Home » இருப்பிடங்களுக்கு மீளத்திரும்புவதில் முண்டியடிக்கும் வடக்கு காசா மக்கள்

இருப்பிடங்களுக்கு மீளத்திரும்புவதில் முண்டியடிக்கும் வடக்கு காசா மக்கள்

by Damith Pushpika
February 2, 2025 6:49 am 0 comment

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதகால யுத்தத்தின் பின்னர் எட்டப்பட்டுள்ள பணயக் கைதிகள் மற்றும் சிறைக்கைதிகள் பரிமாற்ற யுத்தநிறுத்தம் மூன்றாம் கட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. மூன்றாம் கட்டமாக 30 ஆம் திகதி 3 இஸ்ரேலியர்களையும், 5 தாய்லாந்து பிரஜைகளையும் ஹமாஸ் விடுவித்ததுடன், இஸ்ரேலும் பலஸ்தீன சிறைக்கைதிகளில் 110 பேரை விடுவித்தது.

இந்த யுத்தநிறுத்தத்திற்கு அமைய கடந்த 27 ஆம் திகதி முதல் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர் என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான நிவாரண உதவிப் பொருட்கள் அடங்கிய ட்ரக்குகளும் தினமும் 600-700 அளவில் காசாவுக்குள் பிரவேசித்த வண்ணமுள்ளன.

தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸுக்கு பதிலடி கொடுப்பதற்கென்றும், அவர்கள் பிடித்து வைத்துள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்கென்றும் கூறி இஸ்ரேல் 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி காசா மீதான போரைத் தொடங்கியது. அன்று முதல் 23 இலட்சம் மக்கள் தொகை கொண்ட காசா மீது கடும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் 365 சதுர கிலோ மீற்றர் பரப்பை கொண்ட காசாவும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் பேரழிவுக்குள்ளாகி சேதமடைந்தன. காசாவில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், ஒரு இலட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளனர்.

அவ்வாறிருந்தும் யுத்தத்தின் ஊடாக பணயக்கைதிகள் மீட்கப்படவில்லை. அழிவுகளும் இழப்புகளுமே ஏற்பட்டன. அதனால் ஒரு வருடத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட யுத்தநிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாடு ஜனவரி 19 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்ததோடு, அதே தினமே ஹமாஸ் மூன்று சிவில் பணயக்கைதிகளைக் கையளித்தது. அதற்கேற்ப இஸ்ரேலும் 90 பலஸ்தீன சிறைக்கைதிகளை விடுவித்தது.

இப்போர்நிறுத்த உடன்பாட்டின்படி, ஒரு இஸ்ரேலிய சிவில் பணயக்கைதிக்கு 30 பலஸ்தீன சிறைக்கைதிகளும், இஸ்ரேலிய படையைச் சேர்ந்த ஒரு பணயக்கைதிக்கு 50 பலஸ்தீன சிறைக்கைதிகளும் என்றபடி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுவிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இரண்டாம் கட்ட பணயக்கைதிகள் பரிமாற்றம், 25 ஆம் திகதி காசா நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பலஸ்தீன சதுக்கத்திலும், மூன்றாம் கட்டம் 30 ஆம் திகதி ஹமாஸின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வாரின் கான் யூனூஸ் வீட்டுக்கு முன்பாகவும் நடைபெற்றது. மூவர் மூன்றாம் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.

இரண்டாம் கட்டமாக மத்திய இஸ்ரேலைச் சேர்ந்த லிரி அல்பெக் (வயது 19), டேனியலே ஜில்போ (வயது 20), நாமா லெவி (வயது 20) மற்றும் ஜெரூஸலத்தை சேர்ந்த கரினா அரிவ் (வயது 20) ஆகிய 4 பெண் இராணுவ வீரர்களை ஹமாஸ் கையளித்திருந்தது. அவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்று இஸ்ரேலிடம் கையளித்தது. அவர்களை இஸ்ரேலும் ஏற்றுக்கொண்டது.

இப்போர் நிறுத்தத்திற்கு அமைய இரண்டாம் கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பு சூழலில் யுத்தத்தின் போது வடக்கு காசாவில் இருந்து மத்திய மற்றும் தெற்கு காசா பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட பலஸ்தீனர்கள் மீண்டும் தங்களது வாழிடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இம்மக்கள் சாரிசாரியாகப் பயணிக்கத் தொடங்கினர்.

ஆனால் யுத்தநிறுத்த இணக்கப்பாட்டின்படி, இரண்டாம் கட்டமாக எர்பில் யஹுட் என்ற பெண் சிவிலியன் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை ஹமாஸ் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட இஸ்ரேல், அவரது விடுவிப்பு தொடர்பில் அறிவிக்கப்படும் வரை வடக்கு காசா குடிமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதை தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில் நெட்சாரிம் வழித்தடத்தில் ஆயிரக்கணக்கில் வடக்கு காசா மக்கள் கூடிவருவதும், வடக்கு காசா மக்கள் அலையலையாகத் திரும்பத் தொடங்கியுள்ளமையும் உலகளாவிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன. இச்சூழலில் வடக்கு காசா மக்கள் தம் வாழிடங்களுக்குச் செல்வதை இஸ்ரேல் தடுத்தமை தொடர்பில் கவனம் செலுத்திய இப்போர் நிறுத்தத்தின் பிரதான மத்தியஸ்தரான கட்டார், இரு தரப்பினருடனும் அவசர அவசரமாகத் தொடர்பு கொண்டது.

அதற்கேற்ப குறித்த பணயக்கைதி உயிருடன் இருப்பதும், அடுத்த கட்டத்தில் விடுவிக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டது. அக்கைதி பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட காசாவில் செயற்படும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு, அவர் உரையாற்றும் காணொளியையும் வெளியிட்டது. அத்தோடு அவரை வியாழனன்று கையளிப்பதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நெட்சாரிம் வழித்தடத்தை இஸ்ரேல் திறந்து விட்டதோடு, இடம்பெயர்ந்திருந்த வடக்கு காசா மக்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பத் தொடங்கினர். கடந்த வியாழக்கிழமை வரையும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காசாவுக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தின் போது சோர்வு, நீரிழப்பு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். அதனால் இம்மக்களுக்கு செம்பிறைச் சங்கம் முதலுதவி சேவைகளை வழங்கியது. மக்கள் அலையலையாக வடக்கு காசாவுக்கு கால்நடையாகவும் வாகனங்களிலும் பயணித்ததோடு தங்கள் உடைமைகளை தாமே சுமந்தபடியும் மெத்தைகள், போர்வைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை தங்கள் வாகனங்களின் கூரைகளில் ஆபத்தான முறையில் ஏற்றிக் கொண்டும் வீட்டு வளர்ப்பு பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுடன் வடக்கு நோக்கிப் பயணித்தனர்.

இவர்கள் மத்திய மற்றும் தெற்கு காசாவில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் கால்நடையாகப் பயணித்துள்ளனர். இப்போர் தொடங்க முன்னர் வடக்கு காசாவில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காசாவை இம்மக்கள் அடைந்ததும் அதன் நுழைவாயில் பிரதேசத்தில் ‘காசாவுக்கு நல்வரவாகட்டும்’ என்ற பதாகை தொங்கவிடப்பட்டுள்ளதைக் கண்ட வடக்கு காசா மக்கள், பெரிதும் மகிழ்ச்சியடைந்தாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், சிலர் வடக்கு காசாவுக்குள் இறைவனுக்கு நன்றிக்கடன் (ஸுஜுது) தெரிவித்தபடி செல்லும் படங்களையும் வெளியிட்டுள்ளன.

வடக்கு காசாவில் யுத்தம் ஏற்படுத்தியுள்ள அழிவுகளையும் சேதங்களையும் பார்த்த மக்கள், அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாகியுள்ளனர். அவர்கள் அழிவுகளைக் கண்டு கண்ணீர் சிந்தியுள்ளனர். திரும்பிய இடமெல்லாம் கட்டட இடிபாடுகளும் சாம்பல் மேடுகளாகவுமே காட்சியளிக்கின்றன. அவர்களது குடியிருப்புகளும், உட்கட்டமைப்பு வசதிகளும் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ளன.

வடக்கு காசாவில் 74 சதவீதமான கட்டடங்கள் யுத்தத்தினால் அழிவுற்றுள்ளதாக சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

‘நிலைமை மிகவும் கடினமாகக் காணப்படுகிறது. தண்ணீர் வசதி இல்லை, சேவைகள் இல்லை. எங்கள் இருப்பிடங்கள் அடையாளம் காணமுடியாத சாம்பல் மேடுகளாகவும் இடிபாடுகளாகவும் அழிவுற்றுள்ளன’ என்று மீளத்திரும்பிய ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர் குறிப்பிடும் போது, ‘வடக்கு காசாவில் அழிவுகளையும் குப்பைகளையும் தவிர வேறு எதனையும் எங்களால் காண முடியவில்லை. நாங்கள் ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து இன்னொரு கடின நிலைக்கு நகர்கிறோம். முடிந்தளவுக்கு எங்களது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவோம். நாங்கள் எங்களது இருப்பிடங்களுக்குத் திரும்புவது எங்கள் உற்சாகத்தை உயர்த்தியுள்ளது. எங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளது’ என்றுள்ளார்.

அதேநேரம் ரிபாத் என்ற பெயர் கொண்ட காசா நபர், ‘இடம்பெயர்வும் வெளியேற்றமும் பலஸ்தீனர்களான எங்களுக்குப் புதியவை அல்ல. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது 07 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கள் வாழிடங்களில் இருந்து விரட்டப்பட்டனர். அதுவே நக்பா – பேரழிவு எனப்படுகிறது. 1930 கள் முதல் பலஸ்தீனர்கள் இத்தகைய இடம்பெயர்வுக்கு முகம் கொடுக்கின்றனர். இன்று இஸ்ரேலிய நகரங்களாகவும் கிராமங்களாகவும் இருக்கும் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே காசா அகதி முகாம்களில் இருகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம், ‘திரும்பி வரும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குவதற்கு போதுமான தங்குமிடங்கள் இல்லை. தற்போதைக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடாரங்கள் தேவை’ என மதிப்பிட்டுள்ளது.

வடக்கு நோக்கிப் பயணம் செய்துள்ள பலர், நிவாரண நிறுவனங்களிடமிருந்து உணவு மற்றும் பிற உதவிப் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். அங்கு வளப்பற்றாக்குறையும் நிறையவே காணப்படுகின்றது. வடக்கில் உள்ள பேக்கரிகளின் எண்ணிக்கை இடம்பெயர்ந்த குடிமக்களின் மீள் வருகையைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை. குடிநீருக்காக சிரமங்களையும் மக்கள் எதிர்நோக்குகின்றனர்.

இருந்த போதிலும், தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதில் வடக்கு காசா மக்கள் அதிக ஆர்வத்துடனும் உறுதியுடனும் காணப்படுகின்றனர்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division