அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
காலி சர்வதேச அரங்கில் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்துடன் களமிறங்கிய இலங்கை அணியை அவுஸ்திரேலிய அணி முழுமையாக துவம்சம் செய்தது. இலங்கை மூன்று விசேட சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியபோதும் ஆஸி. துடுப்பாட்ட வரிசையை அசைக்க முடியாமல் போனதோடு, தனக்கு சாதகமான ஆடுகளத்தில் துடுப்பாட்டத்திலும் தடுமாறியது.
அவுஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 654 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்கு சுருண்டதோடு நான்காவது நாளான நேற்று (01) இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் செய்து 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
‘600க்கு மேற்பட்ட ஓட்டங்களை துரத்துவது இலகுவானதல்ல. ஆடுகளம் கடுமையாக இல்லை, ஆனால் பந்து சுழன்றது. என்றாலும் துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆம், தோல்வி வருத்தத்தை தருகிறது. எமக்கு வாய்ப்புகள் கிடைந்தன, ரிவியூக்கள் மற்றும் பிடியெடுப்புகளை தவறவிட்டோம்’ என்று போட்டிக்கு பின்னர் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 232 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதை வென்ற அவுஸ்திரேலிய ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜாவின் பல பிடியெடுப்பு வாய்ப்புகளையும் இலங்கை அணி தவறவிட்டது பெரும் திருப்பமாக இருந்தது.
என்றாலும் அவுஸ்திரேலிய சுழல் வீரர்களான மத்தியூ குன்மன் மற்றும் நதன் லியோன் இருவரும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை முழுமையாக முறியடித்தனர். இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இலங்கை அணியின் வீழ்த்தப்பட்ட 20 விக்கெட்டுகளில் 16 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
முதல் இன்னிங்ஸில் தினேஷ் சந்திமால் பெற்ற 72 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்ஸில் பின்வரிசையில் ஜெப்ரி வன்டர்சே பெற்ற 53 ஓட்டங்களையும் தவிர்த்து இலங்கை சார்பில் வேறு எந்த வீரரும் அரைச் சதம் கூட பெறவில்லை. குறிப்பாக நேற்று நான்காவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களுடன் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தபோதும் அன்றைய தினத்தில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதன்படி சுமார் எட்டு ஆண்டுகளாக இருந்த இலங்கை அணியின் டெஸ்ட் வரலாற்றின் மிக மோசமான தோல்வியை இந்தத் தோல்வி முறியடித்தது. 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் தோற்றதே மோசமானதாக இருந்தது.
மறுபுறம் டெஸ்ட் வரலாற்றில் அவுஸ்ரேலிய அணியின் நான்காவது மிகப்பெரிய வெற்றி இதுவென்பதோடு அந்த அணி இலங்கைக்கு எதிராக பெறும் மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர்; 2012 ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களால் தோற்கடித்ததே சிறந்ததாக இருந்தது.
இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இதே காலி மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.