அரசதுறையிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தாம் அதனை ஆராய்ந்து பார்த்தபோது கல்வித்துறை, சுகாதாரத்துறை உட்பட அத்தியாவசியமாகவுள்ள அரச நிறுவனங்களிலேயே சுமார் 30 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தினகரன், வாமஞ்சரிக்கு வழங்கி விஷேட நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். நேர்காணலின் முழு விபரம் வருமாறு;
கேள்வி: ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் நோக்கம் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக கூற முடியுமா?
பதில்: யாழ். மாவட்டத்துக்கான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்வதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் வகையிலும் ஜனாதிபதியின் யாழ். விஜயம் அமைந்திருந்தது. அதன்படி, யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகளை ஆராயும் வகையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டிருந்தார். இக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
விஷேடமாக யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து வீதிகளையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அதற்கு தேவையான நிதியினை ஒதுக்குவதாகவும் ஜனாதிபதி உத்தரவாதம் அளித்தார்.
அத்துடன், மீன்பிடித்துறை, விவசாயம் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. காணி விடுவிப்பு, இராணுவத்தின் வசமுள்ள காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தீர்மானங்களும் முடிவுகளும் எடுக்கப்பட்டன.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் மண் அகழ்வுகள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டதுடன் இதற்கெதிராக காத்திரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறித்தினார்.
யாழில் போதைப்பொருள் பாவனையும், சட்டவிரோத மது பாவனையும் அதிகரித்துள்ளமைக்கெதிராக துரித நடிவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். மேலும், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை திறப்பதற்கும், இன்னும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்திலேயே கடச்சீட்டை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அந்த அலுவலகத்தையும் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதனை தவிர, இரு கூட்டங்கள் நடைபெற்றன. வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இது வரலாறு காணாத கூட்டம் என்றே கூற வேண்டும். அம் மக்களின் அமோக வரவேற்பு ஜனாதிபதிக்கு கிடைத்தது. சாவகச்சேரி எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இக் கூட்டங்களில், அப் பிரதேச மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளுக்கு படிப்படியாக தீர்வை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உத்தரவாதம் அளித்தார். இதுவே ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் திட்டமாக அமைந்திருந்தது.
கேள்வி: தேர்தல் காலத்தின்போது ஆவா குழு ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக நீங்கள் கூறியிருந்தீர்கள் அல்லவா? தற்போது அதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: நாடளாவிய ரீதியில், போதைப்பொருள் பாவனையும், போதைப்பொருள் வர்த்தகமும், ஆவா குழு, பாதாள உலகக்குழு, அல்லது வாள்வெட்டு கும்பலின் செயற்பாடுகளும் கடந்த காலங்களில் அதிகரித்துக் காணப்பட்டன.
இந்நிலையிலேயே, எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, போதைபொருள் பாவனையிலிருந்து எமது இளம் சமுதாயத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் கசிப்பு உற்பத்தியையும் ஏனைய குற்றச் செயல்களையும் முற்றாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அம் மக்கள் எம்மிடம் கேட்டுக்கொண்டார்கள்.
எமது நடவடிக்கைகளால் இவ்வாறான சம்பவங்கள் தற்போது குறைந்தும் தணிந்தும் உள்ளது. இவற்றை மேலும் குறைப்பதற்கும் முற்றாக ஒழிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகளுடன் பல தடவைகள் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறான, போதைப்பொருள் பாவனைக்கும், போதைப்பொருள் விற்பனைக்கும், சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கும் மற்றும் குற்றச் சம்பவங்கள் போன்றவற்றுக்கும் பின்னால் இதுவரைகாலமும் அரசியல்வாதிகளே செயற்பட்டு வந்துள்ளனர். இந்த அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் பலத்துடனுமே குற்றச்சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.
தற்போதும் இனிவரும் காலங்களிலும் போதைப்பொருள் பாவனை செய்பவர்களுடன் எந்தவொரு அரசியல்வாதியும் கொடுக்கல் வாக்கல்களை மேற்கொள்ளப்போவதில்லை.
எனவே, இவற்றை முற்றாக ஒழிப்பதற்குரிய அணுகுமுறைகளை கையாளுகின்றோம். வெகுவிரையில் இவ்வற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி: அரச ஊழியர்களை குறைக்க வேண்டும் என்பது ஐ.எம்.எப் நிபந்தனைகளின் ஒன்றாகும். இந்நிலையில், பட்டதாரிகளின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந் நேரத்தில் அவர்களுக்கு அரச வேலை வாய்ப்பை பெற்றுத்தருவது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்.
பதில்: அரசதுறையிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், நாம் ஆராய்ந்து பார்த்தபோது அரசாங்கத்தின் முக்கியமான நிறுவனங்களில் மாத்திரம் சுமார் 30 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கல்வித்துறை, சுகாதாரத்துறை, உட்பட அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற அரச நிறுவனங்களிலேயே இவ்வாறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், பட்டதாரிகளுக்கு பொருத்தமற்ற வேலைவாய்ப்புகளை வழங்கி அரசுதுறைக்கு கேடு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு முற்றப்புள்ளி வைத்துவிட்டு, எமது பட்டதாரிகளை ஆக்கபூர்வமான, யதார்த்தபூர்வமான வேலைகளில் அமர்த்துவதற்குரிய நேர்முகப் பரீட்சைகளை நடத்தி உரிய தொழிலில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த விடயம் இவ்வருடத்தின் வரவு செலவு திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வரும்.
ஐ.எம்.எப் கோரிக்கை அரச செலவீனங்களை குறைக்க வேண்டும் என்பதாகும். அதன் அர்த்தம் அரச துறைகளை இல்லாதொழிக்க வேண்டும் என்பது அல்ல.
இதனாலேயே அரசதுறைக்கு இன்று அத்தியாவசியமாக தேவைப்படுகின்றவற்றை பெற்றுக்கொடுத்து, மீளவும் உயிர்ப்புடன் கூடிய புதிய இரத்தம் பாய்ச்சிய அரச துறையாக மாற்றியமைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
கேள்வி: மீனவர்களின் பிரச்சினைகள் ஒவ்வொரு அரசாங்கத்தாலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவ்வாறான தீர்வுகளை எதிர்பார்க்க முடியும்?
பதில்: நிச்சயமாக. இது நீண்ட நாட்களாக புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினையாகவுள்ளது. இதற்கான காரணம் இந்திய, தமிழக மீனவர்கள் ஒரு சிலர் சட்டவிரோத அடிமடி இழுவைப் படகுகளை பயன்படுத்தி எமது கடல் வளத்தை அழிக்கின்றார்கள். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் இல்லாது செய்வதுடன் அராஜமாக நடந்து கொள்கின்றார்கள். நூற்றுக்கணக்கான படகுகள் எமது கடற்பகுதிக்குள் நுழைந்து கடல்வளத்தை சூறையாடுவதை காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பாக எனது அண்மைய இந்திய விஜயத்தின்போதும் கூட பேசப்பட்டது. தற்போதும் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் உரிய அதிகாரிகளுடன் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடி வருகின்றோம். அத்துடன், இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள புத்தி ஜீவிகள், பிரபல ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண மீன்பிடி தொழில் ஈடுபடுபவர்கள் போன்ற அனைவரும் இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடல் வளத்தை நாசமாக்குவதற்கெதிராக தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற தேவைப்பாடும் தற்போது இந்தியர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியா எமது அண்டை நாடு என்பது உண்மை, இந்தியா எமக்கு உதவி செய்துள்ளதும் உண்மைதான். அதேபோன்று எமது கடல்வளத்திலிருந்து பல கோடி பில்லியன் ரூபா வருமானத்தையும் இந்தியா அடைந்து வருகின்றதென்பதை மறுதலிக்க முடியாது.
இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து, அவற்றை தடுப்பதற்கான அணுகுமுறையின் திசையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம். நிச்சயமாக கால ஓட்டத்தில், இதற்கெதிகராக தமிழ்நாடு அரசும் இந்திய மத்திய அரசாங்கமும் சாதகமான முடிவொன்றை எடுக்கும் என நம்புகின்றோம்.
கேள்வி: அத்துமீறி மீன்படி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுப்பதற்கு எமது அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைககள் என்ன?
பதில்: அரசாங்கம் என்ற வகையில், அங்குள்ள மீன்படி அமைச்சின் கீழுள்ள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். அடுத்ததாக இராஜதந்திர ரீதியான நகர்வுகளும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், கடல் வளத்தை நாசமாக்கும் இழுவைப் படகுகளுக்கு இந்திய அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். எமது அரசாங்கத்தின் கீழ் இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். முன்னரை விட அதிகளவான படகுகள் எமது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மாத்திரம் 124 படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. 24 படகுகள் நீதிமன்ற தீர்ப்புக்கமைய எமது நாட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று இங்குள்ள மீனவர்களுக்கும் இது தொடர்பான தெளிவை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து கருத்தியல் ரீதியாகவோ நடவடிக்கைகளினூடாகவோ தீர்வினை வழங்குவது எமது அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது..
கேள்வி: இந்திய மீனவர்களின் பிச்சினைகளுக்கு தீர்வுக்கு காணாவிட்டால் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் தொடரும் அல்லவா? இது இலங்கை இந்திய இராஜதந்திர உறவுகளையும் பாதிக்கக்கூடுமே. அவ்வாறாயின் அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான சாத்தியங்கள் என்னவென்று நினைக்கின்றீர்கள்?
பதில்: அண்மையில் இந்திய மீனவர்கள் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார்கள். காரணம், முன்னதாக மூன்று நாட்களுக்கு மாத்திரமே இலங்கை கடல் வளத்துக்குள் பிரவேசித்தவர்கள் தற்போது ஏழு நாட்களும் எமது கடல் வளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள். எல்லைகள் மீறப்படுகின்றபோது அதனை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பு எமது கடற்படைக்குண்டு.
எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மீனவர்களை தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு இந்திய மீனவர்களின் படகுகளுக்குள் ஏறியபோது, அவர்கள் இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் அவர்களை கடத்திச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போதே இறுதி நடவடிக்கையாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவே அன்று நடந்த சம்பவம். அந்தச் சம்பவத்துக்கான காரணம் இந்தியாவின் தமிழக மீனவர்களின் அடாவடித்தனமும் அராஜகமுமேயாகும். இந்த சம்பவத்தை இந்திய அரசாங்கத்துக்கும் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
எனவே எமது இந்திய – இலங்கை இராஜதந்திர உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இனியும் இந்திய மீனவர்களின் அடாவடித்தனம் தொடரக்கூடாது என்பதையே இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றது.
இராஜதந்திர ரீதியாகவும் இந்த பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும். இந்திய இழுவைப் படகுகளால் எமது இரு நாட்டு உறவுகளிலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது இந்திய மத்திய அரசாங்கத்தினாலேயே தடை செய்யப்பட்ட மீன்படி முறையாகும். அதேபோன்று தமிழ் நாட்டிலும் அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, எங்களது கடல் வளத்துக்குள் எல்லை மீறி நுழைவதையும் சட்டவிரோத இழுவைப் படகுகளினூடாக சூறையாடுவதையும், கடல் வளத்தை அழிப்பதையும் முழுமையாக நிறுத்துவதே எமது இறுதி தீர்வாக இருக்கும். இது தொடர்பான நகர்வுகள் பேச்சுவார்த்தைகளினூடாகவோ இராஜதந்திர உறவுகளினூடாகவோ அணுகப்படும் என்பதே உண்மை.
கேள்வி: தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது இந்நிலையில் அதன் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: கடந்த 76 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் முற்றுமுழுதாக இந்த நாட்டை நாசம் செய்துள்ளார்கள். பொருளாதாரம், அரசியல், சமூகம், கலாசாரம் போன்ற அனைத்து துறைகளும் செயலிழந்து போன நாடாக இன்று இலங்கை காணப்படுகின்றது. இந்நிலையிலிருந்து எமது நாட்டை மீட்டெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சிசெய்தவர்கள், கடன்பொறி, ஐ.எம்.எப் பொறி மற்றும் வளங்களை விற்கும் பொறி என எமது நாட்டை பாரிய பொறியில் சிக்க வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். இதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு எமது நாடு வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டது. இன்று அந்த நிலையிலிருந்து மாறி பொருளாதார ரீதியாக ஒரு ஸ்த்திரதன்மையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதன் நிமித்ததே, இன்று எமது நாட்டை நோக்கி முதலீடுகள் வருகின்றன. முதலீட்டாளர்கள் வருகின்றார்கள். வங்கியின் நிதி மூலங்கள் பலமடைந்து வருகின்றது. பங்குசந்தை பலமடைந்து வருகின்றது.
இதுவரை காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இலஞ்சம், ஊழல், மோசடி, போன்றவற்றில் மலிந்த அரசாங்கங்களாகும், அதிகார துஷ்பிரயோகங்கள், ஜனநாயக விரோத போக்குகளுடைய அரசாங்கங்களாகும், நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவுமான தற்போதைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது இலகு என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் பிறந்துள்ளது.
இனியும் இந்த நாட்டு மக்கள் இவர்களின் போலியான விமர்சனங்களுக்கும் பித்தாலாட்டங்களையும் கண்டு ஏமாறமாட்டார்கள். அதேபோன்று அவர்கள் எம் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆக்கபூர்வமான பதில்களையும் நாம் மக்கள் மத்தியில் முன்வைப்பதனால், இவர்களால் இறுதி யாத்திரையை மட்டுமே மேற்கொள்ள முடியுமே தவிர வேறு எதனையும் செய்ய முடியாது. மக்கள் எம்முடன் இணைந்து பயணிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எமக்குண்டு. எனவே இவ்வாறான விமனர்சனங்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.
கேள்வி: பலாலி விமான நிலையத்தை உள்ளூர் விமான சேவைகளுக்கான விமானநிலையமாகவும் தொழிற்பட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது தற்போது நிலை எந்த அளவில் இருக்கிறது?
பதில்: இது உண்மை. இன்று உலகம் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எமது நாட்டிலும் விமான சேவையின் தேவைப்பாடும் அதிகமாகவுள்ளது.
அதன்படி, முக்கியமான விமான நிலையமாக பலாலி விமான நிலையமும் காணப்படுகின்றது. இந்த விமான நிலையத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என்பதில் நாம் திடமாகவுள்ளோம். இந்நிலையில் உள்ளூர் விமான சேவைகளையும் விஸ்தரிப்பதற்கான தேவைப்பாடு எமக்குள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
நேர்காணல் : காயத்ரி சுரேஷ்