நூ ற்று முப்பத்து மூன்று வருடங்கள் நீடித்த பிரிட்டனின் ஆட்சியிலிருந்து சுதந்திரமடைவதற்காக, பல சந்தர்ப்பங்களில் கிளர்ச்சிகள், போராட்டங்கள் உட்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதியே காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாட்டினால் சுதந்திரம் பெற முடிந்தது.
1948ம் ஆண்டு, தற்போதைய சுதந்திர சதுக்கத்தில் கட்டப்பட்டுள்ள வளாகத்தில் சுதந்திர தின விழாவுக்காக தற்காலிகமாக கட்டப்பட்ட பந்தலிலேயே நாட்டின் முதலாவது தேசிய சுதந்திர தின விழா இடம்பெற்றது. அன்று அந்த முதலாவது சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்ட போது அந்த இடத்தில் நிரந்தர கட்டடங்கள் எதுவும் கட்டப்பட்டிருக்கவில்லை என்ற போதிலும், அந்த நேரத்தில் அவ்விடத்தில் இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களை தற்காலிகமாக நிறுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு விமான தங்குமிடம் அமைக்கப்பட்டிருந்தது. ‘டொரிங்டன் சதுக்கம்’ எனப்படும் அந்த விமான தரிப்பிடத்தை அவசரமாக முனையத்தில் அவசர அவசரமாக கட்டப்பட்ட தற்காலிக கட்டடத்தில் முதல் சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து பெறப்பட்ட சுதந்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு பெருமையுடன் நினைவுபடுத்துவதற்கு கொழும்பு 7, டொரிங்டன் சதுக்க வளாகத்தில் சுதந்திர நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த மஹாமான்யா டி.எஸ். சேனநாயக்கவின் நோக்கமாக இருந்தது. இதனை நிர்மாணிப்பதற்கான பொறுப்பு அப்போதைய போக்குவரத்து மற்றும் பொதுத் தொழில்துறை அமைச்சராக இருந்த ஜோன் கொத்தலாவலவிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, இந்தப் பொறுப்பை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட கொத்தலாவல, இந்தக் கட்டடத்தை கட்டடக் கலையுடன் நிர்மாணிக்கும் பொறுப்பை அதற்கு மிகவும் தகுதியானவரான அரசாங்கத்தின் தலைமைக் கட்டடக் கலைஞர் டி.எம்.வயன் ஜோன்ஸிடம் ஒப்படைத்திருந்தார். அவருக்கு உதவுவதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டதோடு, ஜோன்ஸ் மற்றும் அந்தக் குழுவினால் திட்டமிடப்பட்ட மத்திய மலையக ஸ்ரீ விபூதியை மீண்டும் நினைவு கூறும் வகையில் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அரச மண்டபத்தின் கலைக் கூறுகளின் வடிவமைப்புத் திட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கட்டடக்கலை திட்டத்திற்கு பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் அங்கீகாரம் கிடைத்தது.
அதன் பிரகாரம், தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் நினைவு கூர்வதற்கு எதிர்கால சந்ததியினருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து டொரிங்டன் சதுக்க வளாகத்தில் தற்போது சுதந்திர ஞாபகார்த்த கட்டடம் என அழைக்கப்படும் சுதந்திர நினைவிடத்தின் ஆரம்பமாக நிலத்தை தோண்டி அடிக்கல் நாட்டும் நிகழ்வுடன் இணைந்ததாக நாட்டின் முதலாவது சுதந்திர தின கொண்டாட்டமும் இடம்பெற்றது. இவ்வாறு அதற்கான அடிக்கல் நடப்பட்டபோது அதனுடன் சேர்த்துப் பொக்கிஷமாகப் பாதுகாக்க மற்றொரு சிறப்புச் செய்தியும் தயாரிக்கப்பட்டது. பல வருட துன்பங்கள் மற்றும் கஷ்டங்களுக்குப் பிறகு அடந்த சுதந்திரத்தை மேலும் எடுத்துக்காட்டும் வகையில் இந்தச் செய்திகள் சிங்களம், தமிழ், அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். அதன்பிரகாரம் சுதந்திரத்திற்காக மக்களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அந்த செய்திகளை பருத்தித்துறை, மட்டக்களப்பு, தெவுந்தர மற்றும் கொழும்பிலிருந்து சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு, அந்த நேரத்தில் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்ற நான்கு விளையாட்டு வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
1948 பெப்ரவரி 4 ஆம் திகதி, மாலை சுமார் 4.10 மணியளவில், நான்கு வீரர்களும் அந்த வாழ்த்துச் செய்திகளுடன் அங்கு கூடியிருந்த மக்களின் கைதட்டல்களுக்கு மத்தியில், சுதந்திர தின விழாவிற்காக தற்காலிகமாக கட்டப்பட்ட சுதந்திர சதுக்க வளாகத்தை வந்தடைந்தனர். 1948ம் ஆண்டு நாட்டிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைக் கொண்டு வந்த டங்கன் வைட், இவ்வாறு வந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. நாட்டின் நாலாபுறங்களிலிருந்து பல நாட்களைக் கடந்து வந்திருந்த இந்த வீரர்கள், அங்கு கூடியிருந்த அனைவரும் கேட்கும் வகையில் செய்தியை உரக்க வாசித்து, பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவிடம் வழங்கினர்.
“நல் வணக்கம்… நாங்கள் இலங்கையின் நான்கு மூலைகளிலிருந்தும் இங்கு வந்துள்ளோம், வடக்கே பொயின்ட் பேதுரு எனப்படும் பருத்தித்துறை கிழக்கே மட்டக்களப்பு, தெற்கே தேவுந்தரா, மேற்கே கொழும்பு ஆகிய நாலாபுறங்களிலிருந்தும் நாம் இங்கு வந்திருக்கின்றோம். எமது கால்கள் நாட்டின் அனைத்து மாகாணங்கள், அவற்றின் நகரங்களைத் தொட்டிருக்கின்றன. நாங்கள் அனுராதபுரத்தைக் கடந்து செல்லும்போது, நமது பண்டைய நாகரிகத்தின் சிறப்பை நினைவு கூர்ந்தோம். கல் ஓயா போன்ற ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் எங்கள் கவனத்தைச் செலுத்தியபோது, எங்கள் எதிர்கால செழிப்பின் பிரதிலிப்பு எங்கள் கண்களுக்கு முன்பாகத் தோன்றியது. இந்த நாட்டில் உள்ள அனைத்து இனங்களிலிருந்தும், வர்க்கங்களிலிருந்தும் வந்து, காடுகள், கிராமங்கள் மற்றும் மலைகள் வழியாக இரவும் பகலும் பயணித்து உங்களைத் தேடி வந்த நாங்கள், பொதுவான வாழ்க்கையில், தேசத்தின் முன்னோடியான உங்களுக்கு எங்கள் சுய தியாகத்தையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறோம்.
“நாம் மீண்டும் ஒரு சுதந்திர தேசமானோம்.” எங்கள் இதயங்களில் வைத்திருக்கும் அபிலாஷைகளுக்கு ஏற்ப இந்த நாட்டை மீண்டும் கட்டயெழுப்ப இந்தச் சுதந்திரத்தை நாங்கள் பெற்றுள்ளோம். நாம் தேர்ந்தெடுத்த தலைவரான தேசப்பிதாவிடம், நமது தாய்நாட்டை மறுசீரமைக்க மிகுந்த துணிச்சலுடனும், மிகுந்த மன உறுதியுடனும் இணைந்து பணியாற்றுவோம் என்ற வாக்குறுதியை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். கடந்த காலத்தில் நாம் அனுபவித்த துன்பங்களை ஒழிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். “மகிழ்ச்சியடைவோம், வெற்றி கொள்வோம்” என்ற பழைய முழக்கத்தையும் நாமும் உச்சரிப்போம். உறுதி செய்வோம்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
பிரதமருக்கு முன்பாக வாசிக்கப்பட்ட செய்திகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு ஒரு அழகான பெட்டியில் வைக்கப்பட்டன. கூடியிருந்த மக்களின் ஆரவாரங்களுடனும், மேளங்களின் சத்தத்துடனும், சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் தேசமான்ய டி.எஸ். சேனநாயக்க சுதந்திர நினைவு கட்டடக் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை நாட்டுவதற்கான குழியை வெட்டினார். பின்னர், கிடைத்த தேசிய சுதந்திரத்திற்கு தேசத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்து, நாட்டின் நான்கு மூலைகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட செய்திகள் உட்பட பொக்கிஷங்களை வைப்பு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஜோன் கொத்தலாவலவும் கலந்து கொண்டிருந்தார். பின்னர், இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சியின் 133 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 133 புறாக்கள் திறந்த வெளியில் விடப்பட்டன. அதன் பிறகு, பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா தனது சுதந்திர தின உரையை நாட்டு மக்களுக்கு ஆற்றினார்.
அதனடிப்படையில் அன்று 1948ம் ஆண்டு பெப்ரவரி 04ம் திகதி பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து எமது நாடு பெற்றுக் கொண்ட அந்த சுதந்திரத்தை நினைவுகூர்ந்தும், அந்த சுதந்திரம் தொடர்பில் பெருமையையும் ஏற்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சதுக்க கட்டடம் இன்று எமது நாட்டுக்குச் சொந்தமான பாரம்பரியமாக ஆகியுள்ளது. 1948ம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அது 1957ம் ஆண்டு பெப்ரவரி 04ம் திகதியே அப்போதைய பிரதமர் எஸ். டப்ளிவ். ஆர். டி. பண்டாரநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது இந்நாட்டிற்கு வருகை தந்திருந்த அப்போதைய சீனப் பிரதமர் சௌவ் என்லாயும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது முக்கிய அம்சமாகும். மஹாமான்ய டி.எஸ். சேனநாயக்காவின் மரணத்திற்குப் பிறகு, அவரது சிலையும் இந்த இடத்தில் நிறுவப்பட்டது. இந்தச் சிலையை சிற்பி திஸ்ஸ ரணசிங்க என்பவர் உருவாக்கியிருந்தார். அதேபோன்று, சுதந்திர மண்டபத்தில் நான்கு சிங்க சிலைகள் மற்றும் சில அழகிய கட்டடக்கலை அம்சங்களும் நிறுவப்பட்டன.
வரலாற்று சிறப்புமிக்க கண்டி அரச விழா மண்டபத்தை விடவும் பெரிய இந்த சுதந்திர ஞாபகார்த்த நினைவு கட்டடம் இலங்கையர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறலாம். சதுர வடிவிலான கூரையும், உள்ளூர் வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களும் இதற்குச் சான்று பகர்கின்றன.
இந்த சுதந்திர ஞாபகார்த்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள பெரும்பாலான காணிகள் அப்போது கொழும்பு பந்தயக் கழகத்திற்கு சொந்தமாக இருந்தது. எனவே, இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணியை ஒதுக்கிக் கொள்வதற்காக அரசாங்கம் ஐந்து இலட்சம் ரூபாவை பந்தயக் கழகத்திற்கு வழங்கியிருந்தது. சுதந்திர நினைவு கட்டடத்தின் வளாகத்திற்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானமும் கட்டப்பட்டது. 1955ம் ஆண்டு இதனை நிர்மாணிப்பதற்கு தலைமை வகித்து அப்போது இந்நாட்டின் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவலவாகும். சுதந்திர ஞாபகார்த்த நினைவுக் கட்டடத்திலிருந்து சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் விழாக்களைக் காணும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்டு வழி பாதையுடன் கூடிய இந்த விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்கு அந்த நேரத்தில் பத்து இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.1948ம் ஆண்டு பெறப்பட்ட தேசிய சுதந்திரத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து நாட்டின் நாலாபுரத்திலிருந்தும் கொண்டு வரப்பட்ட செய்திகளுடன் தேசத்திற்கு பரிசளிக்கப்பட்ட இந்த சுதந்திர நினைவு கட்டடத்தின் கீழ் தளத்தில் 2008ம் ஆண்டு சுதந்திர நினைவு அருங்காட்சியகமும் நிறுவப்பட்டதோடு, பொது நிர்வாக அமைச்சு, தேசிய அருங்காட்சியகத் திணைக்களம் மற்றும் கலாசாரத் திணைக்களம் ஆகியவை இணைந்து இதனை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எம். எஸ். முஸப்பிர்