Home » மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்து

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்து

by Damith Pushpika
February 2, 2025 6:14 am 0 comment
  • பொலிஸ் திணைக்கள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள்
  • பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் புதிய தொழிற்சாலைகள்
  • யாழ். மக்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகை முழுமையாக விடுவிப்பு
  • கிராமிய வீதி அபிவிருத்திக்கு 5 பில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீடு
  • வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகம்
  • யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்று காணிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும் அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கடற்றொழில், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு, போக்குவரத்து பிரச்சினைகள், ஆளணி குறைபாடு, காணி விடுவிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. யாழ். மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு முன்வைத்தனர். அதில் அநேக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனுக்குடன் தீர்வு வழங்கியதோடு அவை தொடர்பில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரைகளை வழங்கினார்.

பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம் கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.

இதில், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களை வடக்கில் முதலிட அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் மீது விசேட அக்கறை செலுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

தீவுப் பகுதிகளில் போக்குவரத்து சீராக இல்லை எனவும் கிராமப் புறங்களில் சிறுவீதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் இங்கு தெரிவித்தார். கிராமப் புறங்களில் கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் தீவுகளுக்கான போக்குவரத்து குறைபாடுகள் குறித்தும் படகு சேவைகள் ஆரம்பிப்பது பற்றியும் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்த வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இணைந்து செயற்படும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வட. மாகாணத்திற்கான புகையிரத சேவைகளை அதிகப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய புதிய சுற்றுலாத் தலங்கள் இனங்காணப்பட்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

கடற்றொழில் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டதோடு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வுகாண இராஜதந்திர ரீதியில் அதிகபட்சமாக தலையீடு செய்வதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். மீன் பிடித்துறைமுகம், மீனவர்களுக்கான வீட்டுத்திட்டம், தீவுகளுக்கான படகுச் சேவைகளில் உள்ள குறைபாடுகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நீர்ப் பிரச்சினை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டிருந்ததோடு நீர்விநியோக திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி முன்னேடுப்பது குறித்து வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை முன்வைத்தார். நாட்டிலேயே மிகக் குறைந்த அளவு குழாய் நீரை பயன்படுத்தும் மாகாணமாக வடமாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்பதுடன், இம்முறை வரவு செலவு திட்டத்தில் புதிய நீர் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஜனாதிபதி, வடக்கின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் உட்பட முழு அரச சேவையையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகார தரப்பும் அரச பொறிமுறையும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதோடு தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரியில் காணப்படும் குறைபாடு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டார். சீரீ ஸ்கேனிங் இயந்திரம், அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற குறைபாடுகள் தொடர்பில் அவர் உரையாற்றியதோடு அவை அவசர தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் புற்றுநோயாளரை மகரகமையில் இருந்து இங்கு அனுப்புவதில் ஏற்படும் சில சிக்கல்கள் குறித்தும் சிறிய ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி கருத்து முன்வைத்தார். வைத்தியர் இடமாற்றங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எஸ்.தரன் எம்.பி மற்றும் வைத்தியர் சண்முகநாதன் பவானந்தராஜா ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கிராமிய வீதிகளை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதோடு 180 கிலோ மீட்டரை விட அதிக வீதிகளை திருத்த வேண்டியுள்ளதாகவும், தீவுகளில் உள்ள வீதிகளே அதிகம் சேதமடைந்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். வீதி அபிவிருத்தி தொடர்பில் வடமாகாண எம்.பிகள் சிலரும் கருத்து வெளியிட்டனர்.

வடக்கிலுள்ள கிராமிய வீதிகளை புனரமைக்க, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அதனை முழுமையாக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ். நகர மண்டபத்தின் எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது குறித்தும் ஆராயப்பட்டது. இதற்காக இந்த வருடம் 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, கட்டடத்தை பயன்படுத்தக் கூடிய வகையில் அதனை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, யாழ். மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரச நியமனம் வழங்குகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதேசவாசி ஒருவர் கோரினார். தொழில்வாய்ப்பு வழங்குகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட ஒதுக்கீடொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ். மாவட்ட சுகாதாரம், போக்குவரத்து, நீரியல் வளத்துறை, போக்குவரத்து துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி சாதகமான தீர்வுகளை கூறினார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், வைத்தியர் சண்முகநாதன் பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், யாழ்.மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன் ஆகியோருடன் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் வட பிராந்தியத்திற்குப் பொறுப்பான முப்படை அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division