Home » கடந்த காலத்தில் நிலவிய வடக்கு-தெற்கு இடையேயான இடைவெளி நீங்கி வரும் அறிகுறி!

கடந்த காலத்தில் நிலவிய வடக்கு-தெற்கு இடையேயான இடைவெளி நீங்கி வரும் அறிகுறி!

by Damith Pushpika
February 2, 2025 6:44 am 0 comment

இலங்கையில் பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தி ற்குச் சென்றிருந்த அவர், யாழ் மாவ ட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்ததுடன், வல்வெட்டித்துறையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களைச் சந்தித்திருந்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த பொதுத்தேர்தல் பிரசாரத்திற்குச் சென்றிருந்த அநுர குமார திசாநாயக்க, யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இந்த நிலையில் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கில் அதிக ஆசனங்களைப் பெற்றது. இதன் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதிக்கு மக்கள் அமோகமான வரவேற்பளித்திருந்தனர்.

கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி தற்போது குறைந்துள்ளதை ஜனாதிபதி அநுரவின் யாழ். விஜயத்தின் மூலம் காணக்கூடியதாகவிருந்தது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கமொன்றுக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். தமது அரசாங்கம் மீது குறிப்பாக வடபகுதி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேணுவதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதை அவருடைய இந்த விஜயம் எடுத்துக்காட்டியுள்ளது.

மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அன்றாடப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை வழங்க முடியும் என்பதை அவர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமரர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மாவிட்டபுரத்தில் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் கடந்தகால ஜனாதிபதிகளின் விஜயங்களுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானதாக இருந்ததையும், தம்மால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றதையும் காணக்கூடியதாகவிருந்தது.

அது மாத்திரமன்றி, நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் வகையிலான கருத்துகளை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். வடக்கிற்குச் சென்று ஒரு விடயத்தையும், கிழக்கிற்குச் சென்று இன்னுமொரு விடயத்தையும், மலையகத்திற்குச் சென்று வேறொரு விடயத்தையும் கூறும் அரசியல் கலாசாரத்திலிருந்து வேறுபட்டதாக அவருடைய கருத்துகள் அமைந்திருந்தன.

இதுவரை ஆட்சியிலிருந்த அரச தலைவர்கள் தமக்கு வாக்களித்த மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றைக் கூறுவார்கள். ஆனால், நாட்டின் அனைத்துத் திசைகளிலிருந்தும் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு வழங்கியமையால் தாம் முன்னெடுக்கவிருக்கும் திட்டங்களை சந்தேகமின்றி அவரால் முன்வைக்க முடிந்தது.

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகுவிரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும். எனினும், அந்தக் காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்காக, எந்தவொரு காணியையும் நீண்டகாலம் வைத்திருக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானதும் வடக்கில் நீண்ட காலம் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தமது காணிகளும் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. காணி விடுவிப்புத் தொடர்பான மற்றுமொரு விடயமாக யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சரியான திட்டமொன்றுக்குக் கைளிக்கத் தயார் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு அவதாரங்களில் ஜனாதிபதி மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பெற்றுக் கொடுக்கத் தயார் என்ற விடயத்தை அவர் மீண்டும் யாழ்ப்பாணத்திலும் தெளிவாகக் கூறியிருந்தார்.

வடக்கிலுள்ள இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற யதார்த்தத்தை முன்வைத்த ஜனாதிபதி, அவர்களின் வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில் காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி அவற்றின் ஊடாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கைத்தொழில் பேட்டைகளில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததுடன், பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்குத் தமிழ் பேசக்கூடிய இளைஞர், யுவதிகளை இணைக்குமாறு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்யும் வகையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

வடக்கு மாகாணத்தின் மீது விசேட அக்கறை செலுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் யாழ். விஜயத்தில் கவனம் செலுத்தப்பட்டது. தீவுப் பகுதிகளில் போக்குவரத்து சீராக இல்லை என்பதும், கிராமப் புறங்களில் சிறுவீதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் வடமாகாணத்தில் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்த வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இணைந்து செயற்படும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இவ்வருடத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான பணத்தை வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கினார்.

வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அரசியல் தீர்வு போன்ற விடயங்களுக்கு அப்பால் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும், நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருப்பது மக்கள் மத்தியில் அவர் குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது எனலாம்.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division