பெருந்தோட்டப் பகுதியில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக சபையில் தெரிவித்த அமைச்சர், ஏற்றுக்கொள்கிறேன். அப்பகுதிகளில் 44 வீதமான குடிநீர்த் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதியில் ஒரு இலட்சத்து 76,000 தனி வீடுகளுக்கான கேள்வி காணப்பகிறது. தற்போது அமைக்கப்படும் தனி வீடுகளுக்கு முகவரியும் வழங்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், காணி உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அத்துடன் மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்த அவர், காணி உரிமை வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கான நிதி ஒழுக்கீட்டு குழுநிலை விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணி எம். பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு பெருந்தோட்ட பகுதிகளுக்குச் சென்று காணி உரிமை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதாக விஜித ஹேரத் எம்பி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மலையக மக்களுக்கு மாத்திரம் சொந்தமானவர் அல்ல. அவர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் தலைவர்.
ஆகவே ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குண்டு.
தற்போது வழங்கப்பட்டுள்ள வாக்குதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கும் எனது தரப்பினருக்கும் உரித்தாக்கப்பட்டுள்ளது. எம் மீது அனைவரும் நம்பிக்கை கொள்ளுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
அத்துடன் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மக்கள் விடுதலை முன்னணியினரும் கலந்து கொண்டார்கள். இறுதியில் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டு ஒப்பந்தம் நீக்கப்பட்டது. அந்த வகையில் சம்பளப் பிரச்சினைக்கு மாற்று நடவடிக்கைள் மூலம் தீர்வு காண வேண்டும்.
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி இல்லை என விஜித ஹேரத் எம். பி குறிப்பிட்ட விடயம் தவறு. சபையில் விஜித ஹேரத்தின் மேசை மீதுள்ள தாளில் நான் குறிப்பிடும் முகவரிக்கு கடிதம் அனுப்புங்கள்.நாளைய தினமே உரிய நபருக்கு அந்த கடிதம் சென்றடையும். ஆகவே தவறான விடயங்களை தெரிவித்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.
நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக வழங்கப்படும் குடிநீரை விட ஊற்று நீர் தூய்மையானது என பெருந்தோட்டங்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு கிடையாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்