வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் நிலவி வருகின்ற ஒற்றுமையீனம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்து வருகின்றன. நாடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலொன்றுக்கு எதிர்வரும் மாதங்களில் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகள் தமக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமைப்படுவதற்கான எந்த சமிக்ஞையும் தென்படவில்லை.
இவ்வாறான பின்னணியில் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தவரும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான மாவை சோனாதிராஜாவின் இழப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியல் வரலாற்றில் மாவை சேனாதிராஜா தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர். கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இரண்டாவது சிரேஷ்ட அரசியல் தலைவரும் தற்பொழுது இழக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட அரசியல் தலைவருமாக இருந்த இரா.சம்பந்தனின் இழப்பை அடுத்து தற்பொழுது மாவை சேனாதிராஜாவின் இழப்பு அமைந்துள்ளது.
இரு சிரேஷ்ட தலைவர்கள் சிறிது கால இடைவெளியில் தமிழினத்தை விட்டுப் பிரிந்திருப்பது தமிழர் அரசியலுக்கு நிச்சயம் பாரிய இழப்பு என்பதை கூறத் தேவையில்லை. மாவை சேனாதிராஜாவைப் பொறுத்தவரையில் அவர் மூன்று கட்டங்களான போராட்ட காலங்களிலும் தனது வாழ்வை தமிழர் அரசியல் உரிமைப் போராட்டங்களுக்காக அர்ப்பணித்தவர்.
அஹிம்சைப் போராட்ட காலம், ஆயுதப் போராட்ட காலம் அதன் பின்னர் மீண்டும் ஏற்பட்ட அஹிம்சைப் போராட்ட காலம் எனத் தனது வாழ்வில் பல தசாப்தங்களைப் பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர். அவர் ஆறு தசாப்த காலம் தமிழின அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய அஹிம்சைப் போராளி.
1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்த சோமசுந்தரம் சேனாதிராஜா, அனைவராலும் ‘மாவை சேனாதிராஜா’ என அன்புடன் அழைக்கப்பட்டார். அவர் 1960ஆம் ஆண்டு நேரடி அரசியலில் இறங்கினார். இலங்கை தமிழ் தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைந்து கொண்டதன் ஊடாக அவருடைய போராட்ட, அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகியது. தந்தை செல்வாவுடன் அஹிம்சைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர் மாவை சேனாதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. 1962ஆம் ஆண்டு அவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டு, அக்கட்சியின் இளைஞர் அணியான தமிழரசு வாலிப முன்னணியில் தன்னை ஒன்றிணைத்து போராட்டங்களில் பங்கெடுத்தார்.
அக்காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றமையால் அதிருப்தியடைந்த மாவை உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கினர். இதில் மாவை சேனாதிராஜா செயலாளராகப் பங்கெடுத்திருந்தார். 1970ஆம் ஆண்டு தேர்தலுடன் பலரும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட்டமையால் இந்த இளைஞர் அமைப்பு சிதைவடைய, மாவையும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படத் தொடங்கினார்.
பல போராட்டங்களில் மாவை சோனாதிராஜா இளைஞராகப் பங்கேற்றார். தமிழ் மாணவர் பேரவையுடன் தொடர்புபட்டவர்கள் 1973ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது அதில் மாவை சேனாதிராஜாவும் உள்ளடங்கியிருந்தார். சுமார் 7 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தார்.
சிறையிலிருந்து வெளியில் வந்த மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டு செயற்பட்டுள்ளார். மாவை சேனாதிராஜா, முதல் தடவையாக 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதும், தோல்வியைத் தழுவியிருந்தார். எனினும், அதே ஆண்டில் அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதும் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டார். அன்று முதல் பல தசாப்தங்களாகப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் சார்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மாவை சேனாதிராஜா, 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றினார். பின்னர் 2014ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக உள்ளக முரண்பாடுகளுக்கு முகங்கொடுத்தது. இக்காலகட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தும் பாரியதொரு பொறுப்பை சிரேஷ்ட தமிழ் தலைவர் இரா.சம்பந்தன் முன்னெடுத்திருந்ததுடன், இதற்கு மாவை சேனாதிராஜா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார்.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பிலிருந்து தன்னைத் தனியானதொரு கட்சி அடையாளமாகக் காண்பிக்க தமிழரசுக் கட்சி முயற்சித்தது. அக்கட்சியில் உள்ள ஒரு சிலரின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இருந்தபோதும், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதில் சம்பந்தனும், மாவையும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்தனர். இவ்வாறான நிலையில் இரா.சம்பந்தனின் வயது மூப்பு மற்றும் மாவை சேனாதிராஜாவின் பிடியில் தமிழரசுக் கட்சி இல்லாமை போன்ற காரணங்களால் அக்கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் வலுவடையத் தொடங்கின.
இதன் வெளிப்பாடாக தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு சுமந்திரனும், சிறிதரனும் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டபோதும், செயலாளர் தெரிவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புத் தொடர்பில் நீதிமன்றம் சென்றமையால் அனைத்துத் தெரிவுகளையும் இரத்துச் செய்த மாவை சோனாதிராஜா, கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் நீடித்தார்.
எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற விடயத்தில் கட்சிக்குள் மாறுபட்ட நிலைப்பாடுகள் எழுந்தமையால், தேர்தலுக்கு முன்னர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்ததுடன், சிறிதரனைக் கட்சித் தலைவராகச் செயற்படுமாறும் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு பதில் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி முடிவெடுத்திருந்தது. அதற்கு அமைய பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவு செய்யப்பட்டார். இது மாவை சோனாதிராஜா உள்ளிட்ட பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்ததுடன், தமிழரசுக் கட்சியை தமக்கு வேண்டியவாறு வழிநடத்திச் செல்ல சுமந்திரன் முயற்சிக்கின்றார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது.
அது மாத்திரமன்றி, தமிழரசுக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை எடுத்தபோதும், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட சிலர் பொது வேட்பாளராகக் களமிறங்கிய அரியநேத்திரனை ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்தனர். அது மாத்திரமன்றி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவை சேனாதிராஜாவை வீடு தேடிச் சென்று சந்தித்திருந்தார்.
இதனால், கட்சியின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தது. இந்த அடிப்படையில் மாவை சேனாதிராஜாவிடமும் விளக்கம் கோரப்பட்டிருந்தது. இதுபோன்ற தொடர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக மாவை சேனாதிராஜா அதிருப்தியடைந்திருந்தார். இவ்வாறான நிலையிலேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் எதிர்பாராமல் வீழ்ந்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேர்ந்தது.
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்?
இவ்வாறான பின்னணியில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்காலப் பயணம் எவ்வாறானதாக இருக்கப் போகின்றது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே தலைமைத்துவத்திற்கான போட்டியில் சிறிதரனும், சுமந்திரனும் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் சிறிதரன் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பியிருந்ததுடன், தமிழகத்திற்குச் செல்ல முற்பட்டபோது விமான நிலையத்தில் தான் தடுக்கப்பட்டமை தொடர்பில் சுமந்திரனிடம் விசாரிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது இருவருக்கும் இடையில் தொடர்ந்தும் பனிப்போர் இருப்பதை அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தது. கடந்த வருடம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத் தெரிவு விடயத்தில் ஏற்கனவே சுமந்திரன் அணி, சிறி அணி என இரு அணிகள் உருவாகியிருந்த நிலையில், தற்பொழுது மாவையின் இழப்பையடுத்து இது மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன.
ஏற்கனவே, தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையில் ஒற்றுமையின்றி செயற்பட்டதன் விளைவை கடந்த பொதுத்தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டின. வடக்கு, கிழக்கு அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியொன்று வடமாகாணத்தில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு வழங்கியமைக்கு தமிழ்க் கட்சிகள் மீது அவர்கள் கொண்டிருந்த அதிருப்தியே காரணம் என்பது வெளிப்படையான உண்மை. இதுபோன்ற அரசியல் பின்னணியில் பழம் பெரும் கட்சி எனத் தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் தமிழரசுக் கட்சியினர் தமக்கிடையே மோதிக் கொள்வது தென்னிலங்கைக் கட்சிகளுக்கே பலமாக அமைந்துவிடும் என்பதுதான் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் கவலையாக இருக்கின்றது.
இவ்வாறான போட்டாபோட்டிகளால் தமிழர்கள் சார்பில் பேரம்பேசும் சக்தி இல்லாமல் போய்விடும் என்பதே யதார்த்தம்.
இதில் பார்க்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயம், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைப்பதைவிட, தேசியம், உணர்வு என்ற விடயங்களையே முன்னிலைப்படுத்துகின்றனர்.
எனினும், தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சிகள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதால் அவற்றுக்கான ஆதரவுத் தளம் அதிகரிக்கின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயம் இதனைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் போக்கை மாற்றியமைக்காது தொடர்ந்தும் தலைமைத்துவத்துக்கும், யார் பெரியவர் என்ற விடயத்திலும் தமக்குள் மோதிக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அவர்கள் தமது செல்வாக்கை இழக்க வேண்டியே ஏற்படும்.
அது மாத்திரமன்றி, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக குரலெழுப்புவதற்கு எவருமே இல்லாது போய் விடுமென்பதுதான் உண்மை.
மாவைக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் அவரது மாவிட்டபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.