Home » வடக்கின் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் பணம் திருப்பி அனுப்பப்படுவது ஏன்?

வடக்கின் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் பணம் திருப்பி அனுப்பப்படுவது ஏன்?

by Damith Pushpika
February 2, 2025 6:56 am 0 comment
  • யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக கேள்வி எழுப்பிய ஜனாதிபதி
  • வடக்கின் அரசியல் தலைமைகள் இதுவரை அதனைக் கண்டுகொள்ளாததேன்?

“வடக்கின் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் பணம் திருப்பி அனுப்பப்படுவது ஏன்?” என்று யாழ்ப்பாணத்தில் வைத்துப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க. “இந்தக் கேள்விக்கு உரிய பதிலைச் சொல்ல முடியாமல் அதிகாரிகள் தடுமாறினார்கள்” என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாரிகள் மட்டுமல்ல, அங்கே பிரசன்னமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைதி காத்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதிலும் தமிழ்த் தேசிய அரசியற் தரப்பைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் இதற்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருந்துள்ளனர். இவர்கள் இப்போது மட்டுமல்ல, முன்னரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் அமைதி காத்துள்ளனர். ஆனால், இதற்கான பதிலை அவர்கள் நிச்சயமாக அளித்திருக்க வேண்டும். அந்தப் பொறுப்பு அவர்களுக்குண்டு.

ஏனென்றால், ஜனாதிபதி இந்தச் சேதியைச் சொல்வதற்கு – இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு – முன்பே, வடக்குக்கு அனுப்பப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்று பல தடவை, பல தரப்பினராலும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடக்கு மாகாணசபையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்த – விக்னேஸ்வரன், முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் பெருமளவு நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இப்படிக் குற்றம் சாட்டப்பட்ட விடயத்தைக் குறித்து இதுவரையிலும் கஜேந்திரகுமார், சிறிதரன் தரப்புகள் விசாரித்ததும் இல்லை. உண்மையைக் கண்டறிந்ததும் இல்லை. பதிலாக அரசாங்கம் வடக்கைப் புறக்கணிக்கிறது. பாரபட்சம் காட்டுகிறது என்றே புறணி சொல்லி வந்திருக்கிறார்கள்.

கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளிலும் பாரபட்சங்களும் புறக்கணிப்புகளும் இருந்தது உண்மைதான். அதேவேளை அரசாங்கத்தினால் வடக்குக்கு அனுப்பப்பட்ட நிதி முறையாகச் செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதும் உண்டு. என்பதால்தான் இதைப் பகிரங்கமாக – முகத்துக்கு முன்பாக – ஜனாதிபதி போட்டுடைக்க வேண்டி வந்தது.

இதற்குப் பிறகு கூட இந்த விடயத்தைக் குறித்து உண்மையைக் கண்டறிவதற்கு சிறிதரனோ, கஜேந்திரகுமாரோ அல்லது ஏனைய தமிழ்த்தரப்பினரோ முயற்சிக்கவில்லை. குறைந்த பட்சம் இது தொடர்பாக நாம் உண்மையைக் கண்டறிந்து உங்களுக்கும் (அரசாங்கத்துக்கும்) மக்களுக்கும் விளக்குவோம் என்று கூட இதுவரை (இந்தக் கட்டுரையை எழுதும்வரை) இவர்களிடமிருந்து எந்தவிதமான பதில்களும் வரவில்லை.

ஆனால், வடக்கிலுள்ள அதிகாரிகளும் வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்த, செய்யும் அரசியற் தரப்பினரும் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். குறிப்பாக முன்பு ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களாக இருந்தோரும் முன்பு அதிகாரிகளாக இருந்தோரும் முன்னர் அரசியல் அதிகாரத்திலிருந்தோரும் பதிலளிக்க வேண்டிய பொறுப்புடையோராவர்.

ஏனென்றால், போரினால் மிக மோசமான அழிவைச் சந்தித்த பிரதேசம் வடக்காகும். உளரீதியான பாதிப்பு. உடல் ரீதியான பாதிப்பு. வளரீதியான பாதிப்பு. தொழில் ரீதியான பாதிப்பு. புவியியல் மற்றும் சூழலியல் சார்ந்த பாதிப்பு. பொருளாதார ரீதியான பாதிப்பு, பண்பாட்டு ரீதியான பாதிப்பு எனப் பல வகையான பாதிப்பைச் சந்தித்தது வடக்கு.

அவ்வாறு பல முகப் பாதிப்புகளைச் சந்தித்த பிரதேசத்தை மீள்நிலைப்படுத்துவதற்கு பல வழிகளில் பல விதமான உதவிகளும் நிவாரணங்களும் ஆதரவும் நிதியும் தேவையாக இருந்தது. அதில் ஒன்றே அரச உதவியும் நிதி ஒதுக்கீடுமாகும். அதையே முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதும் அந்த நிதியைத் திருப்பி அனுப்புவது என்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வடக்குப் பிரதேசத்துக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.

இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும். வடக்கிலே உள்ள அதிகாரிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி, அனைவரும் தமிழர்கள் அல்லது தமிழ்பேசும் சமூகத்தினரேயாகும். சில காலங்களில் மட்டும் ஆளுநராகப் பதவி வகித்தோர், சிங்களவர்களாக இருந்துள்ளனர். மற்றும்படி அநேகமாக அனைவரும் தமிழ்த்தரப்பினராக இருந்தபடியால், இனரீதியாகப் பாரபட்சம் காட்டி நிதியைச் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியதாக யாரும் கதை சொல்ல முடியாது.

இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், ஒவ்வோராண்டும் திருப்பி அனுப்பப்பட்ட நிதியின் விபரமும் அந்த நிதி எந்த ஒதுக்கீட்டிற்கானது, எந்தத் திணைக்களத்திற்கானது என்ற விபரமும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதைப் புதிய அரசாங்கம் வெளிப்படுத்துமா? என்பதேயாகும். அதைப் புதிய அரசாங்கம் வெளிப்படுத்துமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டேயாக வேண்டும்.

இந்த இடத்திலே இன்னொரு விடயத்தையும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. அண்மைக்காலத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் , அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அப்படி மக்களுக்குப் பொறுப்பாக வேலை செய்ய முடியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது அவர்கள் தமது கதிரையை விட்டு வெளியேற வேண்டும் என்ற குற்றச்சாட்டைப் பகிரங்கமாகவும் சற்றுக் காட்டமாகவும் முன்வைத்து வருகிறார்.

ஆளுநரின் கூற்றும் ஜனாதிபதியின் கூற்றும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது. அதாவது அதிகாரிகளின் அசிரத்தையே பெரும்பாலான தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் காரணம் என்பதை இவை நிரூபிக்கின்றன.

இதேவேளை இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. திட்டமிடலிலும் அதற்கான தரவுகளைச் சேகரிப்பதிலும் கூட வடக்கு மிகப் பின்தங்கியதாகவும் பலவீனமுடையதாகவுமே உள்ளது. வடக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தக் குறைபாடுகளை நாம் தெளிவாகவே காண முடியும்.

குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைத்திட்டங்களும் அபிவிருத்திகளும் தோல்வியையே கண்டுள்ளன. பல கட்டடங்கள் செயற்பட முடியாத நிலையில் பாழடைந்து கொண்டிருக்கின்றன. வாழ்வாதார உதவிகளுக்கென மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும் நிவாரணங்களும் எந்த வகையிலும் குறித்த தரப்பினரின் வாழ்வை மேம்படுத்தவேயில்லை. அவ்வாறே சிறுதொழில் வளர்ச்சி, கூட்டுறவுத்துறை மேம்பாட்டுக்கான உதவிகள் போன்றவையும் வெற்றி பெறவில்லை.

இவையெல்லாம் சரியாகத் திட்டமிடப்படாமையின் வெளிப்பாடுகளே – விளைவுகளேயாகும். அல்லது இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தி, வெற்றியடையச் செய்திருக்க வேண்டும். அதுவும் திட்டமிடலில் ஒரு பகுதியேயாகும். அதைச் செய்யவேயில்லை.

ஆகவே பொறுப்பான அதிகாரிகள் (திட்டமிடற் பிரிவினர் உள்பட அதற்கு மேலுள்ள நிறைவேற்று அதிகாரிகள் வரையில்) இதற்குப் பொறுப்புடையோராகின்றனர். இந்தப் பொறுப்பு வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்த – செய்கின்ற அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு. அப்படியென்றால், இந்தக் கூட்டுத் தவறு ஏன் நிகழ்ந்திருக்கிறது? மக்கள் மீது இவர்களுக்கெல்லாம் அக்கறையே இல்லையா? என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம்.

இதற்குப் பிரதான காரணம், பொறுப்பின்மையாகும். இரண்டாவது ஆற்றலின்மை. மூன்றாவது, அச்சம். நான்காவது, அரசியல்.

பொறுப்பின்மை என்பது அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, சாதாரண ஊழியர்கள் மட்டத்திலும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு தீவிர நோயாகும். தட்டிக்கழித்தலும் சாட்டுச் சொல்லுதலும் தமிழ்ச்சமூகத்தில் வலுத்து விட்டது. இதைத் தட்டிக் கேட்போரும் சுட்டிக் காட்டுவோரும் எதிராளிகளாக நோக்கப்படும் அளவுக்கு இந்த நோய் வலுத்துள்ளது.

இந்தப் பொறுப்பின்மை போருடன் சேர்ந்து வளர்ந்ததாகும். ஒரு காலகட்டத்தில் மிக அர்ப்பணிப்போடு பணியாற்றிய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பின்னர் ஏனோ தானோ என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இதற்குக் காரணம், போர்க்காலத்தில் பொறுப்புச் சொல்வது சுலபம். போர்ச்சூழலில் நாம் இப்படித்தான்தான் செயற்படக் கூடியதாக இருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். அங்கே முழுமையான நிர்வாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. சூழலும் இல்லை. அப்படியாக இருந்தாலும் அதற்கான பொறுப்பை ஏதோ ஒரு தரப்பின் தலையில் விட்டு விடலாம்.

இப்போது (போருக்குப் பிந்திய சூழலில்) அப்படிச் செய்ய முடியாது. இப்பொழுது நிர்வாக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டும். பொறுப்புச் சொல்ல வேண்டும். அதற்குப் பழக்கப்படாத அதிகாரிகளே பலரும். இதை மூத்த அதிகாரிகளே ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பெரும்பாலான அதிகாரிகள் நீண்டகாலமாக அல்லது தமது பணிக்காலம் முழுவதுமே வடக்கிலேயே பணியாற்றிக் கொண்டிருப்பதாகும். பிற இடங்களில் வேலை செய்யும்போது கிடைக்கின்ற அனுபவத்தைப் பெறாதவர்கள்.

ஆகவே ஒரு மந்த நிலையை, ஆற்றலின்மையை இவர்களிடத்திலே உருவாக்கியிருக்கிறது. இது பொறுப்பின்மையை வளர்த்திருக்கிறது. அடுத்தது, அச்சமாகும். இது கூட வடக்கிற்குள் முடங்கியிருந்ததால் ஏற்பட்டது எனலாம். தாம் சுயாதீனமாகவும் தற்துணிவோடும் சில வேலைத் திட்டங்களை முன்னெடுத்தால், அதற்காகப் பழிவாங்கப்படுவோமோ? அரசாங்கத்தின் ஆட்களாகக் கருதப்பட்டு விடுவோமோ? என்ற அச்சம். கூடவே அரசாங்கத்தரப்பு – எதிர்த்தரப்பு என்ற பிரிகோட்டுக்குள் சிக்க வேண்டியிருக்கும் என்ற காரணத்தினால், தட்டாமல், முட்டாமல் ஏதோ இருக்கும் காலம் வரையிலும் கதிரையைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று நடந்து கொள்வது.

இதனால், தேவையான திட்டங்களை உருவாக்குவதற்கும் செயற்படுத்துவதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணமாக, யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த்திட்டம் இரணைமடு – மருதங்கேணி – பாலியாறு என மூன்று திசைகளில் இழுபடுகிறது. இதை துணிச்சலோடு அதிகாரிகள் அதற்கான அடிப்படையில் வாதிட்டு முன்னெடுத்திருக்க முடியும். அப்படிச் செய்யவில்லை. நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வடிகாலமைப்புச் சபை ஆகிய இரண்டு தரப்பு அதிகாரிகளின் தயக்கங்களே இந்தத் திட்டம் இன்னும் இழுபறியில் இருப்பதற்கும் சர்ச்சையோடு நீடிப்பதற்கும் காரணமாகும். அதிகாரிகளிடத்தில் நீடிக்கின்ற தயக்கமே அரசியற் தரப்பினரிடத்திலும் உள்ளது.

ஆக கூட்டு மந்தத் தனமே இங்கே நிலவுகிறது. இறுதியான காரணம், அரசியலாகும். ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல அரசியல் சிக்கல்களுக்குள் தாம் உள்ளாக வேண்டி வந்து விடும் என்ற முன்னெச்சரிக்கையோடு தணிந்து – பணிந்து – மந்தமாகிப் போவதோடு, அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று காட்டுவதற்கான – பழியை அரசின் தலையில் கட்டி விடும் விதமாகவும் இந்தக் குறைபாடு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் புறக்கணிக்கிறது. எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்று சுலபமாகப் பழியைச் சுமத்தி விடுவதற்கு இதை ஒரு கருவியாகவும் வாய்ப்பாகவும் பயன்படுத்தியுள்ளனர். இதை தமிழ் அரசியல்வாதிகள் தாராளமாக ஆதரித்துள்ளனர். அவர்களுடைய அரசியலுக்கு இது தேவையான கருப்புப்பொருள் அல்லவா!

இதனால்தான் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதைப்பற்றி இவர்கள் கேள்வி எழுப்பவேயில்லை. இனியும் கேட்கப்போவதில்லை. இப்படியான ஒரு நெருக்கடிச் சூழல் ஏற்படும்போது, அது அதிகாரிகளின் குறைபாடு, தவறு, குற்றம் என அவர்களுடைய தலையிற் கட்டிவிடவே முயற்சிக்கின்றனர். அப்படியானால், எதற்காக இவர்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குச் செல்கின்றனர்?

புதிய அரசாங்கம், புதிய ஆட்சி, புதிய தலைமை இதில் மாற்றத்தை உண்டாக்க முயற்சிக்கிறது. அதனுடைய அடையாளமே முதலில் இந்த மணியடிப்பாகும். பார்ப்போம், இனியாவது மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிகழ்கிறதா? என்று.

கருணாகரன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division