கிரிக்கெட்டில் எண்களுக்கு பஞ்சம் இல்லை. முதல் பந்து வீசப்பட்டது தொடக்கம் எல்லாமே இலக்கங்கள் தான். எத்தனை ஓட்டங்களால் வென்றது… எத்தனை பந்துகள் வீணடிக்கப்பட்டன… என்று எண்கள் குவிந்து கிடக்கும். ஆனால், சாதனைகளுக்கு அப்பால் அந்த எண்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் உடைமாற்றும் அறையில் இருந்து களத்தில் இருக்கும் வீரர்களும் இலக்கங்களால் செய்தி அனுப்பியபோது எல்லோரும் புதிராக பார்த்தார்கள். அந்த இலக்கங்கள் இலங்கை அணிக்கு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் உதவின.
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு போன்று கிரிக்கெட்டில் தரவுகளும் முக்கியம். கிறிஸ் சில்வர்வுட்டுக்கு இது பற்றிய அறிவு கிடைத்தது அவர் இங்கிலாந்து அணிக்கு பயிற்சி அளித்த காலத்தில்தான். அப்போது இங்கிலாந்து அணியின் பயிற்சிக் குழாத்தில் இருந்தவர் நெதன் லீமன். அவர் கிரிக்கெட் ஆடியவரல்லை, உள்ளூர் கிரிக்கெட்டில் கூட உருப்படியாக மட்டையை சுழற்றி இருக்க மாட்டார்.
ஆனால் கடந்த ஒரு தசாப்தத்தில் இங்கிலாந்து அணியை நவீன கிரிக்கெட்டுக்கு இழுத்து வந்ததில் தென் லீமனுக்கு முக்கிய பங்குண்டு. அதுதான் இங்கிலாந்துக்கு எப்போதுமே எட்டா கனியாக இருந்த ஒருநாள் உலகக் கிண்ணம் 2019 இல் கைவசமாவதற்கு காரணம். பின்னர் அசைக்கமுடியாத அணியாக மாறி 2022 இல் டி20 உலகக் கிண்ணத்தை வென்றதில் நெதன் லீமன் ‘கூட்டிக் கழித்துப் போட்ட கணக்கு’ பெரிதாக உதவியது.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பட்டதாரியான லீமனுக்கு கிரிக்கெட் நன்றாகத் தெரியும்… அதனை விடவும் கணக்கு நன்றாக புரியம். அவர் இங்கிலாந்து அணியின் ஆய்வாளர். அணிக்குள் அவரை ‘கணக்காளர்’ என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அவரின் வேலை தரவுகளை பயன்படுத்தி போட்டி உத்திகளை வகுப்பது தான். அவர் செய்த ஒரே வேலை கிடப்பில் இருந்த தரவுகளை தூசு தட்டி இங்கிலாந்தின் சம்பிரதாய கிரிக்கெட்டை உடைத்து, புது உத்திகளை பயன்படுத்தியதுதான்.
‘எப்போதுமே ஐம்பது ஓட்டங்கள் பெற்றால் கைதட்டுகிறார்கள். போட்டியில் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் பெறப்படும் ஓட்டங்களுக்கு அவர்கள் எப்போது மதிப்பளிக்கிறார்கள். உதாரணத்திற்கு துடுப்பெடுத்தாட களமிறங்கி முதல் மூன்று பந்துகளுக்கும் சிக்ஸர் அடித்து விட்டு நான்காவது பந்தில் ஆட்டமிழப்பவரை நான் விரும்புகிறேன்.
அவரது அதிகூடிய ஓட்டம் 18, ஓட்ட சராசரியும் 18. அவர் டி20 கிரிக்கெட்டுக்கு அதிகம் பெறுமதியானவர். ஏனென்றால் அவர் அணியின் மொத்த ஓட்டத்திற்கு மேலதிகமாக 10 ஓட்டங்களை (சராசரியாக) சேர்த்திருக்கிறார்’ என்று லீமன் பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார்.
லீமனின் பார்வை இப்படித்தான் இருக்கும். இது சாதாரண கிரிக்கெட் பற்றிய புரிதலுக்கு மாறுபட்டிருந்தாலும் அது போட்டிகளை வென்று தர உதவி இருக்கிறது.
இதனை முன்னாள் இங்கிலாந்து அணி பயிற்சியாளர் அன்டி பிளவரும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் காலத்தில் தான் லீமன் இங்கிலாந்து அணியில் இணைந்தார். ‘லீமன் எப்போதும் இங்கிலாந்து அணி பயிற்சியாளர்களின் கருத்துகளுக்கு சவால் விடுப்பவராகவே இருந்தார். குறிப்பாக கிரிக்கெட்டில் இருக்கும் சம்பிரதாய நிலைப்பாடுகளுக்கும் உடைமாற்றும் அறையில் இடம்பெறும் குருட்டுத்தனமான கலந்துரையாடல்களுக்கும் எப்போதும் சவால் விடுப்பார்’ என்கிறார் அன்டி பிளவர்.
நெதன் லீமன் என்ன கூற வருகிறார் என்று சரியாக புரிந்துகொள்ள அவர் எழுதிய புத்தகத்தை பார்க்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகத்தின் பெயர், Hitting Against the Spin: How Cricket Really Works.
முழுமையான புத்தக விமர்சனம் சொல்ல முடியாதபோதும் அவர் இந்தப் புத்தகத்தில் இரு சுவாரஸ்யமான கதைகளை கூறி கிரிக்கெட்டின் நிலையை விளக்க முயசித்திருக்கிறார். முதலாவது ‘கட்டப்பட்ட பூனை’ என்ற கதை, கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் குருட்டுத்தனமான மரபுகளை சாடுவதாக இருக்கும்.
அதாவது துறவி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்தாராம். ஆனால் அந்தப் பூனை துறவிகள் தியானத்தில் ஈடுபடும்போது தொந்தரவு செய்து வந்தது. எனவே மாலையில் தியானத்திற்கு செல்லும்போது துறவிகள் அந்தப் பூனையை கட்டி வைப்பதை வழக்கமாக செய்து வந்தார்கள். ஆனால் காலம் போகப்போக அது மரபாக மாறிவிட்டது. கடைசியில் அந்தத் துறவியும் மரணித்துவிட்டார், பூனை கூட இறந்துவிட்டது. ஆனால் மாலை தியானத்திற்கு முன்னர் கட்டி வைப்பதற்காகவே புதிய பூனை ஒன்றை வளர்த்தார்களாம்.
இப்படி குருட்டுத்தனமாக எல்லோரு செய்வதற்காக செய்யும் மரபுகள் கிரிக்கெட்டில் ஏகத்துக்கு இருப்பதாக லீமன் கூறுகிறார். உதாரணத்திற்கு கூறுவதென்றால் இடது கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் வந்தால் ‘ஓப் ஸ்பின்’ பந்துவீச்சாளரை பயன்படுத்துவது. இதிலே தர்க்கரீதியாக சில நியாயங்கள் இருந்தபோதும் எல்லா நேரத்திலும் வெற்றி தராது.
அதேபோன்று டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்றால் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிப்பதும் இப்படியான ஒரு வழக்கம். துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தரவுகள் காட்டுகின்றன.
ஆனால் மரபுகளுக்கு ஓர் அர்த்தம் உண்டு. அது என்னவென்று தெரிந்தே அதனை மீற வேண்டும். அப்படி இல்லாமல் மரபுகளை மீறி புரட்சி செய்யும் பேர்வழிகளுக்கும் லீமன் இதில் ஓர் கதை சொல்கிறார், அது ‘புதருக்குள் புலி.’
ஒரு விவசாயி தனது வயலுக்கு செல்வதற்கு ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்தது. ஆனால் இடையில் இருக்கும் புதர் வயலை சென்றடைவதற்கு குறுக்கு வழியாக இருந்து. ஒருவர் கூட அந்த புதரை குறுக்கு வழியாக பயன்படுத்தவில்லை. ஆனால் விவசாயி அந்த புதரை வெட்டி பாதை அமைத்து குறுக்கு வழியால் வயலுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். ஒருநாள் அந்த புதருக்குள் தோன்றிய புலி ஒன்று விவசாயியை அடித்துச் சாப்பிட்டதாம்.
கிரிக்கெட்டிலும் புதருக்குள் புலிகள் பல இருக்கின்றன. அவற்றை புரிந்து முடிச்சுகளை அவிழ்க்க வேண்டி இருக்கிறது என்கிறார் லீமன்.
லீமனின் இரண்டு கதைகளும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்றாக பொருந்தி இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மரபுகளை கட்டிப்பிடித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டில் புதரில் பாதை செய்ய முயன்ற கதைகளும் உண்டு.
குறிப்பாக உலகக் கிண்ணத்தை வெல்வதில் இங்கிலாந்துக்கு ஏதோ ஒன்று எப்போதுமே குறுக்காக வந்தது. ஆனால் உலகக் கிண்ணத்திற்கு முந்தைய ஆண்டின் மூன்று அளவீடுகளை பார்த்தால் வெற்றி அணிகளை கணிப்பிட முடியும் என்று கூறுகிறார். அது உலகக் கிண்ணத்திற்கு முன் இரண்டு ஆண்டுகளில் பெற்ற ஓட்ட விகிதம் (ஓவர் ஒன்றுக்கு பெறும் ஓட்டங்கள்), 2 ஆண்டுகளின் வெற்றி வீதம் மற்றும் ஒவ்வொரு வீரரும் ஆடிய மொத்த போட்டிகள் ஆகிய மூன்றுமே அந்த அளவீடுகள்.
இதனை இங்கிலாந்துக்கு பொருத்திப் பார்த்தால் நன்றாக புரியும். 1999 மற்றும் 2015 இற்கு இடையே இங்கிலாந்து ஆடிய 5 ஒருநாள் உலகக் கிண்ணங்களில் அது வெற்றிக்காக கடுமையாக போராடியது. ஆனால் அதனை நெருங்க முடியவில்லை. அப்போது மேற்சொன்ன மூன்று அளவுகோல்களில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கவில்லை.
எனவே 2019 உலகக் கிண்ணத்தில் அது மாற்றங்களை செய்தது. அந்த மூன்று அளவுகோல்களிலும் முதல் அணியாக வந்தது. அதிக ஓட்ட விகிதம், சிறந்த வெற்றி வீதம் மற்றும் அனுபவம் மிக்க வீரர்கள் என களத்தில் குதித்த இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வென்றது.
இதனை இலங்கையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அது இந்தத் தரவுகள் தெரியாமலேயே கட்டிவைத்த பூனைகள் பலதையும் விடுவித்திருக்கிறது. 1996 உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு அதுதான் முக்கிய காரணமாக இருந்தது. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த அந்த மரபை இலங்கை அணி தொடர்ந்து பின்பற்றுவது முக்கியம்.
கிரிக்கெட்டில் தரவுகள் என்பது முக்கியம். அதில் இருக்கும் புதிர்களை அவிழ்த்தாலே பல வெற்றிகளுக்கு உதவலாம். நவீன கிரிக்கெட்டில் மைதானத்திற்கு வெளியில் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. இல்லாவிட்டால் காலாவதியான அணியாகவே தொடர்ந்து இருக்க முடியும்.
எஸ்.பிர்தெளஸ்