம்மாங்காயை அறுவடை செய்யலாம்.
குடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்கு இது பெரிதும் பயனளிக்கக்கூடிய பயிர்ச்செய்கை இது. அதனால் 2016 இல் அன்றைய சிறு கைத்தொழில் அமைச்சின் ஊடாக இப்பயிர்ச்செய்கை மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படலானது. அன்று குடும்பத்திற்கு 25 மாங்கன்றுகள் வீதம் இலவசமாக விநியோகிக்கப்பட்டதோடு, இச்செய்கைக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டன என்றார்.
‘
இந்த ரி.ஜே.சி மாமரத்தைப் பொறுத்த வரையில் அதனை உயரமாக வளர இடமளிக்கலாகாது. அது படர்ந்து வளரும் வகையில் கத்தரிக்க வேண்டும். முதிர்ந்த கடும் பச்சை இலைகளை மரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மரத்தின் கிளைகளில் சூரிய ஒளி அதிகம் படக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும். அதன் ஊடாக அதிகம் மாய்காய் கிடைக்கப்பெறும்’ என்கிறார் பெருந்தோட்ட
அமைச்சின் குறித்த கருத்திட்டத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரியந்த ஹேரத்.
ரி.ஜே.சி மாம்பழங்களைப் பழுதடையாமல் பல நாட்கள் வைத்துக்கொள்ளலாம். பழத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படாது. பழ ஈக்கள் இம்மாம்பழத்திற்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். இதனை அனுபவ ரீதியாக அவதானித்த டொம் எல்லாவல, அவுஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு நேரில் சென்று அந்நாடுகள் வணிக ரீதியில் முன்னெடுக்கும் மாம்பழச் செய்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதனடிப்படையில் தான் இம்மாமரம் பூத்துக் காய்க்கும் மாங்காய், முட்டை அளவினை அடையும் போது அதற்கு பாதுகாப்பு உறை கட்டும் முறையை அறிமுகப்படுத்தினார். அதன் ஊடாகத் தரமான மாம்பழத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது நாட்டில் 6 மில்லியன் ரி.ஜே.சி மாமரங்கள் நடப்பட்டுள்ளன. இதனை எதிர்வரும் வருடம் 8 -10 மில்லியன் மரங்களை வரை அதிகரிக்கப் பெருந்தோட்ட அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் 2000 தொன் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இம்மாம்பழம் இவ்வருட இறுதியாகும் போது 5000 தொன்களாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாக குறிப்பிடுகிறார் சூரிய பண்டார.
இம்மாமரச் செய்கை பெரிதும் மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் ஒன்றான அனுராதபுரம் மாவட்டத்தின் தந்திரிமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த தந்திரிமலை விகாராதிபதி சந்திர ரத்ன நாயக்க தேரர் அவர்களுடன் அளவளாவும் போது, ‘எமது விகாரையை அடிப்படையாகக் கொண்டு இங்குள்ள 105 கிராமங்களில் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரி.ஜே.சி மாங்கன்றுகள் 2018 இல் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவை தற்போது பலனளிக்கும் கட்டத்தை அடைந்துள்ளன. இச்செய்கையை அறிமுகப்படுத்தும் போது அதனை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. ஆனால் இன்று அதன் அறுவடை மற்றும் பிரதிபலன்களைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான மக்கள் இச்செய்கையில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்’ என்றார்.
இதேவேளை தந்திரிமலை, மதவாச்சிஎலியவைச் சேர்ந்த எம். பியதாச, “2018இல் இலவசமாகக் கிடைக்கப்பெற்ற 25 ரி.ஜே.சி. மரக்கன்றுகளை எனக்குரிய காணியில் நட்டேன். மூன்று வருடங்கள் கடந்ததும் அது பலனளிக்கத் தொடங்கியுள்ளது. முதல் தடவை 100 கிலோ கிராமும், இரண்டாம் தடவை 150 கிலோ கிராமும் என்றபடி மாங்காய் அறுவடை
கிடைக்கப்பெற்றது. இச்செய்கைக்கு பெரிதாக பசளையோ, கிருமி நாசினியோ பயன்படுத்தவில்லை. இச்செய்கையை ஒழுங்குமுறையாகச் முன்னெடுத்தால் வேறுபயிர்ச்செய்கையில் ஈடுபடத் தேவையில்லை. அந்தளவுக்கு வருமானம் தரக்கூடியது’ எனக் குறிப்பிட்டார்.
ரி.ஜே.ரி மாம்பழச் செய்கையில் ஈடுபட்டுள்ள மற்றொரு செய்கையாளரான யாணி சமன்லதா கூறும்போது, ‘இம் மாமரக்கன்றுகள் எமக்கு நல்ல அறுவடை அளிப்பனவாக உள்ளன. வீட்டு வேலைகளில் ஈடுபட்டபடியே இச்செய்கையை நாம் மேற்கொள்கிறோம், இச்செய்கையில் கிடைக்கப்பெறும் வருமானம் வேறு செய்கைகளில் கிடைக்கப் பெறுவதில்லை. அதனால் இச்செய்கையை மேலும் விஸ்தரிக்க இவ்வகை மாமரக்கன்றுகளை எதிர்பார்த்துள்ளோம்’ என்கிறார்.
இது இவ்வாறிருக்க செட்டிகுளம் இராணுவ முகாமின் ஏற்பாட்டிலும் இம்மாமரச் செய்கை முன்னெடுக்கப்படுகிறது. முகாமின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எரங்க ஜயவர்ன தலைமையில் செய்கை பகுதிக்கு விஜயம் செய்த எமக்கு, விவசாயப் பண்ணைக்கு பொறுப்பாக இருக்கும் கப்டன் திஸர மதுசங்க இச்செய்கை குறித்து எடுத்துக்கூறினார். இம்முகாமில் விவசாயப் பண்ணைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் 80 ஏக்கரில் 2016 முதல் ரி.ஜே.சி மாமரச் செய்கையை மேற்கொண்டுள்ளோம். அவை நல்ல அறுவடையை அளிக்கிறது. இச்செய்கையுடன் ஊடுபயிர்ச்செய்கையையும் முன்னெடுத்துள்ளோம். 20 ஏக்கரில் கறுத்த கொழும்பான் மாமரமும் நட்டுள்ளோம். அவை நல்ல பயனளிக்கக் கூடியனவாக உள்ளன எனக் கூறினார். ஆகவே ரி.ஜே.சி மாம்பழச் செய்கை பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கக்கூடியது என உறுதிபடக்கூறலாம். அதனால் இச்செய்கையை மேற்கொள்வதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் உச்ச பிரதிபலனை அடைந்து கொள்ளலாம். இந்நிலையில் இச்செய்கையை மேலும் விஸ்தரிப்பதில் கவனம் செலுத்தியுள்ள பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஜானக தர்ம கீர்த்தி என்றும் நன்றிக்குரியவராவார்.
மர்லின் மரிக்கார் படங்கள்: ருக்மால் கமகே