வட்ட நிலவும் வசந்த இருளும்
வந்தே அமரும் வானின் அடியில்
எட்ட நின்று எரியும் பகலோன்
எழும்பச் சொல்லி ஏற்றும் ஒளியில்
கட்டச் சேவல் களைப்பைப் போக்கிக்
கடுமைக் குரலில் கூவும் வேளை
சுட்டே எரிக்கும் சுடரோன் கதிரும்
சுற்றும் புவிக்குச் சுகந்தம் தருமே!
பட்டுக் குளிரும் பனியின் துளிகள்
பசும்புல் நுனியை விட்டே வீழ
மொட்டு விட்ட மலரோ மூழ்க
முந்தும் இதழில் முத்தம் இட்டுக்
கொட்டும் அழகு குவிய நாளும்
கொஞ்சி ஆடும் காலை வேளை
வெட்டும் இமையின் விழியில் ஆடும்
விடியல் இறையின் வியப்பே ஆகும்.
பச்சை வெளியும் பசுமை பொழியப்
பருகும் தென்றல் பதமாய் அசைய
உச்சம் ஆழி ஒலிக்கும் திசையில்
உதயம் மணக்க உணரும் நெஞ்சில்
இச்சை கூட்டி இறகை பூட்டி
இதயம் எழிலின் இன்பில் களிக்கும்
மெச்சி நிற்கும் மேன்மைக் காட்சி
மெல்ல மனத்தின் மேடை ஏறும்