நூலின் பெயர்: இஸ்லாமிய ஷரிஆ யதார்த்தமும் பிரயோகமும்
நூலாசிரியர்: உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர்
வெளியீடு: மிஷ்காத் ஆய்வு நிறுவனம் கொழும்பு
மிகவும் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள இஸ்லாமியப் பிரயோகங்களில் ‘ஷரீஆ’வும் ஒன்றாகும். ஷரீஆவின் உள்ளார்ந்த தத்துவக் கோட்பாடானது மிகவும் மேலோட்டமான புரிதலுடன் வெறுமனே குற்றவியல் சட்டத்துடன் மட்டும் தொடர்புடைய ஒன்றாகக் குறுக்கப்பட்டு நோக்கப்படுகின்றமை வருத்தத்திற்குரியதாகும். இந்நிலையில், ‘ஷரீஆ’ என்ற சொல்லாடலின் அர்த்தப்பாடு, அதன் தாற்பரியம், அதன் நோக்கம் முதலான அம்சங்கள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஷரீஆ நடைமுறையில் கொண்டு வரப்படுவதற்கு இஸ்லாமிய ஆட்சி அவசியமானது என்ற ஒரு கருத்துநிலை மிகப் பரவலாக உள்ளது. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஷரீஆ என்ற பிரயோகத்தின் மீதான ஒவ்வாமை உணர்வுக்கும் முஸ்லிம் சமூகம் மீதான அச்சத்துடன் கூடிய சந்தேக உணர்வுக்கும் அடித்தளமாக அமைவது மேற்கூறப்பட்ட கருத்துநிலையே ஆகும்.
இப்பின்னணியில், குறிப்பாக இஸ்லாமிய உலகுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் முஸ்லிம் சமூகங்களின், ‘ஷரீஆ வாழ்வு’ என்பது என்ன என்ற தெளிவு மிகவும் அவசியமானதாகும். இக்கருத்தைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மாறாக, ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பாதிப்பினால் ஷரீஆ பற்றிய கருத்து வலிந்து பொருள்கோடல் செய்யப்பட்டு ஆக்கப்பட்ட ஒரு நூலாக இதனைக் கருதிக் கொள்ளல் தவறானது எனக் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன். ஏனெனில், பல நாடுகளிலும் சிறுபான்மையினராகப் பரந்து வாழும் முஸ்லிம் சமூகங்கள் பற்றிப் பல ஆண்டுகளாக எழுந்து வந்த சில கேள்விகளின் விளைவே இந்நூலாகும். அக்கேள்விகளை இங்கே தருவது இவ்விடயத்தை நன்கு தெளிவாக்கும் எனக் கருதுகிறேன்.
உலகம் முழுக்கப் பரந்து பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் ஓர் இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்வதில்லை என்பதால், அவர்களால் ஷரீஆவை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் இறைவனின் பார்வையில் இரண்டாந்தர அடியார்களாகக் கருதப்படுவார்களா?
அவ்வாறு, ஷரீஆவை அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாத போது, ஓர் இஸ்லாமிய அரசின் கீழ் அவர்கள் வாழாதபோது. அவர்கள் ‘ஹிஜ்ரத் – புலம்பெயர்தல் வேண்டும் அல்லது இஸ்லாமிய நாடொன்றை உருவாக்குவதை மைய வேலைத்திட்டமாகக் கொள்ள வேண்டும் என்பன எந்தவகையிலும் சாத்தியமற்ற வெறும் கற்பனாவாதக் கருத்துக்கள் என்பதில் சந்தேகமில்லை.
அந்நிலையில், அவை இறைகட்டளையாக இருப்பது சாத்தியமா? இத்தகைய கட்டளைகளை நிறைவேற்றினால்தான் சிறுபான்மை முஸ்லிம்கள் சுவர்க்கத்தை அடையப் பெறுவார்கள் என்று கூறுவது பொருத்தம்தானா?
இந்நூல் இப்பின்னணியிலிருந்து ஆக்கப்பட்டதாகும். சிறுபான்மை முஸ்லிம்களது வாழ்வு ஒரு முழுமையான இஸ்லாமிய வாழ்வு என இந்நூல் கூறுகிறது. ஓர் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்தால் மட்டுமே அது இஸ்லாமிய வாழ்வாக முடியும் என்ற கருத்தை இந்நூல் ஏற்றுக்கொள்ளவில்லை.
இக்கருத்தை இந்நூல் இரண்டு பகுதிகளாகப் பிரித்து விளக்குகிறது.
முதலாம் பகுதி ஷரீஆ பற்றி ஓரளவு விரிவாக விளக்குகிறது. இரண்டாம் பகுதி அவ்விளக்கத்தின் பின்னணியில் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு ஓர் இஸ்லாமிய வாழ்வைக் கொண்டு செல்வது சாத்தியமாகிறது என விளக்குகிறது.
இவ்விரு பகுதிகளின் விளக்கங்கள் ஊடாக ஷரீஆ பற்றி இந்நூல் கீழ்வரும் உண்மைகளை முன்வைக்கிறது.
ஷரீஆ என்ற பிரயோகம் சட்டம் என்ற கருத்தைக் கொடுப்பதோடு மார்க்கம் – அதாவது முழு இஸ்லாமிய வழிகாட்டல்கள் என்ற கருத்தையும் கொடுக்கிறது. இவ்வகையில் ஷரீஆவை சட்டம் என்று மட்டும் நோக்காது நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள், ஒழுக்கம் என்ற பகுதிகளையும் அது அடக்கிறது எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஷரீஆவின் அடிப்படை மூலாதாரமான அல்குர்ஆன் ஒரு சட்ட நூலல்ல. மிகக் குறைவாகவே அதில் சட்ட வசனங்கள் காணப்படுகின்றன.
இறைவன் இப்பிரபஞ்சத்தையும் மனிதனையும் ஏன் படைத்தான் என்ற இறைவனின் படைப்புத் திட்டத்தை விளக்குவதை மையக் கருத்தாக அது கொண்டுள்ளது. இரண்டாவது, அது மனிதனை ஆன்மீக ரீதியாகப் பயிற்றுவித்து நல்லொழுக்கங்கள் கொண்ட உயர்ந்த மனிதனை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இப்பின்னணியில் அல்குர்ஆன் சட்ட விளக்கங்களைக் கூட ஒழுக்க வடிவில் முன்வைக்கிறது.
ஷரீஆ என்பதற்கு சட்டம் என்ற கருத்தைக் கொடுத்து நோக்கும் போது அதனை இரு வகையில் அவதானிக்க முடிகிறது.