சர்வதேச அரசியல் ஒழுங்கு என்பது மாற்றத்திற்கு உள்ளாவதாக உலக வரலாறு முழுவதும் அமைந்திருக்கின்றது. சமகால உலக ஒழுங்கும் அத்தகைய மாற்றத்துக்குள் இரண்டு அணிகள் மோதிக் கொள்கின்ற போக்கொன்றை கண்டு கொள்ள முடிகிறது. இத்தகைய மாற்றத்தின் விளைவுகளே சமீபகால போர்களும் சமாதான முயற்சிகளுமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பின் பெயரில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இந்த வாரத்தில் (பெப்ரவரி- 4) அமெரிக்க செல்லவுள்ளார். இத்தகைய இஸ்ரேலிய பிரதமரது பயணம் அதீதமான அரசியல் முக்கியத்துவத்தை பெறும் என உலக அரசியலில் எதிர்பார்க்கை நிலவுகிறது. இக்கட்டுரை அமெரிக்காவின் தலைமையில் பிற சக்திகளின் உலக ஒழுங்குக்கான கட்டமைப்பு உடைப்பு செய்யப்படுகின்றது என்பதை தேடுவதாக உள்ளது.
சர்வதேச உலக அரசியல் ஒழுங்கை கட்டுடைப்புச் செய்வதில் அமெரிக்கா தெளிவான உத்திகளை வகுத்து செயற்படுகிறது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர்- 11 தாக்குதலுக்குப் பின்னான ஒற்றைமைய அரசியலை உடைப்பு செய்வதில் சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகள் செயல்பட்டிருந்தன. அதில் கணிசமான அடைவையும் எட்டியிருந்தனர். அத்தகைய ஒழுங்கை அரசியல் அறிஞர்கள் மீளவும் இரு துருவ உலக ஒழுங்கிற்கான மாற்றத்தை விவாதித்தனர். ஆனால் உக்ரையின் மீதான ரஷ்ய படையெடுப்பும் இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலும் அத்தகைய எழுச்சி பெற்ற கீழைத்தேய நாடுகளின் கட்டமைப்பை உடைப்பதில் வெற்றி கண்டுள்ளது. அத்தகைய உடைப்பில் இஸ்ரேலும், அமெரிக்காவும், நேட்டோவும் மற்றும் ஐரோப்பிய யூனியனும் பிரதான பங்குதாரிகளாக காணப்படுகின்றன. அதனை விரிவாக உரையாடுவது அவசியமானது. முதலாவது, ரஷ்யாவுக்கும் உக்ரையனுக்குமான போரினை இரு நாடுகளுக்கும் இடையிலான போராக மட்டும் கணிப்பீடு செய்து விட முடியாது. மாறாக அது உலக ஒழுங்கு முறைக்கு எதிரான இருதரப்பினதும் போராகவே அமைந்திருந்தது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிகழ்ந்து வந்த நீண்ட முரண்பாடுகளின் அங்கமாகவே உக்ரைன்- – ரஷ்ய போர் உருவானது. அதன் விளைவுகள் முழு உலகத்தையும் வடிவமைக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமிடலை தகர்த்துள்ளது. உலக வரைபடத்தில் இருதய நிலமாக இன்னுமே மதிப்பிடப்படும் ரஷ்யா மீளவும் எழுச்சிகரமான அரசியலுக்குள் உலகத்தை கட்டமைக்க திட்டமிட்டது. அதன் திட்டமிடலுக்கான பொருளாதார பலமும், இராணுவ பலமும் அமெரிக்காவுக்கு மட்டுமன்றி உலகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்திருந்தது. அதனை கண்டுகொண்ட மேற்குலகம் உக்ரைனை கருவியாக கொண்டு அத்தகைய ஒழுங்கை அல்லது எழுச்சியை முறியடிக்க திட்டமிட்டது. அதுவே உக்ரைன்- ரஷ்ய போர் ஆகும்.
இரண்டாவது, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய அழிவு தரக்கூடிய தாக்குதல், அத்தகைய தாக்குதலை முற்றாக முறியடிக்கும் விதத்தில் இஸ்ரேல் ஹமாஸிற்கு எதிரான போரை நகர்த்தினாலும் அடிப்படையில் ஈரானே இஸ்ரேலின் பிரதான எதிரியாகவும் ஆபத்தான எதிரியாகவும் கருதப்பட்டது. அமெரிக்க தலைமை இல்லாமல் உலக ஒழுங்கை தகர்ப்பதில் ரஷ்யாவோடு சேர்ந்து இயங்கிய பிரதான நாடுகளில் ஈரான் முதன்மையானதாக அமைகிறது. அதனால் ஈரானின் இராணுவ வல்லமையை அதன் அணு ஆயுத திறன்களை எழுச்சி பெற விடாமல் தடுப்பது எதிர்ப்போரின் பிரதான நோக்கமாக அமைந்தது. அத்தகைய இலக்கை. இஸ்ரேல் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. அதுமட்டுமன்றி ஈரான், ரஷ்யா மற்றும் சீனா போன்றவற்றுக்கு ஆதரவான சிரியாவின் ஆட்சியும் இப்போது மாறியுள்ளது. மேற்காசிய அரசியலில் ஆதிக்கம் பெற்றிருந்த கிளர்ச்சி குழுக்கள் கணிசமாக அழிக்கப்பட்டிருக்கின்ற அரசியலை, மேற்குலகம் இஸ்ரேல் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மேற்காசியாவுக்குள் எழுச்சி பெற்றிருந்த ரஷ்ய – ஈரான் மற்றும் சீன பலம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய பிராந்தியத்தில் மீளவும் மேற்குலகத்தின் ஆதிக்கம் வலுவான ஒன்றாக மாறியுள்ளது. அடிப்படையில் பொருளாதார கட்டமைப்புகளும், இராணுவ வலுவும் எதிரணியிடமிருந்து அடையாளம் தெரியாத அளவுக்கு அழித்தொழிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றி முகத்தோடு இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் சந்திக்கின்றார்.
மூன்றாவது, சீனாவின் புதிய பட்டுப்பாதை உலகத்தை சீனாவோடு அரவணைக்கும் செய்முறையாக கட்டப்பட்டிருந்தது. அது ஏறக்குறைய அமெரிக்க, மேற்கு நலன்களுக்கு முற்றிலுமே முரணானதாக, எதிரானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சீனாவை மையப்படுத்திய உலக ஒழுங்கை உருவாக்குகின்ற தளத்திலேயே அவ்வகை அணுகுமுறைகள் தயாராகின. மேற்காசியப் போர் அத்தகைய வாய்ப்பை மேற்காசிய பிராந்தியத்தில் தகர்த்துள்ளது. சீனாவுக்கு ஆதரவான நாடுகளையும் ஆட்சியாளர்களையும் அகற்றியிருப்பதோடு, அதன் இருப்பையும் வலுவையும் மேற்குலகத்துக்கு ஆதரவானதாக மாற்றியிருப்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். புதிய பட்டுப்பாதை என்பது மேற்காசிய அரசியல் நாடுகளை மட்டுமின்றி அதன் பலங்களையும், துறைமுகங்களையும் சீனாவோடு சீனாவின் நலன்களோடு ஒன்றிணைப்பதாகவே அமைந்திருந்தது. மேற்காசியாவின் இயற்கை வளம், சீனாவின் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரமாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பினை உருவாக்கும் என்ற எதிர்பார்க்கை புதிய பட்டுப் பாதையில் ஆழமாக பதிந்திருந்தது. அத்தகைய வாய்ப்புகள் எல்லாவற்றையும் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு தகர்த்துள்ளது.
நான்காவது, இஸ்ரேல்- அமெரிக்க தலைவர்கள் சந்திப்பது என்பது, கட்டமைக்கப்பட்டிருக்கும் உலக ஒழுங்கை உடைக்கும் பிரதான பங்கெடுப்பைக் கொண்டிருக்கின்ற நாடுகளையும் அவர்களது அரசியல்- பொரு ளாதார நகர்வுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவே திட்டமிடப்படுவதை கண்டுகொள்ள முடியும்.
குறிப்பாக பிரிக்ஸ் அமைப்பு, பொருளாதார ரீதியான மேற்குலக வாய்ப்புகளை உடைப்பதில் வெற்றிகரமான அணுகுமுறையை தோற்றுவித்துள்ளது.
பிரிக்ஸின் விஸ்தரிப்பும் அதில் மேற்காசிய நாடுகளின் பங்களிப்பும் பிரதான நெருக்கடியாக மேற்குலகத்துக்கு அமைந்துள்ளது. முதல் கட்டமாக அரசியல் இராணுவ உத்திகளுக்கு ஊடாக அத்தகைய பொருளாதார கட்டமைப்பு தகர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் முழுமையாக அதன் வடிவம் அழித்தொழிக்கப்படவில்லை. அது எப்போதும் எழுச்சி பெறக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். அதனால் நெதன்யாகு- ட்ரம்ப் சந்திப்பு எதிரணியின் வாய்ப்புகளை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றிய உரையாடலாகவே அமைய வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஒழுங்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அணுகுமுறைகளோடு இஸ்ரேல்- அமெரிக்க கூட்டு தொழிற்பட தயாராவதாக தெரிகின்றது. மேற்காசிய ஆட்சியாளர்களையும் அதன் அரசியலையும் வேட்டையாடுவதில் வெற்றி கண்ட இஸ்ரேல்-மேற்கு அணி அதன் வழியாக பொருளாதார வலுவையும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடுகிறது.
எனவே, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், உலகின் அரசியல் மற்றும் பொருளாதார, இராணுவ ஒழுங்கினை மேற்கு உலகத்தின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கான செயல்பாடாகவும் அமைய வாய்ப்புள்ளது.
அதனை நோக்கி இருநாட்டு தலைவர்களும் உரையாடுவதோடு, கடந்த காலங்களில் டொனால்ட் ட்ரம்ப்- நெதன்யாகு ஒன்றிணைந்து மேற்காசிய அரசியலை கட்டுடைப்பு செய்வதில் வெற்றிகரமான தலைவர்களாக காணப்பட்டுள்ளனர். மேற்குலகத்தின் நலனுக்கு ஏற்ற வகையில் அத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் மீளவும் அத்தகைய தலைவர்களின் அணி தெளிவாக உலக ஒழுங்கை அமெரிக்கா பக்கம் ஈர்ப்பதில் கவனம் கொள்கின்ற நிலை ஒன்றை உருவாக்கத் திட்டமிடுகின்றது. அத்தகைய திட்டமிடலின் வடிவமாகவே இரு நாட்டுத் தலைவர்களது சந்திப்புக்களையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
உலக ஒழுங்கை இன்னொரு உலக ஒழுங்கினால் முறியடிக்க முடியும் என்ற சமகால உலக அரசியலுக்குள் நாடுகளும் ஆட்சியாளர்களும் காணப்படுகின்றன. உக்ரைனும் இஸ்ரேலும் மேற்குலகத்தின் கூட்டு பங்காளிகளாகவே காணப்படுகின்றது. இதன் விளைவுகளை உலகம் எதிர் கொள்வது என்பது தவிர்க்க முடியாது.