எண்ம உலகம் (Digital World) பற்றி மூன்று கட்டுரைகள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளோம். எண்ம உலகைப் பற்றிய அடிப்படைகளை அறிந்து கொள்ள அவை உதவியாக இருக்கும்.
‘டிஜிட்டல் உலகம் – ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பின் கீழ் முதலாவது கட்டுரையில், தொழிற்புரட்சி, எண்ம யுகம், எணினிமயமாக்கம், எண்மமயமாதல், பௌதீக உலகுக்கும் எண்ம உலகுக்கும் இடையிலான தொடர்பு, எண்மவாசிகளும் தொடரறா சமூகமும் மற்றும் எண்ம உலகை நோக்கிய மக்களின் வேகமான நகர்வு போன்ற விடயங்களை எழுதியிருந்தேன்.
இரண்டாவது கட்டுரையில், ‘டிஜிட்டல் உலகம் – ஒரு பார்வை’ என்ற தலைப்பின் கீழ், உலகில் இணைய வளர்ச்சி, உலக அளவில் தற்போதைய இணையப் பாவனை, சமூக ஊடகப் பாவனை மற்றும் செல்பேசிப் பாவனை குறித்தும், இலங்கையில் இணைய வளர்ச்சி, தற்போதைய இணையப் பாவனை, சமூக ஊடகப் பாவனை மற்றும் செல்பேசிப் பாவனை குறித்தும் சில தரவுகளை முன்னிறுத்தி எழுதியிருந்தேன்.
‘டிஜிட்டல் சூழலமைப்பு – ஓர் அலசல்’ என்ற தலைப்பின் கீழ் மூன்றாவது கட்டுரை அமைந்திருந்தது. அதில், எண்ம உலகம் என்பது பௌதீக அடுக்கு, செயல்பாட்டு அடுக்கு மற்றும் தகவல் அடுக்கு ஆகிய மூன்று அடுக்குகளால் ஆனது என்பதைப் பற்றியும் அவற்றில் உள்ள முக்கிய கூறுகள் குறித்தும் எழுதியிருந்தேன்.
இந்தப் பின்னணியில், எண்ம வாழ்க்கை (Digital Life) பற்றிய ஒரு விளக்கத்தை வழங்குகிறது இந்தக் கட்டுரை.
அறிமுகம்
டிஜிட்டல் சூழலமைப்பில் (Digital Ecosystem) உள்ள பல்வேறு கூறுகளைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அந்த வகையில்,
ஒரு பயனர் திறன் சாதனம் வழியாக பணித்தளத்துக்குள் பிரவேசித்து தரவுகளை வழங்கி தனக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம் இதனை நாம் ஒரு எண்ம செயற்பாடு (Digital Activity) என்று குறிப்பிடுவோம்.
இப்படியான ஒரு எண்ம செயற்பாட்டுக்குள் பிரதானமாக ஐந்து கூறுகள் உள்ளன. அவை,
01. பயனர் (User)
02. சாதனங்கள் (Devices)
03. பணித்தளங்கள் (Platforms)
04. தரவுகள் (Datas)
05. சேவைகள் (Services)
எனவே, எமது வாழ்க்கையில் அன்றாடம் செய்யக்கூடிய பல செயற்பாடுகள் இன்று எண்ம செயற்பாடுகளாக மாறியுள்ளன. இதனால், நாம் அதிக நேரங்களை திறன் சாதனங்களுக்கு முன் கழிக்கின்றோம். பௌதீக உலகிலிருந்து நாம் எண்ம உலகுக்குள் பிரவேசிப்பதற்கான அடிப்படைகளாக இந்த திறன் கருவிகள் காணப்படுகின்றன.
எமது பல்வேறு தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் சேவைகளை வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான பணித்தளங்கள் எண்ம உலகில் உள்ளன. அவற்றுக்குள் பிரவேசித்து அவசியமான தரவுகளை வழங்குவதன் மூலம் குறித்த சேவைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.
எண்ம வாழ்க்கை (Digital Life)
எண்ம உலகுக்குள் பிரவேசித்து நாம் மேற்கொள்ளும் எண்ம செயற்பாடுகளின் தொகுப்பு தான் ‘எண்ம வாழ்க்கை’.
குறிப்பாக சொல்வதாக இருந்தால், எண்ம வாழ்க்கை என்பது எண்ம தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெய்நிகர் சூழலில் நாம் மேற்கொள்ளும் தொடரறா ஊடாட்டம் எனலாம்.
இதில் பிரதானமாக மூன்று விடயங்கள் காணப்படுகின்றன.
* எண்ம தொழில்நுட்பம் (Digital Technology)
* மெய்நிகர் சூழல் (Virtual Environment)
* தொடரறா ஊடாட்டம் (Online Interaction)
இவை, நவீன வாழ்க்கை முறையை வரையறுக்கும் முக்கிய அம்சங்களாகும். இந்த மூன்று அம்சங்களும் ஒன்றோடொன்று இணைந்தவையாக உள்ளன.
அதாவது, எண்ம தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவானது தான் மெய்நிகர் சூழல். இந்த மெய்நிகர் சூழலில் நாம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளையே தொடரறா ஊடாட்டம் என்று குறிப்பிடுகின்றோம். இதை நாம் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
எண்ம வாழ்க்கையின் பிரதான மூன்று விடயங்கள்
* எண்ம தொழில்நுட்பம் (Digital Technology)
இது எண்ம வாழ்க்கையின் அடித்தளமாக செயல்படுகிறது. எண்ம தொழில்நுட்ப செயற்பாட்டைக் கொண்ட கருவிகள், அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகளை இது குறித்து நிற்கின்றது.
சாதனங்கள், சேமிப்பகங்கள் போன்ற வன்பொருட்கள் மற்றும் செயலிகள், தளங்கள் போன்ற மென்பொருட்கள் ஆகியன இதில் அடங்கும். அதேபோல், செயற்கை நுண்ணறிவு, IoT போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் இதனுடன் சேர்க்கலாம். இன்று நாம் பல்வேறு வகைகளில் இந்த எண்ம தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். இதன் வளர்ச்சி வேகம் எதிர்காலத்தில் எல்லா துறைகளிலும் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது நிதர்சனம்.
* மெய்நிகர் சூழல் (Virtual Environment)
பயனர்களின் செயல்பாடுகளும், ஊடாட்டமும் நிகழ்கின்ற எண்ம வெளிகளையே மெய்நிகர் சூழல் என அழைக்கின்றோம். இன்று மெய்நிகர் சூழலும் விரிவு பெற்று வருகிறது. வெவ்வேறு தேவைகளுக்காக உருவான பணித்தளங்கள் இன்று மெய்நிகர் சூழலை விரிவாக்கி வருகின்றன. அவை தனித்தனி உலகங்களாகவும் மாறி வருகின்றன.
உதாரணமாக, காணொளி விளையாட்டு உலகம், சமூக ஊடக உலகம் என தனித்தனி உலகங்களாக பார்க்கக் கூடிய வகையில் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படியான மெய்நிகர் உலகங்களின் சேர்க்கையை நாம் மீ வெளி (Metaverse) என அழைக்கின்றோம்.
இன்று, பௌதீக உலகை விட பன்மடங்கு முன்னேறிய ஒரு கற்பனை உலகம் உருவாகி வருகிறது. ஒரு சில கருவிகளின் துணையோடு அந்த உலகுக்குள் நுழைந்து பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடக்கத்தில் இது முப்பரிமாண வீடியோ விளையாட்டுக்கள் என்ற நிலையிலேயே இருந்தது. ஆனால், இன்று இது இன்னொரு வாழ்க்கையாக பார்க்கக் கூடிய அளவுக்கு வளர்ந்து வருகிறது. அதாவது, மெய்நிகர் (Virtual Reality) வாழ்க்கையை இரண்டாவது வாழ்க்கையாக (Second Life) பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
*தொடரறா ஊடாட்டம் (Online Interaction)
மெய்நிகர் சூழலில் பயனர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புபடுகிறார்கள் என்பதையும் எண்ம அமைப்புகளில் பயனர்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதையும் இது குறித்து நிற்கின்றது.
அழைப்புகள், குறுஞ்செய்தி பரிமாற்றம் போன்ற தொடர்பாடல் (Communication) நடவடிக்கைகள் தொடங்கி ஆவணங்களை பகிர்தல், இணைந்து பணியாற்றுதல் போன்ற கூட்டு நடவடிக்கைகள் (Collaboration) வரையிலும் உள்ள சகல செயல்பாடுகளும் இதில் அடங்கும். அதேபோல், மின் வணிகம், எண்ம கொடுப்பனவுகள் போன்ற பரிவர்த்தனைகள் (Transaction) சார்ந்தவையும் இதில் உள்ளடங்கும்.
அதாவது, மெய்நிகர் சூழலில் பயனர்கள் மேற்கொள்கின்ற சகல நடவடிக்கைகளும், செயல்பாடுகளுமே தொடரறா ஊடாட்டம் எனக் கூறலாம்.
எனவே, இந்த மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் எண்ம வாழ்க்கை (Digital Life) என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, பௌதீக உலகிலிருந்து திறன் கருவிகளைப் (Smart Devices) பயன்படுத்தி இணைய வசதி (Internet) மூலம் எண்ம உலகுக்குள் பிரவேசிக்கும் நபர்களை பயனர்கள் (Users) என்று அழைக்கின்றோம்.
சுருக்கம்
ஒரு பயனர் எண்ம தொழில்நுட்பத்தின் வாயிலாக மெய்நிகர் வெளியில் தொடரறா ஊடாட்டத்தை மேற்கொள்வதன் மூலம் பல்வேறு சேவைகளைப் (Services) பெற்றுக் கொள்கின்றார். அந்த சேவைகள் பலதரப்பட்டவைகளாக காணப்படுகின்றன. அவை பௌதீக வாழ்க்கையின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடியவையாக இருக்கின்றன. அதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இங்கு அவருக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) அவசியமாகின்றது.
ஆக, ஒரு நபர் பௌதீக உலகில் வாழ்கின்ற போது மேற்கொள்கின்ற முக்கிய நடவடிக்கைகளை எண்ம உலகில் மேற்கொள்கிறார் எனில் அது அவரது ‘எண்ம வாழ்க்கையாக’ பார்க்கப்படுகிறது.
இன்று எமது பௌதீக வாழ்க்கையின் பிரதான அம்சங்கள் (Key Life Aspects) பல எண்ம உலகிற்குள் வந்துவிட்டன. எனவே, ஒவ்வொரு பயனரும் தமது எண்ம வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பது பற்றி சிந்திப்பது அவசியமாகும்.
இஸ்பஹான் சாப்தீன் ஊடகப் பயிற்றுவிப்பாளர், தயாரிப்பாளர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)