கருத்து மோதல்களும் பிளவுகளும் எந்தக் கட்சியில்தான் இல்லையென்று கேள்வி எழுப்புகின்றார் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிறிநாத். ஆனால் அந்த முரண்பாடுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படுவதே முக்கியமானதென்கிறார் அவர். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அதனைக் குறிப்பிட்டார். நேர்காணல் வருமாறு….
கேள்வி : வைத்தியத்துறையில் இருந்த நீங்கள் அரசியலுக்கு வரக் காரணம் என்ன?
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் பல பிரதேசங்களில் வைத்தியராக கடமையாற்றியிருக்கின்றேன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூன்று வருடங்கள் மயக்க மருந்து வைத்தியராகவும், பொது வைத்தியராக பட்டிப்பளை, செங்கலடி, வாழைச்சேனை, ஆரையம்பதி, பகுதிகளிலும் தாய், சேய் நல வைத்திய அதிகாரியாகவும், மற்றும் மாவட்டத்திலே நுளம்பு கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரியாகவும், பொது வைத்தியராகவும் கடமை ஆற்றியிருந்தேன்.
நான் வைத்தியராக கடமையாற்றுகின்ற போது மக்களிடத்தில் கிராமங்களுக்கு களத் தரிசிப்புகளை மேற்கொள்கின்ற போது மக்களுக்கு பல குறைபாடுகளை என்னால் நேரில் அவதானிக்க முடிந்திருந்தது. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமை, தமிழ் தேசியம் சார்ந்த இன்னும் பல விடயங்கள், வாழ்வாதாரம், பொருளாதாரம், மருத்துவ சேவைகள், போருக்கு பின்னரான கட்டுமான பணிகள், உள்ளிட்ட பல விடயங்களை அவதானிக்க முடிந்தது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க முனைகின்ற பொழுது அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவை முடியாமல் போயின.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாங்கள் நடமாடும் வைத்திய சிகிச்சை முகாம்களை மேற்கொள்வதற்கு, அரசியல் அதிகாரம் அரசியல் ஒத்துழைப்பு, மிக தேவையாக இருந்தது. மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டபோது சுகாதாரத்துறை சார்ந்திருந்தும் அதனை என்னால் தடுக்க முடியாதிருந்தது. இந்த நிலையில்தான் அரசியலுக்குள் சென்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மக்களுடன் சேர்ந்து பயணிப்பதற்குமான தேவை எனக்கு இருந்தது.
கேள்வி : மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியத்துறை சார்ந்து காணப்படும் குறைபாடுகள் என்ன?
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சுகாதாரத் துறையின் தேவைகள் மிக அதிகமாமாகவுள்ளன. உதாரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையாக இருக்கின்றபோதும் அங்கு இடப்பிரச்சினை, ஆளணி பற்றாக்குறை, உள்ளிட்ட பல்வேறு தேவைகள் அங்கு காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு விடயங்களை நாங்கள் முன்னகர்த்தி இருக்கின்றோம். அதுதொடர்பில் மாவட்டத்திலே காணப்படுகின்ற ஏனைய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் சுகாதாரத்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு காணப்படுகின்ற தேவைகளை மிகவிரைவாக பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.
சுகாதாரத் துறையின் ஊடாக பயணித்தவன் என்ற அடிப்படையில் மக்களுக்கு உரிய ஒசுசல வசதிகள் தொடர்பிலும் நான் பாராளுமன்றத்திலும் உரையாற்றியிருக்கின்றேன். இவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மிகவிரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர், அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.
இவற்றிற்குமேலாக மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள வைத்தியசாலைகளிலும், பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அதற்காக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.
ஆலோசனைகளையும் வழங்கியிருக்கின்றோம். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை தொடர்பான தேவைப்பாடுகள் குறித்து அரசாங்கத்துடன் பேசி எவ்வாறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
அது மாத்திரம் இன்றி நன்கொடையாளர்களையும் கண்டறிந்து அவர்களூடாகவும் மட்டக்களப்பில் சுகாதாரத் துறையில் காணப்படுகின்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை நான் முன்னகர்த்தி இருக்கின்றேன்.
கேள்வி : மட்டக்களப்பு மாவட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற திட்டங்கள் தங்களிடம் உள்ளனவா?
மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய தீர்க்கமான திட்டமிடல்களை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டம் அதிக வளங்களைக் கொண்டமைந்த மாவட்டமாக காணப்படுகின்றது. விவசாயம் சார்ந்த உற்பத்தி, கால்நடைவளர்ப்பு, அடுத்ததாக கடல்வளம் என்பன ஒருங்கே அமைந்துள்ளன.
கித்தூள் குளத்தையும் உறூகம் குளத்தையும் இணைக்கும் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. அந்தத் திட்டம் முழுமை பெறும் பட்சத்தில் மாவட்டத்தில் வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ளப்பெருக்கை குறைப்பதற்காக அதுவும் பெரும் செவ்வாக்குச் செலுத்தும். அதனால் வயல் நிலங்களின் அழிவையும் மக்களின் அழிவுகளையும் தடுக்க முடியும். இவ்வாறு பாரிய நீர்ப்பாசன திட்டங்களும் இன்னும் முழுமைபெறாத நிலையிலே காணப்படுகின்றது. இவ்வாறு திட்டங்களை முன்னெடுக்கின்ற பொழுது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மாத்திரமன்றி நாட்டில் பொருளாதாரம் வலுவடைந்து நாட்டுக்கு பாரிய பங்களிப்பை செய்யும்.
மீன்வளத்தை அதிகரிப்பதற்குரிய ஏற்பாடுகளை அதற்குரிய அமைச்சருடன் இணைந்து கலந்தாலோசித்திருக்கின்றோம். கால்நடைகள் தொடர்பிலும் அவற்றை வளர்ப்பது தொடர்பிலும் நாங்கள் பரிசீலனை செய்து வருகின்றோம். கால்நடை வளர்ப்பால் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகிறது. குறிப்பாக கால்நடை வளர்ப்பிற்குரிய மேச்சல்தரை முக்கியமாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இவற்றிற்கு அப்பால் எமது மாவட்டத்தில் சுற்றுலாத்துறை, சூழலியல் பாதுகாப்பு, போன்ற விடயங்களையும் மேம்படுத்தப்படுவதற்குரிய நிகழ்ச்சிநிரல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதற்காக இப்பிரதேச மக்களின் பங்களிப்பும், உறுதிப்படுத்தப்பட வேண்டும். இருக்கின்ற வளங்களை பாவிக்கின்றபொழுது இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுடைய பூரண பங்களிப்பும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
ஆடைத் தொழிற்சாலை, உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை உருவாக்குவதன் மூலமும் பலருக்குரிய வேலை வாய்ப்புக் கிட்டும். இது மாவட்டத்தின் அபிவிருத்தியை மென்மேலும் வலுப்படுத்தும்.
அத்தோடு நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்தவும் முடியும். இவ்வாறு செயற்றிட்டங்கள், நீண்ட காலத் திட்டங்களாக அமைந்தாலும் திட்டமிட்டு பாகுபாடுகள் இன்றி மிக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றபோது மட்டக்களப்பின் வாழ்வாதாரம் கணிசமாக வ உயரக்கூடிய சந்தர்ப்பம் மிக அதிகமாக கிடைக்கும் என நான் நினைக்கின்றேன். அதற்காக அரசுக்கு நாங்கள் அழுத்தங்களையும் பிரயோகிப்போம்.
கேள்வி : நாட்டை தற்போது நிருவகித்துக் கொண்டிருக்கின்ற புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
தமிழ் மக்களுக்கான அடிப்படையான பிரச்சினைகளுக்குரிய தீர்வைத் தர வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பினை கொண்டிருக்கின்றோம். அவர்களும் ஒரு போராட்ட வரலாற்றிலிருந்து வந்தவர்கள், இழப்புக்கள் தொடர்பிலும், போராட்டங்கள் தொடர்பிலும், மிகத் தெளிவாக அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
ஆனால் அவர்கள் தற்போது அரசை பொறுப்பேற்கின்ற பொழுது இன சமத்துவத்தை பேணி எமக்குரிய தீர்வினை அவர்கள் முன்வைக்க வேண்டும். அதனூடாக மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும், முன்வைக்கின்ற பொழுது அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று எதிர்பார்த்தோம்.
ஜனாதிபதியின் உரையிலும்சரி, தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை அவர்கள் முன்வைத்திருக்கவில்லை. நாட்டில் பொருளாதார பிரச்சினை இருக்கின்றது, ஊழல் இருக்கின்றது, இலஞ்சம் இருக்கின்றது, அவற்றை தீர்த்து விட்டு நாங்கள் ஏனைய விடயங்களை செய்வோம் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அதனை அவ்வாறு விட்டு விட்டு நாங்கள் பார்த்திருக்க முடியாது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைக்கு மிகப் பிரதான காரணமே தமிழ் மக்களுக்குரிய சரியான உரிமையும் அவர்களுக்குரிய சமத்துவமும் பேணப்பட்டு இருந்தால் நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவையோ, யுத்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோ இருக்காது. பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று இலங்கையும் சிறப்பான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும். எனவே தமிழ் மக்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்கள் கவனம் செலுத்த தவறினால், பொருளாதார நிலைமையில் இருந்து மீள்வது சிரமமானதாகவே இருக்கும். ஆனால் நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம் அவர்கள் செய்ய வேண்டும் என்று. புதிதாக வந்திருக்கின்றார்கள் அவகாசம் கொடுப்போம்.
கேள்வி : உங்களது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இறுதியாக நடைபெற்ற உங்களது கட்சியின் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக கருத்துக்கள் வெளி வருகின்றன. அதன் உண்மைத் தன்மை என்ன?
பொதுமக்கள் சார்பிலும் அல்லது கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும், கேட்கப்படுகின்ற கேள்விகளும் எழுப்பப்படும் வினாக்களும் இவ்வாறுதான் அமைந்திருக்கின்றன. நீண்ட காலமாக பயணிக்கின்ற கட்சி என்ற வகையில், 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும், போராடிய கட்சி என்ற வகையிலும், கட்சியின் மிகப் பிரதான விடயம் அதன் ஜனநாயக தன்மையாகும்.
75 வருட காலம் பல அனுபவசாலிகளையும் பழம்பெரும் அரசியல்வாதிகளையும், கொண்ட கட்சியிலே பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகளும், கருத்துவேறுபாடுகளும் இருக்கத்தான் செய்யும்.. ஏனெனில் இது தனிமனிதனின் ஆதிக்கத்துக்குட்பட்ட கட்சி அல்ல. பல்வேறு அனுபவமுள்ள தலைவர்கள் இருக்கின்ற கட்சியில் பலரும் பல கருத்துக்களை முன்வைப்பார்கள். கருத்து மோதல்கள் இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருக்கும், சில வேலைகளில் சில விடயங்கள் தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது நீதிமன்றத்தையும் நாடவேண்டியிருக்கும். இங்கு ஜனநாயக தன்மை பேணப்படுகின்ற காரணத்தினால் பல்வேறு வகையான விமர்சனங்களும் எழுகின்றன.
கட்சிக்குள் ஏற்படுகின்ற கருத்து மோதல்களை அல்லது கருத்து வேறுபாடுகளை கொண்டு, கட்சியின் பயணப் பாதையை மாற்றியமைக்காது முரண்பாடுகள் சுமுகமாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
செவ்வி கண்டவர் : வ.சக்திவேல்