தேங்காயை இறக்குமதி செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் பற்றி எம்முடன் அவர் விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கே: ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் உங்கள் அமைச்சின் வகிபாகம் என்ன?
பதில்: ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டம் என்பது நாட்டிலுள்ள அனைவரினதும் பங்களிப்புடன் ஒரு மனப்பான்மை மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக மக்கள் மத்தியில் முன்னேற்றத்தை உருவாக்கும் கூட்டு முயற்சியாகும். இதன் ஊடாக நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய உற்பத்தித் திறன் செயலகம் மூலம் பாரிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் மூலம் அரசதுறை, அரச-தனியார் துறை, அரச நிறுவனங்கள், தனியார்துறை மற்றும் பாடசாலை ஆகிய சகல துறைகளையும் உள்ளடக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட வளங்களில் முழுமையான பலனையும் பெறும் விஞ்ஞான ரீதியான திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.
கே: இச்செயல்முறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விளக்க முடியுமா?
பதில்: வீடுகள், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றுவது என்பது குறித்த அறிவை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக இத்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்புச் செலுத்துவதே எமது நோக்கம். உதாரணமாகக் கூறுவதாயின், வீடொன்றை எடுத்துக்கொண்டால், மின்சாரத்தை எவ்வாறு திறமையாகப் பயன்படுத்துவது, வீண்விரயத்தை எவ்வாறு குறைப்பது, செலவுகளைக் குறைத்து சிக்கனத்தைப் பேணும் வகையில் எவ்வாறு நிர்வாகம் செய்வது போன்ற அறிவை சமூகமயமாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கே: அரசாங்கம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்யப் போவதாகத் தெரிவித்து ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. இச்செய்தியில் உண்மை உள்ளதா?
பதில்: இது முற்றிலும் தவறான செய்தி.
கே: அப்படியாயின் உண்மைத் தன்மையை விளக்க முடியுமா?
பதில்: நமது நாட்டில் தேங்காய் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ள பிரதான மூன்று தரப்புகள் உள்ளன. குறிப்பாக ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பெறுமதிசேர்ப்புகளில் ஈடுபடுபவர்கள் என மூன்று பிரிவினர் உள்ளனர். இவர்கள் ஒருமித்த சங்கமாக இணைந்து தத்தமது தொழில்துறையின் முன்னேற்றத்திற்கான ஏற்றுமதித் தொழிலை மேம்படுத்தவும், அதற்கான உற்பத்தியைப் பராமரிக்கவும் 200 மில்லியன் தேங்காய் மற்றும் தேங்காய்ப்பாலை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் இக்கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு நான் தெரிவித்த கருத்துகள் திரிபுபடுத்தப்பட்டே தவறான செய்திகளாக ஊடகங்களின் அறிக்கையிடப்பட்டன.
கே: தேங்காயை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறையின் முக்கியத்துவத்தை உங்கள் அமைச்சு எவ்வாறு அடையாளம் கண்டுள்ளது?
பதில்: தேங்காய் சார்ந்த தொழில் நாட்டுக்கு மிக முக்கியமான தொழிலாகும். உள்நாட்டின் தேங்காய் நுகர்வு மற்றும் உற்பத்தி ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் தேங்காயை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதித் தொழில் போன்றன பொருளாதார ரீதியில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு தொழிலாக இதனை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
கே: இதனை மேலும் விளக்க முடியுமா?
பதில்: உள்நாட்டு ஏற்றுமதித் தொழில்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இலங்கையின் மூன்று விவசாய ஏற்றுமதிகளான தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் ஆகியவை நம் நாட்டுக்கு சுமார் ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள இறக்குமதியைக் கொண்டு வருகின்றன. தேயிலை ஏற்றுமதி மூலம் 1.3 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டக்கூடிய அளவுக்கும், இறப்பர் சார்ந்த பொருட்கள் மூலம் 950 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டக்கூடிய அளவுக்கும், தேங்காய் சார்ந்த ஏற்றுமதி மூலம் 850 மில்லியன் ெடாலர் வருவாய் ஈட்டக்கூடிய அளவுக்கும் இந்த தொழில்முனைவோர் நாட்டை வளர்த்துள்ளனர். ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்தத் தொழில்களுக்கான மூலப்பொருளான நமது பெருந்தோட்டத்துறை சிறிது காலம் வீழ்ச்சியடைந்ததால் உற்பத்தித் திறன் குறைந்து ஏற்றுமதித் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டது.
கே: இந்தத் துறைகள் தற்பொழுது எவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன?
பதில் : இலங்கையில் 75 முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெறுமதி சேர்ப்பைக் கொண்டிருந்த இறப்பரை அடிப்படையாகக் கொண்ட துறை தற்பொழுது 35சதவீத பெறுமதி சேர்ப்பையே வழங்குகின்றது. அது மாத்திரமன்றி, இறக்குமதி செய்யப்படும் இறப்பர் மூலப்பொருட்களை நம்பியே இது இயங்கி வருகின்றது. விவசாயத்துறையில் – அதாவது தோட்டத் தொழிலில் – உற்பத்தித்திறனை முறையாகப் பராமரிக்கத் தவறியதாலும், புதிய தொழில்நுட்ப அறிவை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தத் தவறியதாலும், நம் நாட்டில் தேங்காய் உற்பத்தியும் நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. முன்னைய அரசாங்கங்கள் ஒரு தேசியத் திட்டம் இல்லாமல் செயற்பட்டமையே இதற்குப் பிரதான காரணம். குறிப்பாக காணிகள் துண்டாடப்பட்டதன் காரணமாக தென்னைப் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டது. விளைச்சலுக்குத் தேவையான உரம் கிடைக்காமை போன்றவற்றால் தென்னை சார்ந்த தொழில் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
கே: தேங்காய் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
பதில்: நம் நாட்டில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைச்சல் சராசரியாக 50 தேங்காய்களாகும். ஆனால் இது விஞ்ஞான ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டால் 80 முதல் 100 தேங்காய்கள் வரை உற்பத்தித்திறனை அடைய முடியும். இத்தகைய சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டில் அண்ணளவாக 3,100 மில்லியன் தேங்காய்களைப் பெற்றுள்ளோம். அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்குள் இது 3,300 மில்லியனை எட்டக்கூடும் என்று ஒரு கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் சுமார் 2,600 மில்லியன் தேங்காய்களைப் பெற்றோம். அதனால்தான் இந்த நிலைமை உருவாகியது.
கே: ஆனாலும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகின்றது அல்லவா?
பதில்: யார் என்ன சொன்னாலும், இந்த நெருக்கடி கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஏற்பட்ட ஒன்றல்ல என்பதை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
கே: நாட்டு மக்களின் நுகர்வுக்கு 2,600 மில்லியன் தேங்காய்கள் போதுமானவையா?
பதில்: இந்த 2,600 மில்லியனில், 1,800 மில்லியன் வீட்டு நுகர்வுக்காக ஒதுக்கப்படும். மீதமுள்ளவற்றில் பெரும்பகுதி ஏற்றுமதிக்கும், ஒரு சிறிய அளவு தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால் இந்த ஏற்றுமதி அளவு தேங்காய் ஏற்றுமதித் தொழிலைத் தக்கவைக்கப் போதுமானதாக இல்லை. எனவே, அவர்கள் தங்கள் தொழிலை நடத்துவதற்குத் தேவையான தேங்காய்களை சந்தையில் இருந்து வாங்குவதை நாடுகிறார்கள். இதனால்தான் சந்தையில் தேங்காய்ப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது.
கே: பொதுமக்களின் நுகர்வுக்காக தேங்காய்களை வெளியிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட முடியும் என்ற நிலையில், அரசாங்கம் ஏன் ஏற்றுமதி சந்தையைப் பாதுகாக்க முயற்சிக்கிறது?
பதில்: முதலாவதாக தேங்காயின் சகல பகுதிகளையும் ஏற்றுமதி செய்வதால் டொலர்களை நாட்டுக்குள் கொண்டுவர முடியும். தேங்காய்கள் டொலர்களின் மூலமாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேங்காய் தண்ணீர், உள்பகுதி, தேங்காய் நார் உள்ளிட்ட அனைத்தையும் டொலர்களாக மாற்றலாம்.
குறிப்பாக, தேங்காயின் உட்பகுதியின் உலகளாவிய ஏற்றுமதி சந்தை 27 முதல் 30 பில்லியன் டொலர்கள் வரை மதிப்புடையது. நமது நாட்டின் ஏற்றுமதியாளர்கள் இந்த சந்தையில் இருந்து சுமார் 1.5 பில்லியன் டொலர் பங்கை அடைவதற்கு இலக்கு வைத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி உள்ளூர்ச் சந்தையில் இருந்து விநியோகம் இல்லாததுதான்.
கே: நாட்டில் அரிசி விலையும் ஓரளவு அதிகரித்து வருகிறது. இதற்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லையா?
பதில்: இந்த நெருக்கடி இன்று நேற்று எழுந்ததல்ல. சிறிது காலமாக நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பு மற்றும் இந்த ஒழுங்கமைக்கப்படாத சந்தை அமைப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரும் அநீதிக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்தபட்ச விலையும், நுகர்வோருக்கு அரிசிக்கு அதிகபட்ச விலையும் இருந்தன. தொடர்புடைய நிறுவனங்கள் இது தொடர்பான தரவுகளை முறையாக நிர்வகிக்காததால், கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் அரிசி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், அரிசியிலிருந்து அதிகப்படியான இலாபத்தைத் தடுக்கவும் மிகவும் அறிவியல் பூர்வமான திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.