தமிழகத்தில் அரசியல் நோக்கத்துக்காக தந்தை பெரியாரைப் பயன்படுத்தும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொதுவெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்ட்களும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
‘பெரியார் குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களைக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பெரியார் ஆதரவாளர்கள் சமீபத்தில் சீமான் வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.
பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக சீமானுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இனவெறியை, இனமோதலைத் தூண்டி பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீதான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரியார் குறித்து சர்ச்சையாகவே பேசி வருகிறார் சீமான். ஈரோடு இடைத்தேர்தலிலும் பெரியார் மீதான விமர்சனத்தையே அவர் பிரதானமாக முன்னிறுத்தி, பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
“பெரியாரை நீக்கிவிட்டு தமிழகத்தில் நமக்கு அரசியல் கிடையாது. இப்போதும் நாம் அரசியல் செய்வதற்கு பெரியார்தான் தேவைப்படுகிறார். அப்படியென்றால் அவர் உண்மையில் பெரியார்தான்” என்று திராவிடக் கட்சிகள் கூறுகின்றன.
“சீமானின் பேச்சையெல்லாம் ஆழமாகப் பார்க்க வேண்டியதில்லை. பெரியார் ஒரு தத்துவம். அவருடைய வாழ்க்கையில் நடந்த சில பகுதிகளை மட்டும் திரித்துப் பேசுவது கேவலமான விஷயம். இந்த உக்தி தமிழகத்தில் எடுபடாது. பா.ஜ.கவில் இருக்கும் சில தலைவர்கள் வேண்டுமானால் ஆதரிக்கலாம். ஆனால் அந்தக் கட்சியிலிருக்கும் பலருக்கு உடன்பாடு இல்லை” என்று பெரியார் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
“திரும்பத் திரும்பக் கூறி வருகிறேன். பெரியார் மண், பெரியார் மண் என்று யாரும் பேச வேண்டாம். எங்களுக்கு பெரியாரே மண்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலிறுத்திச் சொல்கின்றார்.
பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
“பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ்மொழி முட்டாள்களின் மொழி, தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும் என்று அவர் கூறியவர். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழர்கள் தீக்குளித்த போது, அவர்களை கொலைகாரர்களாகப் பார்த்தவர் பெரியார்தான். ‘ஹிந்திக்கு எதிராகப் போராடுகின்ற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு கொளுத்துங்க, வெட்டுங்க’ என்று சொன்னவர்தான் பெரியார். இது சேர, சோழ, பாண்டியர் மண், புலித்தேவர் மண், வேலுநாச்சியார் மண், முத்துராமலிங்க தேவர் மண், காமராஜர் மண். இது என் மண், தமிழ் மண், பெரியார் மண் அல்ல” என்பது சீமானின் வாதம்.
இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை கண்டனங்கள் தீவிரமடைகின்றன. அதேவேளை சீமானுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அதனால் அவர் மீது பல பொலிஸ் நிலையங்களில் ஏராளமான புகார்களும், நீதிமன்றங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“பெரியார் இல்லாமல் தமிழகத்தில் சமூக வளர்ச்சி கிடையாது. இருமொழிக் கொள்கை தமிழகத்தில் இருப்பதற்கு பெரியார்தான் காரணம். பெரியார் என்கின்ற மனிதரை இழிவுபடுத்துவது யாராக இருந்தாலும், அவர்கள் தற்குறிகள்தான். திராவிட இயக்கத்தின் அடித்தளம் பெரியார் கொடுத்த கொள்கைதான். தமிழகத்தில் பெரியார் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. கருத்து மோதல் இருக்கத்தான் செய்யும். அதனால்தான் பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து வந்தார். அது வன்மமாக மாறக் கூடாது” என்று பொதுவான கருத்தை முன்வைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மறுபுறத்தில் பெரியார் குறித்து, ‘விமர்சனம்’ என்பதன் பேரில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என திராவிட அமைப்புகள் கொதிப்படைந்திருக்கின்றன.
‘சீமானின் பேச்சுக்கு ஆதாரம் எங்கே?’ என்ற கேள்வி வலுவடைந்திருக்கின்றது. ‘ஆதாரம் இருக்கிறது, ஆனால் இல்லை’ என மழுப்பி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
சீமான் அண்மையில் கருத்துத் தெரிவிக்ைக யில் “பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? பெண்கள் சம்பந்தமாக பெரியார் மிக மோசமான வார்த்தைகள் கூறியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால் பெரியார் அவ்வாறு பேசவில்லை” என அடித்துச் சொல்கிறார்கள் பெரியாரியவாதிகள்.
“பெரியாரைக் கொச்சைப்படுத்தி, திராவிட அரசியலை நீர்த்துப்போகச் செய்வதற்கான சதித்திட்டங்களைத் தொடங்கிவிட்டது ஆரியம். அதன் ஒரு பகுதியாக, சீமானை இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ்” என்கின்ற விமர்சனத்தை தி.மு.க கூட்டணியினர் முன்வைக்கின்றனர்.
‘பெரியாரை விமர்சிப்பதும் பாராட்டுவதும் அவரவர் உரிமை, ஆனால் பெரியார் சொன்னதாக சீமான் சொல்வதற்கு ஆதாரம் எங்கே?’ என்பதுதான் அவர் முன்பிருக்கும் கேள்வி.
எஸ்.சாரங்கன்